Published:Updated:

பொள்ளாச்சி: "6 மருத்துவர்கள், 24 செவிலியர்கள் சம்பளத்தை நான் கொடுக்கிறேன்"-திமுக வேட்பாளர் வரதராஜன்!

டாக்டர் வரதராஜன்
டாக்டர் வரதராஜன்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 100 நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக ஆறு மருத்துவர்கள், 24 செவிலியர்கள், 24 தூய்மை பணியாளர்களைத் தற்காலிகமாகப் பணியமர்த்தி, அவர்களுக்கான ஊதியப் பொறுப்பை ஏற்றிருக்கிறார் டாக்டர் வரதராஜன்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டிருக்கிறது. பல தொற்றாளர்கள் ஆக்ஸிஜனுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்ஸிஜன் உதவியுடன் 100 படுக்கைகள்கொண்ட புதிய கட்டடம் ஒன்று இருக்கிறது.

கொரோனா
கொரோனா
4,000 பேருக்கு கொரோனா(?); கொல்கத்தா எண்ணிக்கையை தமிழகத்தில் காட்டிய ஆய்வகம்! - பரிசோதனை உரிமம் ரத்து

ஆனால், போதிய பணியாளர்கள் இல்லாததால் அதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், மருத்துவமனையில் இடம் கிடைப்பது கடினமாக இருப்பதால் அந்த 100 படுக்கைகளை வரதராஜன் தத்தெடுத்திருக்கிறார்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதி தி.மு.க வேட்பாளராகக் களம்கண்டவர் டாக்டர் வரதராஜன். இவர் பொள்ளாச்சி தி.மு.க நகரப் பொறுப்பாளராகவும் இருந்துவருகிறார். தேர்தலில் இவர் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். ஆனாலும், இந்த அசாதாரண சூழ்நிலையில் பொள்ளாச்சி மக்களுக்குக் கைகொடுத்துள்ளார்.

பொள்ளாச்சி
பொள்ளாச்சி

100 நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக ஆறு மருத்துவர்கள், 24 செவிலியர்கள், 24 தூய்மைப் பணியாளர்களைத் தற்காலிகமாகப் பணியமர்த்தி, அவர்களுக்கான ஊதியப் பொறுப்பை ஏற்றிருக்கிறார் வரதராஜன்.

இது குறித்து டாக்டர் வரதராஜன் கூறுகையில், “பொள்ளாச்சி மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததால், மக்கள் கோவைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. கோவையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஒரு மருத்துவராக, மருத்துவத்துறையிலுள்ள அசாதாரணச் சூழ்நிலையை நேரடியாகப் பார்த்துவருகிறேன்.

கொரோனா
கொரோனா

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றியிருப்பதால், அங்குள்ள நண்பர்களிடம் என்ன தேவை என்பதைக் கேட்டறிந்தேன். அவர்கள், ‘எங்களிடம் எல்லாம் இருக்கின்றன. மேன் பவர்தான் இல்லை’ என்று கூறினார்கள். அதற்கு நான் பொறுப்பு எடுத்துக்கொண்டேன்.

தற்போது கடினமான சூழல் இருப்பதால், அரசு நிர்ணயித்ததைவிட சற்று அதிக அளவு சம்பளம் கொடுக்க நினைத்தேன். அரசில் தற்காலிக மருத்துவர்களுக்கு ரூ.65,000 கொடுக்கின்றனர். நாம் அவர்களுக்கு ரூ.75,000 கொடுக்கவிருக்கிறோம். அதேபோல, செவிலியர்களுக்கு ரூ.25,000, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.10,000 கொடுக்கிறோம்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை

இரண்டு ஷிஃப்ட் அடிப்படையில் பணியாற்றுவார்கள். ஐந்து நாள்கள் பணியிலும், ஐந்து நாள்கள் தனிமைப்படுத்துதலிலும் இருப்பபார்கள். அவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணியும் நடந்துவருகிறது. இதற்கு எங்கள் கட்சியிலும், என் நண்பர்கள் வட்டாரங்களிலும் உதவி செய்திருக்கிறார்கள்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு அவர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் நாங்கள் செய்யவிருக்கிறோம். மேலும், வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். இங்கு பணியாற்றுபவர்களுக்கு இந்தக் காலகட்டம் முடிந்தவுடன் அரசிடம் பேசி, அவர்கள் நிரந்தரமாகப் பணியாற்றவும் முயற்சி மேள்கொள்வேன்.

கொரோனா வைரஸ் சிகிச்சை
கொரோனா வைரஸ் சிகிச்சை

முதல் அலையைவிட இது அதிக வீரியமாக இருக்கிறது. நம்மை நாம்தான் தற்காத்துக்கொள்ள வேண்டும். இரண்டு மாஸ்க்குகளைப் போட வேண்டும். முடிந்த அளவுக்கு வீட்டிலிருந்து வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு