Election bannerElection banner
Published:Updated:

சேற்றுக்குள் உயிருக்குப் போராடிய பெண்... துணிந்து காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்... ஒரு நெகிழ்ச்சி கதை!

இன்ஸ்பெக்டர் புகழேந்தி
இன்ஸ்பெக்டர் புகழேந்தி

குற்றவாளிகளைத் தேடிப்போன இடத்தில் உயிருக்குப் போராடிய பெண்ணை காப்பாற்றிய சம்பவம் குறித்துக் கேட்டதும், அந்தத் தருணத்துக்கே உரிய சிலிர்ப்பு குறையாமல் பேசுகிறார் சென்னை சைதாப்பேட்டை (சட்டம் - ஒழுங்கு) இன்ஸ்பெக்டர் புகழேந்தி.

``நாங்க பார்க்கும்போது அந்த அம்மா நெஞ்சளவு வரை சேற்றுக்குள் மூழ்கிட்டாங்க. காப்பாத்துங்கன்னுகூட அவங்களால கத்த முடியலை. கையை மட்டும் ஆட்டிக்கிட்டிருந்தாங்க. நான் இல்ல, அந்த இடத்துல யார் இருந்தாலும் அவங்களைக் காப்பாற்றியிருப்பாங்க. ஆனா, ஆளரவமற்ற அந்தப் பகுதியில சில அக்யூஸ்ட்டுகளைத் தேடிப்போன நாங்கதான் அந்த அம்மாவைக் காப்பாத்தணும்னு இருந்துருக்கு. இது சாதாரண விஷயம்தான். ஆனா, ஒரு உசுர காப்பாத்திட்டோம்ங்கிற உணர்வு பெரிய சந்தோஷத்தைக் கொடுக்குது" - குற்றவாளிகளைத் தேடிப்போன இடத்தில் உயிருக்குப் போராடிய பெண்ணை காப்பாற்றிய சம்பவம் குறித்துக் கேட்டதும், அந்தத் தருணத்துக்கே உரிய சிலிர்ப்பு குறையாமல் பேசுகிறார் சென்னை சைதாப்பேட்டை (சட்டம்- ஒழுங்கு) இன்ஸ்பெக்டர் புகழேந்தி.

சம்வத்தின்போது...
சம்வத்தின்போது...

கடந்த 14-ம் தேதி சைதாப்பேட்டை ஆடுதொட்டிப் பாலம் அருகே மயானக்கொள்ளை திருவிழா நடந்திருக்கிறது. சுமார் 10,000-க்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற அந்த நிகழ்வின் பாதுகாப்புப் பணிக்காகச் சென்றிருந்தார் சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி. எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் திருவிழா முடிந்திருக்கிறது. சற்று நேரத்துக்குள் அருகிலுள்ள ஜோதியம்மாள் நகர் பகுதியிலிருந்து ஒரு புகார் வந்திருக்கிறது. குடிபோதையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அந்தத் தகராறில் நான்கு இளைஞர்கள் சேர்ந்து, ஜீவா என்ற ஒரு இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டதாகவும் சொல்லப்பட சம்பவ இடத்துக்கு தனது டீமுடன் விரைந்துள்ளார் இன்ஸ்பெக்டர் புகழேந்தி. வெட்டுப்பட்ட ஜீவாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, நான்கு குற்றவாளிகளையும் தேடும்போதுதான் உயிருக்குப் போராடிய ஒரு பெண்ணை காப்பாற்றிய நெகிழ்வான நிகழ்வு நடந்திருக்கிறது.

என்ன நடந்தது? இஸ்பெக்டர் புகழேந்தியிடம் பேசினோம். ``அந்த நாலு பேரையும் தேடி ஒரு கட்டத்துல கிண்டி போலீஸ் லிமிட்டான நாகி ரெட்டி தோட்டத்துக்குப் போயிட்டோம். நேரம் இரவு 10.30-ஐ கடந்துடுச்சு. அந்நேரத்துல அந்தப் பகுதியில ஒரு பெண் உட்பட மூணு பேர் நின்னுட்டு இருந்தாங்க. அவங்ககிட்ட போய், நாங்க தேடிக்கிட்டிருந்த குற்றவாளிகள் பத்தி விசாரிச்சோம்.

`அப்படி யாரும் இங்க வரலையே'னு அவங்க பதற்றத்தோடு சொன்னாங்க.

இன்ஸ்பெக்டர் புகழேந்தி
இன்ஸ்பெக்டர் புகழேந்தி

`சரி, இந்நேரத்துல நீங்க எதுக்காக இங்கே உட்கார்ந்திருக்கீங்க?'னு நான் கேட்டேன். அந்த மூணு பேர்ல ஒரு இளைஞர், `என் அம்மாவைக் காணோம் சார்'னு தவிப்போட சொன்னார்.

எப்போதிலிருந்து காணோம், வீட்ல எதாவது பிரச்னையா என்ன, ஏதுனு விசாரிச்சேன். `பிரச்னையெல்லாம் ஒண்ணுமில்ல. மத்தியானம் போனவங்க. இன்னும் வீட்டுக்கு வரலை'ன்னு சொன்னாங்க.

`மயானக்கொள்ளைக்கு எதுவும் போயிருப்பாங்க பதற்றப்படாதீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க'ன்னு சொன்னேன்.

`இல்ல சார்... அவங்க அமாவாசை நேரத்துல மனநலம் பாதிக்கப்பட்ட மாதிரி ஆகிருவாங்க... அதான் பயமா இருக்கு'ன்னு சொன்னாங்க.

அப்போதான் அவங்க பதற்றத்துக்கான காரணம் புரிஞ்சது. `சரி, கொஞ்ச நேரம் பாருங்க. அதுக்குப் பிறகும் வரலைன்னா உடனடியா கிண்டி போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுங்க. வழியில நாங்க பார்த்தாலும் அனுப்பி வைக்கிறோம்'னு சொல்லி அவங்க வயசு, அடையாளங்களையெல்லாம் கேட்டுக்கிட்டு அங்கிருந்து நாங்க தேடி வந்த குற்றவாளிகளைத் தேடிக் கிளம்பினோம்.

அந்த இடத்திலிருந்து மூணு கிலோ மீட்டர் தூரம் தள்ளி அடையாறு ஆற்றங்கரையில் என் டீமோட போய்க்கிட்டிருக்கும்போது, ஆற்றுக்குள்ள ஆள் தத்தளிக்கிற மாதிரி தண்ணி அசைஞ்சுகிட்டே இருந்தது. சரியான இருட்டு. அக்யூஸ்ட் ஆத்துக்குள்ளதான் ஒளிஞ்சுருப்பாங்கன்னு அந்தப் பக்கம் டார்ச் அடிச்சு தேடினோம். ரெண்டு கைகள் மட்டும் மேல தூக்கியபடி, ஒரு அம்மா பரிதாபமா நின்னுகிட்டிருந்தாங்க.

முதல்ல தற்கொலை முயற்சி போலன்னுதான் நினைச்சோம். அந்த இடம் சேறு, சகதியுமா இருந்ததால எடுத்ததும் எங்களால உள்ளே இறங்க முடியலை. உடனே ஃபயர் சர்வீஸுக்கு கால் பண்ணி சொன்னோம். ஆனா, அந்த அம்மா கொஞ்சம் கொஞ்சமா உள்ள போய்க்கிட்டே இருந்தாங்க. தீயணைப்புத் துறை வர்ற வரைக்கும் வெய்ட் பண்ணா சரியா இருக்காது. அதே நேரம் என்னோட டீம்ல உள்ள ஆள்களை உள்ளே அனுப்புறதும் சரியான தலைமைக்கான அழகு கிடையாது. அப்புறம் அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அந்தக் குற்ற உணர்வே நம்மளைக் கொன்னுடும்னு நினைச்சதால, நாமளே இறங்கிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை

ஆனா, சேத்துக்குள்ள பாதுகாப்பில்லாம இறங்குறதும் சரியானது கிடையாது. அவங்களையும் காப்பாத்த முடியாமப் போய், நமக்கும் சிக்கலாகிரும்னு யோசிச்சுக்கிட்டே இருக்கும்போது, பக்கத்துல கிடந்த ஆஸ்பெஸ்ட்டாஸ் ஷீட்கள் என் கண்ணுல பட்டுச்சு. உடனே அதையெல்லாம் எடுத்து, சேறும் சகதியுமா குட்டைபோல தேங்கியிருந்த தண்ணிமேல போட்டு, அதுல நடந்துபோய் அந்த அம்மாவை மீட்டுக்கிட்டு வந்தேன்.

மேல வந்த பிறகுதான் அவங்க தற்கொலை பண்ணிக்கப் போகலை, மனநிலை சரியில்லாம இருந்ததால தவறி ஆத்துல இறங்கிட்டாங்கன்ற விஷயம் புரிஞ்சது. அவங்க உடல் நடுங்கிக்கிட்டே இருந்துச்சு. அப்போதான் நாகி ரெட்டி தோட்டத்துகிட்ட மூணு பேரை சந்திச்சதும், அதுல ஒருத்தர் தன்னோட அம்மாவைக் காணோம்னு தேடிக்கிட்டிருக்கோம்னு சொன்னதும் நினைவுக்கு வந்துச்சு. இவங்கதான் அவங்க அம்மாவா இருக்கணும்னு கேட்ட அடையாளங்களை வெச்சு முடிவு பண்ணோம். எங்க முடிவு தப்பாகலை. அந்தப் பையனோட அம்மாதான்.

அந்தப் பையன்கிட்ட அவங்க அம்மாவைக் கொண்டுபோய் விட்டதும் அவன் முகத்துல பார்த்த சந்தோஷம் இன்னமும் என் நெஞ்சை விட்டு அகலலை. இன்னைக்கு கால் பண்ணி, `எங்க அம்மா உசுரக் காப்பாத்திட்டீங்க சார். ரொம்ப நன்றி'ன்னு சொன்னார்" என்றவர், ``அந்த இடத்துல நான் இல்லை, வேற யார் இருந்தாலும் இதைச் செய்திருப்பாங்க" என்கிறார் தன்மையுடன்.

சல்யூட் சார்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு