சிவகங்கை, அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 59). விருதுநகர் மாவட்டம், வீரசோழன் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்தார். சிவகங்கையில் குடும்பத்துடன் வசித்துவரும் கருப்பையா, வீரசோழன் காவல் நிலையம் அருகிலுள்ள கண்மாய்க்கு நேற்று பகலில் குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வெகுநேரமாகியும் கண்மாய்க்கு குளிக்கச் சென்றவர் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சக போலீஸார், அவரைத் தேடி கண்மாய்ப் பகுதிக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது, கண்மாயின் கரையருகே அவரது ஆடைகள் மட்டும் தரையில் கிடந்துள்ளன, ஆனால் அவரைக் காணவில்லை.

இதனால் சந்தேகமடைந்த காவலர்கள், அருகில் இருந்த ஊர்காரர்களிடம் விஷயத்தைச் சொல்லி கண்மாயில் இறங்கி கருப்பையாவைத் தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இந்த நிலையில் சேறு நிறைந்த கண்மாயின் ஆழமான பகுதியில் நீருக்குள் மூழ்கிய நிலையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் கருப்பையா பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து கருப்பையாவின் உடலை மீட்டு கரைக்குக் கொண்டுவந்தவர்கள், தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அவரின் உடலை உடற்கூறாய்வுக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கண்மாய்க்குக் குளிக்கச் சென்ற சார்பு ஆய்வாளர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் விருதுநகர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.