Published:Updated:

`மாஸ்க்கை நான் தருகிறேன்; அணிந்தால் மட்டும் போதும்!' - கலக்கும் கன்னியாகுமரி காவலர்

மாஸ்க்குகளை விநியோகிக்கும் காவலர் துரைசிங்
மாஸ்க்குகளை விநியோகிக்கும் காவலர் துரைசிங்

தமிழகக் கடலோரப் பாதுகாப்பு குழுமத்தில் நுண்ணறிவுப் பிரிவில் காவலராகப் பணியாற்றும் துரைசிங், தன்னுடைய சொந்தச் செலவில் மாஸ்க்குளைத் தயாரித்து இலவசமாக விநியோகித்துவருகிறார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாஸ்க் அணியவும் கைகளைக் கழுவவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். அதனால் மாஸ்க், சானிடைஸகளின் தேவை அதிகரித்துள்ளதால் தட்டுப்பாடு நிலவுகிறது. கூடுதல் விலைக்கும் அவை விற்கப்படுகின்றன.

இந்தச் சூழலில் இலவசமாக மாஸ்க்குகளை தயாரித்து சொந்த செலவில் வழங்கி வருகிறார், கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பு குழும நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வரும் முதல்நிலை காவலர் துரைசிங்.

`உங்கள் காலைத் தொட்டு வணங்குகிறேன்; வெளியில் வராதீங்க'- சென்னையில் கண்ணீர்விட்ட போலீஸ் எஸ்.ஐ #Corona
மாஸ்க் தயாரிப்பு பணி
மாஸ்க் தயாரிப்பு பணி

காவலர் துரைசிங்கிடம் பேசினோம். ``என்னுடைய சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரத்தை அடுத்த அச்சன்குளம். தற்போதுள்ள சூழலில் மாஸ்க் தேவை அதிகரித்துள்ளது. பல இடங்களில் மாஸ்க் கிடைக்கவில்லை என்ற தகவலை தலைமை மருந்தாளுநரான என் நண்பர் சிவாகர், என்னிடம் தெரிவித்தார். உடனே மாஸ்க் தயாரிப்பது தொடர்பாக இருவரும் ஆலோசித்தோம். அப்போது, இந்தக் கல்வியாண்டில் ஏழை மாணவர்களுக்குச் சீருடை வழங்கிவிட்டு மீதி துணி இருந்தது.

அதை வைத்து மாஸ்க் தயாரிக்க முடிவு செய்தோம். மாஸ்க்கிற்குத் தேவையான கயிற்றை ஒரு இடத்திலிருந்து வாங்கினேன். அப்போது கொட்டாரத்தில் ஜவுளிக் கடை நடத்திவரும் என்னுடைய அண்ணன் பரம்சிங்தான் மாஸ்க் தயாரிக்க முழு உறுதுணையாக இருந்தார். அவர், மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் எங்களுடன் இணைந்து செயல்பட்டார்.

அவருக்குத் தெரிந்த டெய்லர்களிடம் மாஸ்க்கைத் தைத்துக் கொடுக்க உதவி கேட்டார். அப்போது பாரதி என்பவர், இலவசமாக மாஸ்க்குகளைத் தைத்துக் கொடுத்தார். இன்னும் சிலரிடம் ஒரு மாஸ்க்கை தைத்துக் கொடுக்க 5 ரூபாய் கொடுத்தோம். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாஸ்க்குகளை இலவசமாக விநியோகித்துள்ளேன்.

மாஸ்க் தயாரிப்பு பணி
மாஸ்க் தயாரிப்பு பணி

நான் காவலராகப் பணியாற்றுவதால் இலவசமாக மாஸ்க்குகளை விநியோகிப்பது தொடர்பாக எங்கள் பிரிவின் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தேன். அவர்களும் என்னை ஊக்கப்படுத்தினர். எங்கள் பிரிவின் உயரதிகாரி வன்னியபெருமாள் சாரும் குறிஞ்சிசெல்வன் சாரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். பணிக்குச் செல்லும்போது கையோடு 100 மாஸ்க்குகளை எடுத்துச் செல்வேன். தூய்மைப் பணியில் ஈடுபடுவோர் முதல் வெளியில் வரும் ஒவ்வொருவரிடமும் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறேன். பின்னர் அவர்களுக்கு இலவசமாக மாஸ்க்குகளை விநியோகித்துவருகிறேன்" என்றவர்,

`குமரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்றுபேர் ஒரே நாளில் பலி’ -என்ன காரணம்?

``வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வராதீங்க. கட்டாயம் வர வேண்டிய சூழல் ஏற்பட்டால் மாஸ்க் அணிந்து வாங்க என்று கூறுவேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கும் வாகனச் சோதனையில் ஈடுபடும் காவலர்களுக்கும் மாஸ்க்குகளை விநியோகித்து வருகிறேன். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் மாஸ்க்கை நான் தருகிறேன், `நீங்கள் அணிந்தால் மட்டும் போதும்' என்று சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் கூறிவருகிறேன்" என்றார் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு