Published:Updated:

பறிமுதல் செய்த மணலை போலீஸாரே கடத்தியபோது விபத்தான லாரி... இது தஞ்சை அதிர்ச்சி!

விபத்தில் காயமடைந்த இளைஞர்
விபத்தில் காயமடைந்த இளைஞர்

இதற்காகப் பதியப்பட்ட வழக்கில், 'லாரி மோதியது' என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். அதன் எண்ணைக் குறிப்பிடவில்லை. இதில் யாரையோ காப்பாற்ற போலீஸார் முயல்வது தெரிகிறது.

தஞ்சாவூரில், மணல் கடத்தல் லாரிகளைப் பறிமுதல் செய்த போலீஸாரே, அதில் இருந்த மணலை விற்பனை செய்துள்ளனர். அப்போது, அப்பாவி இளைஞர் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், இதற்காகப் பதியப்பட்ட வழக்கில் லாரியின் நம்பரைப் பதிவுசெய்யாமல் காவல்துறையினர் அந்த இளைஞருக்கு அநீதி இழைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிகிச்சைபெற்ற இளைஞர்
சிகிச்சைபெற்ற இளைஞர்

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாபேட்டை பகுதியில் உள்ள வெண்ணாற்றில், பல ஆண்டுகளாகவே ராட்சச ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு டிப்பர் லாரிகள் மூலம் மணல் கடத்தல் நடைபெற்றுவருகிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாரின் ஆதரவுடன் மணல் கடத்தல் நடப்பதாகவும், இதைத் தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வந்தனர்.

இந்நிலையில், மணல் கடத்திவந்த லாரிகளைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்திவைத்தனர் போலீஸார். அந்த மணலை பழனி என்ற ஓட்டுநர் மூலம் போலீஸாரே விற்றுள்ளனர். மணலை இறக்கிவிட்டுத் திரும்பும்போது, இளைஞர் ஒருவர் மீது மணல் லாரி மோதியது.

காவல் நிலையம்
காவல் நிலையம்

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் செந்தில்குமாரிடம் பேசினோம், ''அம்மாபேட்டை பகுதிகளில் மணல் கடத்தல் அதிக அளவில் நடைபெற்றுவந்தன. இதற்கு உடந்தையாக போலீஸாரும் இருந்து வந்தனர். இது தொடர்பாக அம்மாபேட்டை காவல் நிலையத்தின் மீதும் அதில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் விஜயகுமார் மீதும் உயரதிகாரிகளுக்குப் பல புகார்கள் சென்றன. ஆனாலும் மணல் கடத்தலைத் தடுக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தால், மணல் கடத்திச் செல்லும் லாரிகளை அவ்வப்போது பிடிப்பது வழக்கம். அதே போல், இரண்டு வாரங்களுக்கு முன்பு மணல் கடத்திச்சென்ற சில லாரிகளைப் பிடித்து காவல் நிலையத்துக்குக் கொண்டுவந்து நிறுத்தினர். இதையடுத்து, அந்த மணலை வேறு டிரைவரைக் கொண்டு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் இரண்டாம் நிலை காவலரான கணேஷ் ஆகியோர் விற்றுள்ளனர்.

மணலை இறக்கிவிட்டு வந்தபோது, வலங்கைமான் ரகுநாதபுரம் மேலத்தெருவைச் சேர்ந்த 19 வயதுடைய ராமச்சந்திரன் என்ற இளைஞர் மீது மணல் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ராமசந்திரனுக்கு கழுத்து மற்றும் தலையில் பலத்த அடிபட்டது. இதைத் தொடர்ந்து, அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ராமச்சந்திரனுக்கு நீதி கேட்டு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, டிஎஸ்பி நந்தகோபால் நடத்திய விசாரணையில், லாரியில் இருந்த மணல் விற்பனை செய்யப்பட்டதைக் கண்டுபிடித்தார்.

தொடர்ந்து, காவலர் கணேஷை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தற்போது, மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர் விஜகுமாரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார். இதில், ராமச்சந்திரனுக்கு நீதியும், இழப்பீடும் கிடைக்கும் வகையில் வழக்குப் பதியாமல், இன்ஸ்பெக்டரைக் காக்கும் நோக்கத்திலேயே உயர் அதிகாரிகள் செயல்படுகின்றனர்.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

ராமச்சந்திரன், இரண்டு சக்கர வாகனம் ரிப்பேர் செய்யும் ஒர்க்‌ஷாப் வைத்திருக்கிறார். அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, தன் குடும்பத்தைக் கவனித்துவருகிறார். தலை மற்றும் கழுத்தில் பலமாக அடிப்பட்டதால், முன்புபோல் அவரால் வேலை செய்ய முடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இந்தப் பிரச்னையை சீக்கிரம் முடிக்கவே போலீஸ் அழுத்தம் கொடுத்து மூன்று நாள்களில் மருத்துவமனையிலிருந்து அவரை டிஸ்ஜார்ஜ் செய்யவைத்துள்ளனர்.

அத்துடன், இதற்காகப் பதியப்பட்ட வழக்கில், லாரி மோதியது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். அதன் பதிவு எண்ணைக் குறிப்பிடவில்லை. இதில் யாரையோ காப்பாற்ற போலீஸார் முயல்வது தெரிகிறது. அத்துடன், எண்ணைப் பதிவு செய்யாததால் காப்பீட்டுத் தொகை கோர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண நபர்கள் மணல் கடத்தலில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்வார்கள்.

ஆனால், இங்கு போலீஸே மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். அதுவும் விசாரணையில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. நான்கு லாரி மணலை விற்ற பிறகு, 5-வது லாரி மணலை விற்கும் போதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இதில் முக்கிய தொடர்புடைய இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர். இதை நாளைக்கே தளர்த்தி, அவரைப் பணியில் சேர்த்துக்கொள்கிற நிலையிலேயே உள்ளதாக நாங்கள் அச்சப்படுகிறோம். உடனடியாக இதில் தொடர்புடைய போலீஸார் மீது வழக்குப் பதிய வேண்டும். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பாபநாசம் டிஎஸ்பி நந்தகோபாலிடம் பேசினோம். “வண்டி எண் இல்லாமல் வழக்குப் பதிய முடியாது. வண்டியின் ரிஜிஸ்டர் எண்ணை வழக்கில் குறிப்பிட்டுள்ளோம். இது தொடர்பாக இரண்டு போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் நியாயமான விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு