Published:Updated:

ஜூனியர்களுக்கு பதவி உயர்வு; சீனியர்களுக்கு?-முதல்வரின் நடவடிக்கையை எதிர்பார்க்கும் உதவி ஆய்வாளர்கள்

தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை

`2008-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த உதவி ஆய்வாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்கினால்தான், 2011-ல் சேர்ந்து 10 ஆண்டுகளைக் கடந்துவிட்ட உதவி ஆய்வாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க முடியும்.’

தமிழக காவல்துறையில் 450-க்கும் மேற்பட்ட உதவி காவல் ஆய்வாளர்களுக்கு 13 ஆண்டுகளைக் கடந்தும் பதவி உயர்வு வழங்காமல் அவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், இதற்காக உயரதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் பிரச்னையில் தங்களுக்கு நியாயம் நியாயம் வழங்குவார் என்றும் நம்பிக்கையுடன் உதவி ஆய்வாளர்கள் காத்திருக்கிறார்கள்.

தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை

இது பற்றி நம்மிடம் விரிவாகப் பேசிய ஓய்வுபெற்ற காவல்துறையினரும், உதவி ஆய்வாளர்களின் உறவினர்கள் சிலரும், "தமிழ்நாட்டில் கடந்த 2008-ம் ஆண்டு, திமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்ட 745 உதவி காவல் ஆய்வாளர்களில் கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்டோருக்கு 13 ஆண்டுகள் ஆகியும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

2011-ம் ஆண்டு ஆயுதப்படை உள்ளிட்ட வேறு வேறு பிரிவுகளில் உதவி ஆய்வாளர்களாகச் சேர்ந்த பலர், ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்றுவிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு முன்னதாக பணியில் சேர்ந்த 2008-ம் ஆண்டு பேட்ச் உதவி ஆய்வாளர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்காமல் அவர்களைச் சோர்வடைய வைத்துள்ளனர்.

காவல்துறை பணி
காவல்துறை பணி

இது பற்றி கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த அதிமுக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குக் காரணம் திமுக ஆட்சியில் சேர்ந்தவர்கள் என்பதால், அப்படிப் புறக்கணித்தார்களா என்று தெரியவில்லை. எந்த ஆட்சியில் பணியில் சேர்ந்தாலும் காவல்துறையினர் எப்போதும் நடுநிலையாகத்தான் இருப்பார்கள்.

நேரடித் தேர்வின் மூலம் நியமிக்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒரு முறை பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த விதியைக் கடந்த ஆட்சியாளர்கள் மதிக்கவில்லை. 13 ஆண்டுகளைக் கடக்கும் நிலையிலுள்ள இவர்களுக்கு இன்னும் பதவி உயர்வு வழங்கப்படாததால், அடுத்தடுத்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வும் தடைப்படும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இரவு பகலாக மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரின் உடல்நலமும் மனநலமும் இந்த கொரோனா காலகட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும், சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

அப்படிப்பட்ட நிலையில், அர்ப்பணிப்புடன் பணி செய்யும் இவர்களுக்குச் சரியான நேரத்தில் பதவி உயர்வு வழங்குவதுதான் நியாயமான நடவடிக்கையாக இருக்கும். 2008-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த உதவி ஆய்வாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்கினால்தான், 2011-ல் சேர்ந்து 10 ஆண்டுகளைக் கடந்துவிட்ட உதவி ஆய்வாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க முடியும். கடந்த ஆட்சியில் இதைப் பற்றி கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டார்கள்.

தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை

ஆனால், பதவி ஏற்றது முதல் பல்வேறு நியாயமான நடவடிக்கைகளையும், காவல்துறையினருக்கான சலுகைகளையும் அறிவித்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருடைய நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறையில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

துறைரீதியாகச் சந்திக்கும் பிரச்னைகளை வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையிருப்பதால், தங்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் தீர்த்துவைக்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட காவல்துறையினர்.

அடுத்த கட்டுரைக்கு