Published:Updated:

`குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல; நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு!' - சுர்ஜித்துக்குத் தலைவர்கள் இரங்கல்

மணப்பாறை பாத்திமாபுதூர் கல்லறையில் குழந்தை சுர்ஜித்தின் உடலைப் பார்த்து கதறியழும் தாயார் கலாமேரிக்கு உறவினர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர்.

குழந்தை சுர்ஜித் உடலுக்கு அஞ்சலி
குழந்தை சுர்ஜித் உடலுக்கு அஞ்சலி

திருச்சி மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நான்கு நாள்களாக நடந்து வந்தது. இந்த நிலையில், குழந்தை சுர்ஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். விடியற்காலை 4.30 மணி அளவில் சிறுவன் சுர்ஜித் உடல் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சுர்ஜித்தின் உடல் அனுப்பிவைக்கப்பட்டது.

மணப்பாறை அரசு மருத்துவமனையிலிருந்து சுர்ஜித்தின் உடல் கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. மணப்பாறை பாத்திமாபுதூர் கல்லறையில் குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Stalin
Stalin

முன்னதாக, சுர்ஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். தி.மு.க தலைவர் ஸ்டாலின் சுர்ஜித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தனது இரங்கலில் ``நான்கு நாள்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்துப் போய்விட்டான். சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது? அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான். ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக் கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி” எனத் தெரிவித்துள்ளார்.

`குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல; நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு!' - சுர்ஜித்துக்குத் தலைவர்கள் இரங்கல்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது இரங்கலில்,``இரவு பகல் பாராமல் மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி. ஈடுசெய்ய இயலாத குழந்தை சுர்ஜித்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்திலிருந்து மீண்டுவர அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ரவிக்குமார் எம்.பி, தனது இரங்கலில் ``நெஞ்சு பதறுகிறது. இந்தக் குழந்தை எவ்வளவு துன்பத்தை அனுபவித்துவிட்டது எனது அஞ்சலி! ஆழ்துளைக் கிணறோ, பாதாளச் சாக்கடையோ - சிக்கிக்கொண்டோரைக் காப்பாற்றுவதற்கான கருவிகள் இல்லாதது தொழில்நுட்பம் சார்ந்த பிரச்னையல்ல; மனித உயிர்களை இந்த நாடு எவ்வளவு மலிவாகக் கருதுகிறது என்பதன் அடையாளம்” என தனது வருத்ததைப் பதிவு செய்துள்ளார்.

சுர்ஜித்தின் தாய்
சுர்ஜித்தின் தாய்

பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்,``பல மணிநேர போராட்டத்துக்குப் பின் சிறுவன் சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட மாட்டானா என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டது மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவனது பெற்றோரின் துயரத்துக்கு நமது எந்த வார்த்தையும் ஆறுதலை தந்துவிடாது” எனக் கூறியுள்ளார்.