Published:Updated:

பள்ளி மாணவன் தற்கொலை; குவிக்கப்பட்ட போலீஸ்; கார் மோதியதில் காயமடைந்த பெண் இன்ஸ்பெக்டர்-என்ன நடந்தது?

மருத்துவமனையில் இன்ஸ்பெக்டர் மதனகலா

போலீஸார் சோதனைச் சாவடி அமைத்து வாகனங்களைக் கண்காணித்தபோது, வேகமாக வந்த கார் அங்கிருந்த பெண் இன்ஸ்பெக்டர் மீது மோதியது.

பள்ளி மாணவன் தற்கொலை; குவிக்கப்பட்ட போலீஸ்; கார் மோதியதில் காயமடைந்த பெண் இன்ஸ்பெக்டர்-என்ன நடந்தது?

போலீஸார் சோதனைச் சாவடி அமைத்து வாகனங்களைக் கண்காணித்தபோது, வேகமாக வந்த கார் அங்கிருந்த பெண் இன்ஸ்பெக்டர் மீது மோதியது.

Published:Updated:
மருத்துவமனையில் இன்ஸ்பெக்டர் மதனகலா

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் காவல் நிலையத்துக்குட்பட்ட அரியநாயகிபுரம் கிராமத்தில் அரசு உதவிபெறும் இந்து நாடார் உறவின்முறை பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சீனு என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டார். பள்ளிக்குச் சென்ற மாணவன் பாதியிலேயே வீட்டுக்கு வந்து தாயின் சேலையில் தூக்கிட்ட சம்பவம் கிராமத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மாணவனின் தந்தை ஆறுமுகம் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். தாய் மாரியம்மாள் உள்ளூரில் கூலி வேலை செய்கிறார். கணேஷ்குமார் என்ற மூத்த மகனும் அதே பள்ளியில் படிக்கும் நிலையில், சீனி தற்கொலை செய்ததன் பின்னணியில் பள்ளி நிர்வாகம் இருப்பதாக தாய் மாரியம்மாள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். சாதிய பாகுபாடுடன் பள்ளியின் ஆசிரியர்கள் செயல்பட்டதே தன் மகன் சாவுக்குக் காரணம் என மாரியம்மாள் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் அந்தப் புகாரை மறுத்திருக்கின்றனர். இந்த நிலையில், அரியநாயகிபுரம் கிராமத்தினர் மாணவன் சீனு மரணத்துக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் மாணவரின் உயிரிழந்த உடலையும் வாங்காததால் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கிறது.

வாகனச் சோதனையின் போது வந்த கார்
வாகனச் சோதனையின் போது வந்த கார்

அரியநாயகிபுரம் கிராமத்தில் பதற்றம் நீடிப்பதால் தென்காசி மாவட்ட எஸ்.பி-யான கிருஷ்ணராஜ் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். அதன்படி அந்த கிராமத்துக்குச் செல்லும் வழியில் அச்சம்பட்டி என்ற இடத்தில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு பெண் இன்ஸ்பெக்டர் மதனகலா என்பவர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை அவர் மறித்திருக்கிறார்.

காரில் வந்தவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது காரை ஓட்டி வந்த தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளரான சந்திரசேகர் என்பவர் திடீரென காரை எடுத்து இன்ஸ்பெக்டர் மீது மோதியிருக்கிறார். அதில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. உடனடியாக சேர்ந்தமரம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்ட அவர், கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலை செய்த மாணவன் வீட்டுக்குச்  செல்ல முயன்ற சந்திரசேகர்
தற்கொலை செய்த மாணவன் வீட்டுக்குச் செல்ல முயன்ற சந்திரசேகர்

பெண் இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றிக் கொல்ல முயற்சி செய்த சந்திரசேகரை போலீஸார் கைதுசெய்தனர். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே சிகிச்சை பெற்றுவரும் இன்ஸ்பெக்டர் மதனகலாவை தென்காசி மாவட்ட எஸ்.பி கிருஷ்ணராஜ் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பள்ளி மாணவன் தற்கொலை மற்றும் இன்ஸ்பெக்டர் மீது கார் ஏற்றி கொல்ல நடந்த முயற்சி ஆகியவற்றால் அந்தப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. அதனால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.