Published:Updated:

`நெகிழவைக்கும் நன்றிப் பொங்கல்!'- கல்லணையில் களைகட்டிய புதுமை

கல்லணையில் நன்றிப் பொங்கல்
கல்லணையில் நன்றிப் பொங்கல்

இயற்கையையும் கால்நடைகளையும் மட்டும் போற்றினால் போதுமா ?

பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் இதெல்லாம் நாம் அனைவரும் அறிந்ததே. தஞ்சை-திருச்சி எல்லையில் உள்ள கல்லணையில், புதுமையான முறையில் கொண்டாடப்பட்ட நன்றிப் பொங்கல், இப்பகுதி மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அதென்ன நன்றிப் பொங்கல்?

இயற்கையையும் கால்நடைகளையும் போற்றி நன்றி தெரிவிக்கும் விதமாகவே பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, உணவளிக்கும் வேளாண்மையின் முக்கியத்துவத்தை உலகுக்குப் பறைசாற்றும் விதமாகவே பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் இதனைக் கொண்டாடி வருகிறார்கள். உலகில் வேறு எங்கும் இந்த அளவிற்கு உழவுத் தொழிலையும் கால்நடைகளையும் கொண்டாடக்கூடிய விழா நடைபெறுவதில்லை.

இந்நிலையில்தான், காவிரி டெல்டாவிற்குப் பாசனம் அளிக்கும் கல்லணையில் இந்த ஆண்டு, காவிரி உரிமை மீட்புக்குழுவினர் புதுமையான முறையில் 'நன்றிப் பொங்கல்' என்ற பெயரில் விழா கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இயற்கையையும் கால்நடைகளையும் மட்டும் போற்றினால் போதுமா? தமிழ்நாட்டின் விவசாயம் உயிர்ப்புடன் இருக்க, பெரும் அர்ப்பணிப்புடன் பங்களிப்புசெய்த மனிதர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் இதனைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

கரிகால் சோழன்
கரிகால் சோழன்

கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனுக்கும், இதை மறு சீரமைப்பு செய்த ஆங்கிலேய அரசின் பொறியாளரான ஆர்தர் காட்டனுக்கும் நன்றி கூறும் விதமாகவே இதனைக் கொண்டாடத் திட்டமிட்டோம் என்கிறார்கள், காவிரி உரிமை மீட்புக்குழுவின் நிர்வாகிகள். காவிரிப் படுகை இன்றைக்கு வளமாகச் செழித்திருக்கப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லணையைக் கட்டியவர் கரிகால் பெருவளத்தான். இதுதான் கட்டட உலகின் முதல் அணை. ஆங்கிலேயப் பொறியாளரான ஆர்தர் காட்டன் இதை மறுசீரமைப்பு செய்ததோடு மட்டுமல்லாமல், மேலணையான முக்கொம்பு அணையையும், கீழணையான கொள்ளிடம் அணையையும் கட்டி அர்ப்பாணித்தார்.

பொங்கல் விழா நேரத்தில் இவர்களைப் போற்றுவது தமிழர்களின் தலையாய கடமை என நெகிழ்கிறார்கள். இக்குழுவில் அங்கம் வகிக்கும் விவசாயச் சங்கங்கள், அரசியல் இயக்கங்கள் மட்டுமல்லாமல், இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் எனப் பல தரப்பினரும் ஒன்றுகூடி, கரிகால் சோழனின் சிலைக்கும், ஆர்தர் காட்டனின் சிலைக்கும் மாலை சூடி, பொங்கல் படையலிட்டு, இவர்களது அர்ப்பணிப்பு பற்றி நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார்கள். காவிரித்தாய்க்கும் படையலிட்டு மரியாதை செய்திருக்கிறார்கள். இதுபோன்ற நன்றிப் பொங்கல்... கரிகால் சோழன், ஆர்தர் காட்டன் போன்ற மாமனிதர்களை அடுத்தடுத்த தலைமுறையினரின் மனத்தில் நிலைநிறுத்த பெரும் பங்காற்றும்.

அடுத்த கட்டுரைக்கு