கிறிஸ்துவப் பள்ளியில் படித்துவந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர் உடல் சொந்த ஊரில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. `மதத்தின் பெயரால் அரசியல் புகுத்துகிறார்கள்' என்று கிராம மக்கள் பெரிதாகக் கலந்து கொள்ளவில்லையாம். என்னதான் நடந்தது இறுதிச் சடங்கில்...

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்2 படித்து வந்தார். இந்த நிலையில், அந்த மாணவி கடந்த 9-ம் தேதியன்று விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் களைக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், மாணவி தங்கியிருந்த விடுதி வார்டன் சகாயமேரி அறைகளைச் சுத்தம் செய்யச் சொல்லி வற்புறுத்தியதால் மாணவி பூச்சி மருந்தைக் குடித்ததாக எழுந்த புகாரின் பேரில் விடுதி வார்டன் சகாய மேரி கைது செய்யப்பட்டார். இதனிடையே தஞ்சை மருத்துவக்கல்லூரியில் கடந்த 15-ம் தேதி சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட மாணவி, கடந்த 19-ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவியின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு மற்றும் பா.ஜ.க-வினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, தஞ்சையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, 3 நாள்களுக்குப் பிறகு நேற்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, மாணவியின் உடலைப் பெற்றோர் பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகளைச் செய்ய உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, மாணவியின் உடல் நேற்று அவர் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து மாணவியின் உடல் மாலை அவரது சொந்த ஊரான வடுக பாளையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அங்கு பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் அய்யப்பன், மாவட்ட பார்வையாளர் அய்யாரப்பன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் சேதுராமன், உறவினர்கள், அக்கம்பக்கத்தில் உள்ள கிராம மக்கள் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இதனிடையே வடுகபாளையம் கிராமத்தில் எந்த வித பிரச்னைகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். அரியலூர் மாவட்ட எஸ்.பி ஃபெரோஸ்கான் அப்துல்லா, சம்பவ இடத்திற்கே வந்தார்.
மாணவியின் இறுதிச்சடங்கில் கிராமமக்கள் பெரும்பாலானோர் கலந்துகொள்ளவில்லை என்றுக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த கிராம மக்களிடம் பேசினோம். ``பல கிறிஸ்தவப் பள்ளிகளில் நம்முடைய பிள்ளைகள் திருநீர், பொட்டு, பூ வைக்கக்கூடாது என்று நிர்வாகம் கடுமையாகத் தடை விதிக்கிறது. இந்தப் பள்ளியிலும் அதுபோல்தான் நடந்ததாக இங்குப் படிக்கும் மாணவிகள் சொல்கிறார்கள். உயிரிழப்பு நடந்துவிட்டது. அது உண்மை தான். இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதற்காகப் இறந்த மாணவியின் உடலை வைத்துக்கொண்டு அரசியல் செய்யலாமா? அரசியல் கட்சியினர் இந்தக் குடும்பத்தாரைக் கையில் வைத்துக்கொண்டு விஷயத்தைப் பெரிதாக்குகிறார்கள். மதமாற்றம் செய்தார்களா ? இல்லையா ? என்பது குறித்து நாங்கள் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. ஒரு ஆன்மா இறந்துவிட்டால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஆனால் மதத்தை முன்வைத்து அரசியல் நடப்பதைத் தான் எதிர்க்கிறோம். முதலில் மாணவி இறந்ததும் பள்ளி தரப்பினர் பெற்றோருக்குத் தகவல் சொல்லாததால்தான் மாணவி இறந்துவிட்டார் என்கிற தகவல் கேள்விப்பட்டதும் எங்கள் கிராமமே தாமாக முன்வந்து போராட்டத்தில் கலந்துகொண்டது.

ஆனால், எப்போது அரசியல் கட்சியினர் கையில் எடுத்தார்களோ அன்றிலிருந்து மாணவியின் இறப்பிற்கு நியாயம் கிடைக்காது என்று நம்பினோம். இதை தவிர்க்கலாம் என்று சொல்வதற்காக ஊர்த் தலைவர்கள் பலமுறை பேச முயற்சி செய்தார்கள். அவர்கள் பேச மறுத்துவிட்டனர். அவர்களது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஊர் மக்கள் பெரிதாக கலந்துகொள்ளவில்லை" என்றனர்.