Published:Updated:

வேலூர்: `இதயம் துடிக்கும் வரை நற்பணி தொடரும்!’ - ரஜினிக்காகக் கண்கலங்கிய மன்ற நிர்வாகி

சோளிங்கர் என்.ரவி
சோளிங்கர் என்.ரவி

``மாற்றத்தை நோக்கித் தலைவர் முன்னெடுக்க விரும்பிய சுயநலமற்ற, புனிதமான அரசியல் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டோம்’’ என்கிறார், வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் என்.ரவி.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் `பகிர்ந்து வாழ்வோம்; பாசத்தோடு பொங்கலைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் சோளிங்கரில் வெகு விமரிசையாகப் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி தலைமைவகித்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்குப் புத்தாடை, கரும்பு, இனிப்பு அடங்கிய பொங்கல் தொகுப்புப் பொருள்களை வழங்கினார்.

ஏழைகளுக்குப் பொங்கல் பரிசு
ஏழைகளுக்குப் பொங்கல் பரிசு

இதையடுத்துப் பேசிய சோளிங்கர் என்.ரவி, `` `தலைவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டார். பாவம் அவருடைய ரசிகர்கள் ஏமாந்துவிட்டார்கள்’ என்று பலர் என் காதுபடவே பேசினார்கள். எதையாவது எதிர்பார்த்துச் செய்பவர்களுக்குத்தான் ஏமாற்றமாகத் தெரியும். தலைவர் வழியில் பயணிக்கிறோம். அவர் பெயரில் மக்களுக்கு உதவி செய்வதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்.

`பணம், பதவிக்கு ஆசைப்படுவோர் என்னுடன் வர வேண்டாம், வந்தால் ஏமாந்துபோவீர்கள்’ என்று தலைவர் எப்போதோ சொல்லிவிட்டார். ஒருபோதும் எங்களைச் செலவு செய்யுங்கள் என்று தலைவர் சொன்னதே இல்லை. அவர் மீதுள்ள அளவற்ற அன்பாலேயே மக்களுக்கு உதவி செய்துவருகிறோம். நாங்கள் ஏமாந்துபோக ஒன்றுமே இல்லை.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

மாறாக, நாங்கள் ஏமாந்துவிட்டதாக நினைப்பவர்களின் எண்ண ஓட்டமே ஏமாற்றமடைந்திருக்கிறது. என் தலைவர் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்ன பிறகு திட்டவட்டமாக ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்... என் இதயத் துடிப்பு உள்ளவரை தலைவர் ரஜினியின் பெயரில் செய்யப்படும் உதவிகள் தொய்வின்றி நடைபெறும்.

தலைவர் தலைமையில் இயங்கும் தலைமைக்குக் கட்டுப்பட்டு நாம் செய்துவரும் நற்காரியங்கள் அனைத்தும் நமக்கு புண்ணியத்தைத் தேடித்தரும். மாற்றத்தை நோக்கி தலைவர் முன்னெடுக்க விரும்பிய சுயநலமற்ற, புனிதமான அரசியல் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம். 80 சதவிகிதம் பூத் கமிட்டிகளை நிறைவு செய்திருக்கிறோம்.

சோளிங்கர் என்.ரவி
சோளிங்கர் என்.ரவி

என் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இருந்த நேரத்தைக் காட்டிலும் மன்றத்தினருடன்தான் அதிக நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன். கடந்த மூன்ரு ஆண்டுகளில் மன்றத்தினரின் உழைப்பு உண்மையானது, போற்றுத்தலுக்குரியது. தலைவர் அடிக்கடி சொல்வதுபோல உண்மைக்கு என்றுமே ஒரு சக்தி உண்டு. அதைப்போல, நாம் விதைத்திருப்பது உண்மையெனும் விதை. அந்த விதை ஒருபோதும் உறங்காது. இது, சத்தியம்’’ என்று கூறிக் கண்கலங்கினார்.

ரவியின் உருக்கமான பேச்சால், அரங்கமே அமைதியாக இருந்தது. மன்றத்தினரும் மனம் குமுறிக் கண்கலங்கினர்.

அடுத்த கட்டுரைக்கு