Published:Updated:

`தேர்தலுக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன!’ - தென்மண்டல ஐ.ஜி முருகன்

காவல்துறை ஐ.ஜி முருகன் பேட்டி
காவல்துறை ஐ.ஜி முருகன் பேட்டி

``எந்தத் தேர்தலையும்போல இந்தத் தேர்தலிலும் அச்சுறுத்தல் இல்லாமல் பாதுகாப்பாக மக்கள் வாக்களிக்கலாம்’’ என்றார் காவல்துறை தென்மண்டல ஐ.ஜி முருகன்.

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் பகுதியில் காவலர் விழிப்புணர்வுத் திட்டம் சார்பில் கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரி அறிமுகக் கூட்டம் நடந்தது. இதற்கு கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் தலைமைவகித்தார். காவல்துறை தென்மண்டல ஐ.ஜி முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதில் பேசிய ஐ.ஜி முருகன், ``சாதாரண நாள்களிலும் போலீஸும் பொதுமக்களும் ஒன்றாக இருந்தால் சின்னச் சின்ன விஷயங்களை தவிர்க்கலாம். சின்ன விஷயங்கள்தான் நாளை பெரிய விஷயம் ஆகும். எனவே, அதைத் தவிர்க்கலாம். எங்களை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதற்காகத்தான் நாங்கள் இது போன்ற கூட்டங்களை நடத்துகிறோம்" என்றார்.

பின்னர் ஐ.ஜி முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``காவல்துறை சார்பாக ஒவ்வொரு தாய் கிராமத்திலும் `காவலர் விழிப்புணர்வு திட்டம்' ஒன்றை ஆரம்பித்திருக்கிறோம். அதன்படி காவலர்கள் கிராமங்களில் போய், அங்கிருக்கும் சின்னச் சின்ன பிரச்னைகள், குறைபாடுகள், சச்சரவுகளை அங்கேயே சரிசெய்வார்கள்.

ஐ.ஜி முருகன்
ஐ.ஜி முருகன்

ஒவ்வொரு காவல் நிலையத்திலுமுள்ள தாய் கிராமங்கள், அருகேயுள்ள குக்கிராமங்களை இவர்கள் கவனிப்பார்கள். இவர்கள் வாட்ஸ்அப் குரூப் வைத்திருக்கிறார்கள். அந்தந்த ஊர்களிலுள்ள குறைகள், வெளியே சொல்ல முடியாத பிரச்னைகள், பெண்களுக்கான குறைகளைத் தெரிவிப்பதற்காக காவல் நிலையம் வரை செல்ல வாய்ப்பு இருக்காது. இந்தத் திட்டத்தின்படி அவர்கள் காவலர்களிடம் நேரிலோ, வாட்ஸ்அப்பிலோ தகவல் தெரிவிக்கலாம். இந்தத் திட்டத்தை ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். கன்னியாகுமரி மாவட்டத்திலும் எல்லா கிராமங்களிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். இன்று இந்தக் கிராமத்தில் கிராம மக்களுடன் கலந்துரையாடல் செய்து இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைக்க வந்திருக்கிறேன்.

இதற்கு முன் கஞ்சா யார் விக்கிறாங்களோ, அவங்க மேல மட்டும் வழக்கு பதிவு செஞ்சாங்க. இப்போது அப்படி அல்ல... நோய் நாடி நோய் முதல் நாடியைக் கண்டுபிடிக்கிறோம். எங்கிருந்து கஞ்சா வருகிறது... ஆந்திராவில் இருந்து வருகிறதா... இல்லை வேறு பகுதிகளிலிருந்து வருகிறதா என்பது பற்றிய தகவல்களை ஸ்பெஷல் டீம் போட்டு பிடிக்கிறோம். கூடிய விரைவில் இந்த மாவட்டம், கஞ்சா இல்லாத மாவட்டமாக மாறும். மணல் கடத்தல் முழுமையாக நிறுத்தப்பட்டிருக்கிறது. சின்னதா எங்கேயாவது தெரியாமல் செய்வார்கள். அது போன்ற சம்பவங்கள் குறித்து தகவல் கொடுத்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரி அறிமுகக் கூட்டம்
கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரி அறிமுகக் கூட்டம்

வரும் தேர்தலுக்காகக் காவல்துறை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. தேர்தல் கமிஷனும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறாங்க. எந்தத் தேர்தலையும்போல இந்தத் தேர்தலிலும் அச்சுறுத்தல் இல்லாமல் பாதுகாப்பாக மக்கள் வாக்களிக்கலாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு