Published:Updated:

நடைபயணம்; சைக்கிள்!- கும்மிடிப்பூண்டியில் நிறுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள்

வெளிமாநில தொழிலாளர்கள்
வெளிமாநில தொழிலாளர்கள்

கும்மிடிப்பூண்டியில் இருந்து நடைப்பயணமாக வெளிமாநிலங்களுக்கு செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம், சிறப்பு இரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு.

நாடெங்கும் பிழைப்புக்காக வெவ்வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் உடைமைகளையும், குழந்தைகளையும் பற்றிக்கொண்டு ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்துசெல்வதைத் தினமும் சமூக வலைதளங்களின் வாயிலாகக் காண்கிறோம். சென்னையிலும் போதிய வருமானமின்றி உணவு, பால் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக அல்லாடுவதைவிட சொந்த ஊருக்குத் திரும்புவதே நன்றென கிளம்பினர் தொழிலாளர்கள். கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை மற்றும் பொன்னேரி பகுதிகளில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் செங்கல் சூளைகளில் பல ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர்.

ஹரியானா, ஒடிசா, அசாம் எனப் பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து வந்து கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊரடங்கின் காரணமாக வேலைகளை இழந்து வருமானமின்றி பரிதவித்து வருகின்றனர். இந்த நிலையில் பெரும்பாலான வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இருக்கும் வெளி மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக அரசு சார்பில் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

நடைபயணமாக ஊருக்கு செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள்
நடைபயணமாக ஊருக்கு செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள்

அதன்படி முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 1,400 க்கும் மேற்பட்டோர் நேற்று திருவள்ளூர் இரயில் நிலையத்தில் இருந்து, சிறப்பு இரயில் மூலம் ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கி அவர்களை வழியனுப்பி வைத்தார்.

நடைபயணமாக ஊருக்கு செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள்
நடைபயணமாக ஊருக்கு செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள்

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் படிப்படியாக அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், காத்திருந்து ஏமாற்றம் அடைந்த வெளிமாநில தொழிலாளர்கள் பலர் கூட்டம் கூட்டமாக சைக்கிள்களிலும், நடைபயணமாகவும் தங்கள் ஊர்களுக்கு செல்லத் தயாராகினர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து அப்படிச் செல்ல முயலும் வெளிமாநிலத் தொழிலாளர்களை காவல்துறையினர் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டு கண்காணித்து தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

116 மில்லியன் இந்திய கேமர்களை வசீகரித்த ஆன்லைன் கேம் எது தெரியுமா? #VikatanTech

நேற்று முன்தினம் பீகார், அசாம் எனப் பல்வேறு மாநிலங்களுக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து நடைபயணமாகச் செல்ல முயன்ற 1000-க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்திய மாவட்ட நிர்வாகத்தினர், அவர்களை கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தங்க வைத்தனர். அங்கு அவர்களுக்கு கல்லூரி உரிமையாளர் உணவளித்து இடம் கொடுக்க, நேற்று பீகார் மாநிலத்துக்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். கல்லூரி வளாகத்தில் இருந்து ஒரு பேருந்துக்கு 25 பேர் வீதம் என சுமார் 968 பேர் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பின் அங்கிருந்து ரயில் மூலம் அதிகாரிகள் அவர்களை பீகாருக்கு அனுப்பி வைத்தனர்.

வெளிமாநில தொழிலாளர்கள்
வெளிமாநில தொழிலாளர்கள்

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 450 பேர் நேற்று இரவு 8.00 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து பீகாருக்கு மற்றொரு இரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் நேற்று கும்மிடிப்பூண்டியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்ல முயன்ற 2000-க்கும் மேற்பட்டோர் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டு அதே தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் இன்று ரயில்களில் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு