Published:Updated:

சிக்கிய ஆளுங்கட்சிப் பிரமுகர்கள்... சூடுபிடிக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பிரீமியம் ஸ்டோரி
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பின்னணியில் பி.ஜே.பி-யின் அழுத்தமா?

சிக்கிய ஆளுங்கட்சிப் பிரமுகர்கள்... சூடுபிடிக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு...

பின்னணியில் பி.ஜே.பி-யின் அழுத்தமா?

Published:Updated:
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பிரீமியம் ஸ்டோரி
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

தன்னிடம் பாலியல் அத்துமீறிய ஆபாசக் கொடூரர்களிடம், ‘‘அண்ணா... என்னை அடிக்காதீங்க... விட்ருங்கண்ணா...’’ என்று கதறும் அந்தப் பெண்ணின் குரலைக் கேட்டால் மனம் இப்போதும் பதைபதைக்கும். அந்த ஒரு பெண் மட்டுமல்ல... ஏராளமான பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்திருக்கிறது அந்தக் கொடூரக் கும்பல். அவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடந்த 2019-ம் ஆண்டு புகார் கொடுத்த பிறகுதான் பொள்ளாச்சியில் நடந்த இந்தக் கொடூரங்கள் வெளியுலகுக்குத் தெரிந்தன. அதன் பிறகு வெளியான வீடியோக்கள், அதன் பின்னணியில் கூறப்பட்ட ஆளுங்கட்சி புள்ளிகள் தொடர்புகள் என எல்லாமே `திடுக்’ ரகம். இது தொடர்பாக, 13.3.2019 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘ஆபாச அரக்கர்கள் + ஆளும்கட்சி புள்ளிகள் பொள்ளாச்சி facebook பயங்கரம்’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். அடுத்தடுத்த நிகழ்வுகளையும் தொடர்ச்சியாகப் பதிவுசெய்துவந்தோம். இந்தநிலையில் தான், தற்போது இந்த வழக்கில் அ.தி.மு.க கட்சி நிர்வாகி உட்பட மூவரைக் கைதுசெய்திருக்கிறது சி.பி.ஐ.

இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் காவல்துறை செய்த குளறுபடிகள் கொஞ்சநஞ்சமல்ல... அப்போதைய கோவை போலீஸ் எஸ்.பி பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதுடன், ‘‘இதில் ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்கு 100 சதவிகிதம் தொடர்பு இல்லை’’ என்றார். இந்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்ட நிலையில் தலைமறைவான திருநாவுக்கரசு, ‘‘இதுல நிறைய அரசியல் இருக்கு. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எனக்கு சப்போர்ட் பண்ணணும்’’ என்று ஆடியோ வெளி யிட்டார். தொடர்ந்து, திருநாவுக்கரசும் கைது செய்யப்பட்டார். அனைவர் மீதும் குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. தொடர்ந்து மணிவண்ணன் என்பவரும் சரணடைந்தார். இதையடுத்து 2019, மார்ச் 12-ம் தேதி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, அன்றைய தினமே சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.

2019, ஏப்ரல் 26-ம் தேதி சி.பி.ஐ விசாரணை தொடங்கியது. மே 24-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம், குற்றம்சாட்டப்பட்டவர்களின்மீது போடப்பட்டிருந்த குண்டாஸ் ரத்து செய்யப்பட்டது. சொல்லிக்கொள்ளும்படி வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில்தான், சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து, அருளானந்தம், ஹெரோன், பாபு என்கிற ‘பைக்’ பாபு ஆகிய மூவரை சி.பி.ஐ கைது செய்துள்ளது. இதில் அருளானந்தம், பொள்ளாச்சி நகர அ.தி.மு.க மாணவரணிச் செயலாளர். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவரை அவசர அவசரமாகக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது அ.தி.மு.க தலைமை.

சிக்கிய ஆளுங்கட்சிப் பிரமுகர்கள்... சூடுபிடிக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு...

யார் இந்த அருளானந்தம்?

அ.தி.மு.க நகரச் செயலாளரும், கோவை மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கிருஷ்ணகுமாரின் வலதுகரமாக வலம்வந்தவர் தான் இந்த அருளானந்தம். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருடன் அருளானந்தம் எடுத்திருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஹெரோன், பைக் பாபு ஆகியோரும் அ.தி.மு.க உறுப்பினர்கள்தான்.

இது குறித்து விவரமறிந்த வட்டாரத்தில் பேசினோம். ‘‘இவர்களின் பெயர்கள் அனைத்தும் ஏற்கெனவே அடிபட்டவைதான். பொள்ளாச்சி அ.தி.மு.க-வில் வி.பி.கிரி நகரச் செயலாளராக இருந்தபோது, அ.தி.மு.க-வில் இணைந்து அவரின் விசுவாசியாக இருந்தார் அருளானந்தம். பிறகு கிருஷ்ணகுமார் நகரச் செயலாளரானவுடன், அவரின் ஆதரவாளராக மாறிவிட்டார். தொடர்ந்து, டாஸ்மாக் பார், ஃபைனான்ஸ் தொழில் என கொடிகட்டிப் பறந்தார்.

பார் நெட்வொர்க் மூலம்தான் தற்போது பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்படுபவர்கள் அனைவரும் மது, மாது என்று ஒருங்கிணைந்துள்ளார்கள். அருளானந்தத்துக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. பொள்ளாச்சி அ.தி.மு.க-வில் உயர்ந்த மனிதராக வலம்வரும் முக்கியப் பிரமுகர், இவருக்கு லட்சங்களில் மொய் வைத்துள்ளார். ஹெரோன் மற்றும் ‘பைக்’ பாபு, வாகனங்களை வாங்கி விற்பது தொடர்பான பணியில் இருந்தனர். ஹெரோன், திருமணமானவர். இவரின் பெற்றோர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள். ‘பைக்’ பாபு மட்டும் பொருளாதாரத்தில் சற்று பின்தங்கியவர்” என்றார்கள்.

அமைச்சர் வேலுமணியுடன் அருளானந்தம்
அமைச்சர் வேலுமணியுடன் அருளானந்தம்

இன்னும் சிலர் வெளியே..!

இது குறித்து தி.மு.க புறநகர் தெற்கு மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் நம்மிடம், ‘‘அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருக்கிறது என்பதை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறோம். இப்போதுதான் சி.பி.ஐ அவர்களை நெருங்கியுள்ளது. ஆனாலும், இன்னும் சில முக்கியப் பிரமுகர்கள் வெளியில்தான் இருக்கிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற அருளானந்தம் திருமணத்தில் அமைச்சர்கள் வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்கள். இப்படி அ.தி.மு.க-வில் தனக்கிருக்கும் செல்வாக்கை வைத்துக் கொண்டுதான், அவர் தப்பித்துக்கொண்டிருந்தார்’’ என்றார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ராதிகா, ‘‘தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள ஹெரோன் ஏற்கெனவே 2019-ம் ஆண்டு போலீஸாரால் இந்த வழக்கில் விடுவிக்கப்பட்டவர். அப்போதே இதை எதிர்த்து நாங்கள் எஸ்.பி-யிடம் மனு அளித்தோம். ஆனால், காவல்துறை கண்டுகொள்ளவில்லை. அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஆச்சிப்பட்டி ஊராட்சித் தலைவர் ரங்கநாதன், அதே ஊரைச் சேர்ந்த குற்றவாளி மணிகண்டனுக்கு அந்தக் காலகட்டத்தில் அடைக்கலம் கொடுத்தார். இதனால் ரங்கநாதன் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். அதேபோல, ஆச்சிப்பட்டி மணிகண்டன், பார் நாகராஜன், சின்னாம்பாளையம் செந்தில், வடுகபாளையம் பாபு பழனிசாமி, வசந்தகுமார் ஆகியோர் மீதும் நாங்கள் புகார் அளித்திருக்கிறோம். அவர்களையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’’ என்றார் அழுத்தமாக.

‘‘இரண்டாண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ள இந்தக் கைது நடவடிக்கைக்குப் பின்னால் அரசியல் அழுத்தமும் இருக்கிறது’’ என்கின்றனர் இதன் உள்விவரம் அறிந்தவர்கள். அவர்களிடம் பேசியபோது, ‘‘தேர்தல் நெருங்குவதால் சீட் பேரத்தில் அ.தி.மு.க-வைப் பணிய வைப்பதற்காகத்தான் பா.ஜ.க மேலிடம் இந்தக் கைது நடவடிக்கையை எடுத்துள்ளதாகச் சந்தேகிக்கிறோம். அ.தி.மு.க இறங்கி வரவில்லையென்றால், அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடரலாம்’’ என்றார்கள்.

பொள்ளாச்சி ஜெயராமனுடன்...
பொள்ளாச்சி ஜெயராமனுடன்...

அ.தி.மு.க-வினர் மட்டுமல்லாமல், மையமாகச் செயல்படும் கட்சிப் பிரமுகர் ஒருவரின் வாரிசு பெயரும் இதில் அடிபடுகிறது. ‘‘தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள ஹெரோனும், அந்த வாரிசும் படு நெருக்கம். அவருக்குத் தேவையான சமாசாரங்களை ஹெரோன்தான் ஏற்பாடு செய்துவந்திருக்கிறார். தற்போது ஹெரோன் கைதுசெய்யப்பட்டிருப்பதால், அவர்கள் தரப்பிலும் பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது’’ என்கிறார்கள் அவர்கள்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆச்சிப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் ரங்கநாதனிடம் கேட்டபோது, ‘‘ஹெரோன் எனக்குப் பெரிதாக பழக்கம் இல்லை. நான் பவானியில் பயிற்சிக்காகச் சென்றபோது, எங்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி என்பவர் என்னைச் சந்திக்க வந்தார். அவருடன் ஹெரோன், பைக் பாபு ஆகியோர் வந்தனர். அப்போதே, ‘இவர்களை ஏன் அழைத்து வந்தாய்?’ என்று அன்புமணியிடம் கடிந்துகொண்டேன். நான் யாருக்கும் அடைக்கலம் கொடுக்கவில்லை. மணிவண்ணனின் பெற்றோர்தான் என் காலில் விழுந்து ஜாமீன் எடுக்க உதவி கேட்டனர். நான் ‘முடியாது’ என்று மறுத்துவிட்டேன்’’ என்றார்.

ஹெரோன் - ‘பைக்’ பாபு
ஹெரோன் - ‘பைக்’ பாபு

பொள்ளாச்சி அ.தி.மு.க நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், ‘‘எங்கள் கட்சியில் 16 அணிகள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்காணித்துக்கொண்டிருக்க முடியாது. தவறு செய்தவர்களுக்கு நாங்கள் அடைக்கலம் கொடுக்க மாட்டோம். கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் பத்திரிகை கொடுத்தால், தலைவர்கள் திருமணத்துக்குச் செல்வது இயல்புதான். அந்த அடிப்படையில்தான் அருளானந்தம் திருமணத்தில் அமைச்சர்கள் கலந்துகொண்டார்கள். தவறு செய்தார் என்ற தெரிந்தவுடன், அருளானந்தத்தைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க எங்கள்மீது குற்றம்சாட்டுகிறது” என்றார்.

கிருஷ்ணகுமார் - நவநீதகிருஷ்ணன் - ராதிகா - ரங்கநாதன்
கிருஷ்ணகுமார் - நவநீதகிருஷ்ணன் - ராதிகா - ரங்கநாதன்

சி.பி.ஐ வட்டாரங்களில் பேசியபோது, “ஏற்கெனவே கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண்களிடம் பேசினோம். அவர்களில் மூவர், நீதிபதி முன்பு வந்து சாட்சி கூறினர். அவர்கள் கூறிய சம்பவத்தின் போது, ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டவர்களின் செல்போன் நெட்வொர்க் மற்றும் இந்த மூவரின் செல்போன் நெட்வொர்க் ஒரே இடத்தில்தான் இருந்துள்ளது. அதன் அடிப்படையில்தான் கைதுசெய்துள்ளோம். இந்த மூவரையும் கஸ்டடியில் எடுத்து விசாரித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்’’ என்றார்கள்.

அதிகாரவர்க்கத்தின் நடவடிக்கை, அரசியல் லாபத்துக்காக இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களின் நலம் சார்ந்ததாக இருக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism