Published:Updated:

தேனி: 9 அடிக் குழியில் இறங்கிய அகோரி! - ஜீவசமாதி தகவலால் பதறிய காவல்துறை

குழிக்குள் அமர்ந்திருக்கும் அகோரி சாமியார்
குழிக்குள் அமர்ந்திருக்கும் அகோரி சாமியார்

அகோரி சாமியார் ஒருவர் ஜீவசமாதி அடையவிருக்கிறார் எனப் பரவிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அகோரி சாமியாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ளது மொட்டனூத்து கிராமம். இங்கு வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் மகன் அசோக் என்கிற சொக்கநாதன் 13 வயதில் ஊரைவிட்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சொக்கநாதன் நான்தான் எனக் கூறி, காசியிலிருந்து சாமியார் ஒருவர் மொட்டனூத்து கிராமத்துக்கு வந்திருக்கிறார். அவரிடம் பேசிய கிராமத்தினரிடம், ``25 வருடமாக, காசியில் தவம் இருந்தேன். இப்போது நான் அகோரியாக இருக்கிறேன். உலகம் அழியும் முன்னர், நான் பூமி பூஜை மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடு செய்யுங்கள்” எனக் கூறியிருக்கிறார்.

அகோரி சாமியார்
அகோரி சாமியார்

அதைக் கேட்ட கிராமத்தினர், அகோரி சாமியாரால், கிராமத்தில் ஏதாவது பிரச்னை உருவாகிவிடுமோ என்று அஞ்சி, அவருக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய ஆயத்தமாகினர்.

`வெடிவாழை நோய்க்கு ஹோமியோபதி மருந்து!' விவசாயிகளுக்கு தெம்பூட்டும் தேனி மருத்துவர்

அந்த வகையில், மொட்டனூத்து கிராமத்திலுள்ள தோப்பு ஒன்றில், 9 அடி ஆழக் குழிவெட்டி அதனுள்ளே அகோரி சாமியார் பூமி பூஜை செய்ய ஏற்பாடு செய்தனர் கிராம மக்கள். நேற்று (04.11.2020) காலை, அந்தக் குழிக்குள் இறங்கிய அகோரி சாமியார், ஒன்பது நாள்கள் உள்ளே அமர்ந்து பூமி பூஜை செய்ய இருப்பதாகவும், குழியை சிமென்ட் கற்களால் மூடிவிடும்படியும் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட அங்கிருந்த சிலர், சாமியார் ஜீவ சமாதி அடையவிருப்பதாக ராஜதானி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

அகோரி சாமியார்
அகோரி சாமியார்
தேனி: `ரூ.60 செல்போன் கவரை 20 ரூபாய்க்குக் கொடுங்க!’- பேரத்தால் கடைக்காரருக்கு நேர்ந்த சோகம்

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், குழிக்குள் அமர்ந்திருந்த அகோரி சாமியாரிடம் பேசினர். ``25 வருடமாக நான் உணவு சாப்பிட்டதில்லை. தண்ணீர்கூட குடிக்க மாட்டேன். புகைப்பது மட்டுமே எனக்குச் சாப்பாடு” என்றெல்லாம் அவர் பேசவே, அச்சமடைந்த போலீஸார், ஒருவழியாக அகோரி சாமியாரை குழியிலிருந்து வெளியே வரவைத்து சமாதானம் பேசினர். மேலும், அரசு அனுமதி இல்லாமல் இது போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது எனத் தெரிவித்து, அங்கே தோண்டப்பட்டிருந்த குழியை மூடிவிட்டுச் சென்றனர். இந்தச் சம்பவம் மொட்டனூத்து மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பரபரப்பாகச் பேசப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு