Published:Updated:

தாம்பரம்: காவலருக்கு அரிவாள் வெட்டு; இன்ஸ்பெக்டர் சுட்டதில் சுருண்டு விழுந்த ரௌடி! - என்ன நடந்தது?

போலீஸ் விசாரணை

ரௌடியைப் பிடிக்கச் சென்றபோது காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அதனால் தற்காப்புக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதில் ரௌடியின் காலில் குண்டு பாய்ந்தது.

தாம்பரம்: காவலருக்கு அரிவாள் வெட்டு; இன்ஸ்பெக்டர் சுட்டதில் சுருண்டு விழுந்த ரௌடி! - என்ன நடந்தது?

ரௌடியைப் பிடிக்கச் சென்றபோது காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அதனால் தற்காப்புக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதில் ரௌடியின் காலில் குண்டு பாய்ந்தது.

Published:Updated:
போலீஸ் விசாரணை

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருமையூரைச் சேர்ந்தவர் சச்சின் ( 28). இவர்மீது கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தலைமறைவாக இருந்த ரௌடி சச்சின், தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள கல்குவாரி முதலாளிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறிப்பதாக காவல்துறைக்கு புகார்கள் வந்தன. அதனால் சச்சினைப் பிடிக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

ரௌடி சச்சின்
ரௌடி சச்சின்

இந்த நிலையில், 27.9.2022-ம் தேதி சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் பொறியியல் கல்லூரி அருகே ரௌடி சச்சின், தன்னுடைய கூட்டாளிகளுடன் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் சோமங்கலம் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக தாம்பரம் துணை கமிஷனர் சிபிச்சக்கரவர்த்தி மேற்பார்வையில் சோமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் அங்கு சென்றனர். போலீஸாரைப் பார்த்ததும் ரௌடி சச்சின் தன்னுடைய கூட்டாளி பரத்துடன் பைக்கில் தப்பிச் செல்ல முயன்றான். அவனை போலீஸார் மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது ரௌடி சச்சினும், பரத்தும் நாட்டு வெடிகுண்டுகளை போலீஸ்மீது வீசினர். ஆனால் அவை வெடிக்கவில்லை.

இதையடுத்து சச்சின் கத்தியை எடுத்து போலீஸாரை மிரட்டினான். அப்போது சச்சினைப் பிடிக்க முயன்ற காவலர் பாஸ்கரை அவன் வெட்டினான். இதில் காவலர் பாஸ்கருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சச்சினை சரண்டையும்படி எச்சரித்தார். ஆனால் சச்சின், கத்தியைக் காட்டி மிரட்டியப்படி தப்பிச் செல்ல முயன்றான். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார், துப்பாக்கியை எடுத்து சச்சினை நோக்கி 3 முறை சுட்டார். இதில் சச்சினின் காலில் குண்டு பாய்ந்தது. அதனால் ரத்த வெள்ளத்தில் அவன் சுருண்டு விழுந்தான். இந்தச் சமயத்தில் அவனது கூட்டாளி பரத் தப்பியோடி விட்டான்.

துப்பாக்கி சூடு நடந்த இடம்
துப்பாக்கி சூடு நடந்த இடம்

காயமடைந்த காவலர் பாஸ்கர், ரௌடி சச்சின் ஆகியோரை ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ரௌடி சச்சின் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். சம்பவம் நடந்த இடத்துக்கு கமிஷனர் அமல்ராஜ் வந்து பார்வையிட்டார். காயமடைந்த காவவர் பாஸ்கரைச் சந்தித்து கமிஷனர் அமல்ராஜ் நலம் விசாரித்தார். பின்னர் சம்பவம் குறித்து தனிப்படை போலீஸாரிடம் அவர் விசாரித்தார்.