Published:Updated:

தென்காசி: பிஞ்சுக் குழந்தைகளிடம் நஞ்சாக சாதிய பாகுபாடு - சாட்டையைச் சுழற்றிய காவல்துறை!

பாஞ்சாகுளம் கிராமம்

ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் சாதிய பாகுபாடு காரணமாக பட்டியலின பள்ளிக் குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்து விரட்டிய வீடியோ வெளியாகி வைரலானது.

தென்காசி: பிஞ்சுக் குழந்தைகளிடம் நஞ்சாக சாதிய பாகுபாடு - சாட்டையைச் சுழற்றிய காவல்துறை!

ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் சாதிய பாகுபாடு காரணமாக பட்டியலின பள்ளிக் குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்து விரட்டிய வீடியோ வெளியாகி வைரலானது.

Published:Updated:
பாஞ்சாகுளம் கிராமம்

“ஸ்கூலுக்கு போனா பெஞ்சில் உட்கார விடாம தரையில உட்காரச் சொல்லுவாங்க.. சத்துணவு சாப்பிட தட்டு தரமாட்டாங்க. எங்க கூட யாரும் விளையாடக் கூடமாட்டாங்க... இப்ப என்னடான்னா கடையில காசு குடுத்துக் கேட்டாலும் மிட்டாய் தர மாட்டேங்குறாங்க..” என்று சாதிய பாகுபாடு பற்றி பேசுகிறார்கள்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் படிக்கும் பட்டியலினச் சிறுவர்களின் ஏக்கக் குரல் தான் மேலே படித்தது. ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் சாதிய பாகுபாடு காரணமாக பட்டியலின பள்ளிக் குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்து விரட்டிய வீடியோ வெளியாகி வைரலானது.

கைதான மகேஷ்வரன், ராமச்சந்திரன்
கைதான மகேஷ்வரன், ராமச்சந்திரன்

அந்த வீடியோ வெளியான பின்னரே அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றது. இதைப் பார்த்த காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக 5 பேர்மீது வழக்கு பதிவான நிலையில், இதுவரை மூவர் கைதாகியிருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் சுப்புத்தாய், ``ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கிரிக்கெட் விளையாடுறதுல அவங்களுக்கும் எங்க பசங்களுக்கும் சண்டை வந்துச்சு. பிறகு ஒரு கல்யாண வீட்டுல குடிச்சுட்டு பைக்ல வந்தவங்க எங்க பையங்க மேல மோதி செல்போனை உடைச்சுட்டாங்க. அதைக் கேட்டவனை அடிச்சதால் போலீஸ் கேஸாகிருச்சு.

சாதிய பாகுபாடு காட்டிய கிராமத்தில் பாதுகாப்பு
சாதிய பாகுபாடு காட்டிய கிராமத்தில் பாதுகாப்பு

பதிலுக்கு அவங்களும் கேஸ் கொடுத்ததால் ஒவ்வொரு தரப்பிலும் அஞ்சு பேரு மேல வழக்குப் போட்டுட்டாங்க. அதில் உள்ள ஒரு பையனுக்கு அக்னிபத் ராணுவ வேலை கெடச்சிருக்கு. அவன் வேலைல சேரதுக்காக மொத்த வழக்கையும் வாபஸ் வாங்கச் சொல்லுறாங்க. எங்க ஆளுக, ‘நீங்க கேஸை வாபஸ் வாங்குனாத் தான் நாங்களும் வாங்குவோம்’னு சொல்லிட்டாங்க

அந்தக் கோவத்துல தான் ஊர்க்கூட்டம் போட்டு எங்களுக்கு யாரும் வேலை கொடுக்கக் கூடாது, கடையில் எந்தப் பொருளும் கொடுக்கக் கூடாது, அவங்க தெருவுல நடக்க விடக்கூடாதுன்னு முடிவு செஞ்சிருக்காங்க. அதை மிட்டாய் வாங்கப் போன பச்சப் பிள்ளைகட்ட சொல்லி விரட்டிவிட்டு வீடியோ எடுத்துருக்காங்க. குக்கிராமத்தில் இருக்கும் எங்களை அரசாங்கம்தான் பாதுகாக்கணும்” என்று வேதனையுடன் பேசினார்.

கடைக்கு சீல் வைப்பு
கடைக்கு சீல் வைப்பு

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ சுப்புலட்சுமி தலைமையிலான அதிகாரிகள், சாதிய பாகுபாடு நடந்திருப்பது தெரியவந்ததால் சர்ச்சைக்குறிய கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டனர். அத்துடன் 5 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது

கடையின் உரிமையாளரும் ஊர் கட்டுப்பாடு விதித்த நாட்டாமையுமான மகேஷ்வரன், அக்னிபத் திட்டத்தில் ராணுவ வேலை கிடைத்துள்ள ராமச்சந்திரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் குமார், சுதா, முருகன் ஆகியோரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்த நிலையில் கோவையில் பதுங்கியிருந்த குமார் தற்போது கைதாகியிருக்கிறார்.

பள்ளியில் மாணவர்களுக்கு இடையே எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை.
கபீர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி

பள்ளியில் படிக்கும் பட்டியலின மாணவர்கள் சாதிய பாகுபாட்டுடன் தனியாக தரையில் அமரவைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர், ``அந்தப் பள்ளியில் அனைத்து மாணவர்களுமே தரையில் அமரவைக்கப்பட்டனர். அதனால் பாகுபாடு எதுவும் காட்டப்படவில்லை” என மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுத்துள்ளார்.

இதனிடையே, சாதிய வன்முறையில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து தென்மண்டல ஐ.ஜி-யான ஆஸ்ரா கர்க்கிடம் கேட்டதற்கு, ``பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை சில காலங்களுக்கு அந்த இடத்திலிருந்து வெளியேற்றும் வகையிலான சட்டப் பிரிவு, தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இருக்கிறது.

தென்மண்டல ஐ.ஜி ஆஸ்ரா கர்க்
தென்மண்டல ஐ.ஜி ஆஸ்ரா கர்க்

பாஞ்சாகுளம் கிராமத்தில் சாதிய பாகுபாடு காரணமாக சமூக ஒற்றுமையைச் சீர்குலைத்தவர்கள் மீது அந்த சட்டப் பிரிவை இந்த வழக்கில் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறோம். இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த பின்னர், தேவைப்படும் காலம்வரை அந்த சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதனிடையே பாஞ்சாகுளம் கிராமத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.