Published:Updated:

`உலகத்தில் பெரிய சோகம் குழந்தை இறப்பதுதான்!'- சுஜித் மரணத்தால் கண்ணீர் வடிக்கும் சப்-இன்ஸ்பெக்டர்

``எனது மகள் என்னைவிட்டு கண்காணாத இடத்திற்குச் சென்றுவிட்டாள். அவளின் நினைவுகளாக ஆறு ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். உலகிலேயே பெரிய சோகம் என்னவென்றால் குழந்தை இறந்துபோவதுதான்.''

கண்ணீர்மல்க பேசும் சப் இன்ஸ்பெக்டர் முத்துமாரி
கண்ணீர்மல்க பேசும் சப் இன்ஸ்பெக்டர் முத்துமாரி

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது நான்கரை வயதுக் குழந்தை கடந்த 2013-ம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது. தனது குழந்தையின் உயிரிழப்பால் 6 ஆண்டுகளாக அதிலிருந்து மீளாத முத்துமாரி, தற்போது சிறுவன் சுஜித் மரணத்தால் கடும் வேதனையடைந்துள்ளதோடு, உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் முத்துமாரி நெஞ்சுருகக் கூறுகையில், "எனக்கு நான்கரை வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. 2013-ம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் எனது மகள் என்னைவிட்டு கண்காணாத இடத்திற்குச் சென்றுவிட்டாள். அவளின் நினைவுகளில் ஆறு ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். உலகிலேயே பெரிய சோகம் என்னவென்றால் குழந்தை இறந்துபோவதுதான்.

சுர்ஜித்
சுர்ஜித்

மற்ற எந்த சோகத்தை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ளலாம். நாம் இறந்து நமக்கு நம் பிள்ளைகள் கொள்ளிவைக்க வேண்டும். என்பிள்ளைக்கு நான் கொள்ளிவைத்து அந்த வேதனையை அனுபவித்த ஒரு உணர்வில் நான் இதைப் பதிவிடுகிறேன். சுமார் இரண்டு ஆண்டுகள் என் மகளின் கல்லறையிலே இருந்தேன்.

ஒரு உயிர் இந்த உலகில் பிறப்பதை அது தீர்மானிப்பதில்லை. ஆனால் வாழக்கூடிய வாழ்க்கையை அது தீர்மானிக்கிறது. அதற்குரிய வாய்ப்பை குழந்தைக்கு வழங்க வேண்டும். யார் மீதும் பழிபோட வேண்டாம். அரசு இயந்திரங்களும், பொதுமக்களும் அவர்களுக்குரிய வேலையைச் செய்தார்கள். கும்பகோணம் பள்ளி தீவிபத்து, பள்ளி வாகனத்தின் ஓட்டையில் விழுந்து குழந்தை இறப்பது என ஒவ்வொரு நிகழ்வின் போதும் அந்த சமயத்தில் மட்டும் அதைப்பற்றி நினைக்கிறோம்.

எஸ்.ஐ. முத்துமாரியின் மகளின் கல்லறை
எஸ்.ஐ. முத்துமாரியின் மகளின் கல்லறை

மக்களுக்கும், தமிழக அரசுக்கும் நான் வேண்டுகோளாக வைப்பது இதுபோன்ற ஒரு சம்பவத்தை இனி நாம் சந்திக்கக்கூடாது. இதற்காக அரசு ஒரு தீர்வு காண வேண்டும். சுஜித் இறந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் நாம் மறந்துவிடுவோம். எனவே, இந்தக் குழந்தையின் பெயரால் ஒரு விருதை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் சிக்கும் உயிர்களை மீட்க முழு மூச்சாகச் செயல்படுபவர்களுக்கு சுஜித்தின் பெயரால் விருது வழங்க வேண்டும். இதுதான் நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.

என் மகள் இறந்தபிறகு எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. எனவே நான் கடவுளை வேண்டாமல், நீ வந்திருவ சுஜித் என மனதிற்குள் ஏதோ ஒரு பிரார்த்தனை செய்தேன். பிள்ளைகள் பிறந்து, அது இறந்த பிறகு பெற்றோர் படும்பாடு எனக்கு தெரியும். என் மகளின் நினைவால் இவ்வளவு காலம் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். சுஜித்தின் நினைவுகள் இத்தோடு போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பதிவைப் போடுகிறேன். எத்தனையோ விபத்துகள், கொலைகளையும், அடிதடிகளையும் காவல்துறையில் நேரில் பார்த்திருக்கிறேன். போஸ்ட்மார்ட்டங்களை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவற்றைப் பணியாகச் செய்திருக்கிறேன். ஆனால், இந்தச் சம்பவத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மகளின் மறைவிற்குப் பிறகு இந்தச் சம்பவம் என் மனநிலையை வெகுவாகப் பாதித்துள்ளது.

உதவி ஆய்வாளர் முத்துமாரி
உதவி ஆய்வாளர் முத்துமாரி

எனது மகளின் கல்லறையில் 'உன்னுடன் நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே' என்ற வைரமுத்துவின் வரிகளை எழுதி வைத்திருக்கிறேன். இன்றுவரை அதைத்தான் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். என்மகளுக்காக நான் எதாவது செய்வேன். சுஜித்திற்கும், தமிழக அரசும் தமிழக மக்களும் எதாவது செய்ய வேண்டும் என வேண்டுகோளாக வைக்கிறேன்.

இந்த நேரத்தில் சிலருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், எம்.பி.ஜோதிமணி ஆகியோரின் அற்பணிப்பைக் கண்டு வியந்துபோனேன். அமைச்சர் விஜயபாஸ்கர் தகப்பன் ஸ்தானத்திலிருந்து செயல்பட்டார்" இவ்வாறு அந்த வீடியோவில் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி.

`உலகத்தில் பெரிய சோகம் குழந்தை இறப்பதுதான்!' - சுர்ஜித் மரணத்தால் கண்ணீர் வடிக்கும் குமரி சப்-இன்ஸ்பெக்டர் எனக்கு...

Posted by Vikatan EMagazine on Tuesday, October 29, 2019