Published:Updated:

`வாங்குவது ரூ.12; விற்பது ரூ.100..!' - போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த காய்கறிகளின் விலை #corona

உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கூடுதல் விலைக்கு விற்ற வியாபாரிகளை போலீஸார் எச்சரித்தனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவைப் பயன்படுத்தி சிலர், காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பதாக உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, டி.ஜி.பி பிரதிப்வி பிலிப் உத்தரவின்பேரில் எஸ்.பி சாந்தியின் மேற்பார்வையில் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் போலீஸ் சோதனை
கோயம்பேடு மார்க்கெட்டில் போலீஸ் சோதனை

மருந்துக்கடைகளில் மாஸ்க் அதிக விலைக்கு விற்பது குறித்து சென்னை முகப்பேர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில் தனிப்படை போலீஸார் இன்று சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காய்கறிகள், பழங்களின் விலைப்பட்டியல் மற்றும் எடை மிஷின்கள் ஆகியவற்றை போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். கொள்முதல் விலையையும், விற்கப்படும் விலை குறித்தும் போலீஸார் மொத்த வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் , ‘‘10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படும் ஒரு கிலோ வெண்டைக்காய், கத்திரிக்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக எங்களுக்கு புகார்கள் வந்தன. அதனால்தான் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று சோதனை நடத்தினோம். இதில் ஒரு சில வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. அவர்களுக்கு முதல் கட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளோம். யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை. தொடர்ந்து இதுபோன்று அதிக விலைக்கு விற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

கோயம்பேட்டில் போலீஸார் ரெய்டு
கோயம்பேட்டில் போலீஸார் ரெய்டு

இதுதொடர்பாக, வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை பதிவு செய்த ஈரோட்டைச் விவசாயி ஒருவர், ``144 தடை உத்தரவைப் பயன்படுத்தி காய்கறிகள் கூடுதல் விலைக்கு வியாபாரிகள் விற்கின்றனர். ஆனால் எங்களிடம் வழக்கம்போல ஒரு கிலோ வெண்டைக்காய், கத்திரிக்காயை 12 ரூபாய் முதல் 15 ரூபாய்க்குத்தான் வாங்கினார்கள். போக்குவரத்துச் செலவு, கூலி என வைத்தால்கூட ஒரு கிலோவை 40 ரூபாய்க்கு வியாபாரிகள் விற்கலாம். ஆனால் மனசாட்சி இல்லாமல் அதைவிட கூடுதல் விலைக்கு இந்த நேரத்தில் விற்கின்றனர்" என்று தன்னுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில், ``அண்ணாநகர் பகுதியில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு இன்று 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது ஒரு கிலோ கேரட் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மருந்துக்கடைகளில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது. சில சூப்பர் மார்க்கெட்களில் எம்.ஆர்.பி-யைவிட கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்கப்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் போலீஸ் சோதனை
கோயம்பேடு மார்க்கெட்டில் போலீஸ் சோதனை

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கோயம்பேடு மார்க்கெட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கிலோவுக்கு 5 ரூபாய் வரை லாபம் வைத்து வியாபாரிகள் விற்பது தெரியவந்தது. பொருள்களை வாங்க வந்தவர்களிடமும் விசாரித்தோம். அவர்களும் அதே விலையைக் கூறினர். ஆனால் சென்னையில் உள்ள சில இடங்களில் செயல்படும் கடைகளில் கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.

கூடுதல் விலைக்கு பொருள்களை வியாபாரிகள் விற்கக்கூடாது. இதுதொடர்பாக புகார்களை பொதுமக்கள் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். அண்ணாநகரில் செயல்படும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மாஸ்க் ஒன்றை 395 ரூபாய்க்கு விற்றதாக எங்களுக்கு பில்லோடு புகார் வந்தது. அதனால் அந்தக் கடைக்கு சென்றபோது கடை பூட்டப்பட்டிருந்தது. கடை திறந்ததும் சம்பந்தப்பட்ட கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு