Published:Updated:

`ஒரு கரும்பு 32,000 ரூபாய், வெள்ளைச் சேலை அணிந்து பொங்கல்!' -சிவகங்கையில் இப்படியும் ஒரு கொண்டாட்டம்

பொங்கல் விழா ஏலம்
பொங்கல் விழா ஏலம்

இங்கு ஏலத்தில் வாங்கிச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது எங்களின் நம்பிக்கை. அதேபோல் விரதமிருந்து அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சம் பழம் ஒன்று 5,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பொங்கல் விழா ஒன்றில் கரும்பு ஒன்று 32,000 ரூபாய்க்கும் ஒரு எலுமிச்சை 5,000 ரூபாய்க்கும் விலை போனது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகத் தமிழர்களின் திருநாளாக அழைக்கப்படும் தைப் பொங்கல் விழா பல்வேறு இடங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுப் போட்டி, மஞ்சுவிரட்டு, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என்று ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு முறையில் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு சிவகங்கை அருகே பச்சநாச்சி பிடாரி அம்மன் கோயில் திருவிழாவில் ஒரு கரும்பு 32,000 ரூபாய்க்கும் ஒரு எலுமிச்சை 5,000 ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசும் அப்பகுதி மக்கள், ``எங்கள் சாமிக்கு இப்பகுதி மக்கள் அனைவரும் கட்டுப்படுவார்கள். இந்தப் பகுதியில் பொங்கல் விழாவையும் வித்தியாசமான முறையில்தான் கொண்டாடுவோம். பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு தவிர்த்து வெண்மை நிறச் சேலையைக் கட்டி எளிமையாக ஒற்றுமையை வலியுறுத்திப் பொங்கலிட்டு மகிழ்வார்கள். இது அனைவரும் சமம் என்ற எண்ணத்தை உருவாக்கும் என்பது நம்பிக்கை.

கரும்பு ஏலம்
கரும்பு ஏலம்

இதனால் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாது பொங்கலை வரவேற்போம். இதேபோல் பொங்கல் விழாவில் இன்னொரு பகுதியாக ஏலம் நடைபெறும். இதில் பொங்கல் திருவிழாவில் தொட்டில் கரும்புகளைப் பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்திய தொட்டில் கரும்புகளை ஏலம் இடுவது வழக்கம். அப்படித்தான் முதல் கரும்பு 32,000 ரூபாய்க்கும் கடைசி கரும்பு 15,000 ரூபாய்க்கும் ஏலம் போனது. கூவிக் கூவி ஏலம் போட்டு விற்பனை செய்யப்பட்ட கரும்பைப் போட்டி போட்டு வாங்குவார்கள்.

இங்கு ஏலத்தில் வாங்கிச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது எங்களின் நம்பிக்கை. அதேபோல் விரதமிருந்து அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சம் பழம் ஒன்று 5,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் உள்ளுர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து பங்கேற்றனர்" என்றனர் உற்சாகத்துடன்.

பின் செல்ல