Published:Updated:

புதுக்கோட்டை: சாப்பாட்டுக்கே சிரமம்... போனுக்கு எங்கே போறது! - ஊரடங்கால் தவிக்கும் குடும்பம்

ஊரடங்கால் தவிக்கும் மீனாட்சி குடும்பம்
ஊரடங்கால் தவிக்கும் மீனாட்சி குடும்பம்

`நாலு பொம்பளப் புள்ளைகளை எப்படி வளர்க்கப்போற... ரெண்டு புள்ளையை தத்துக்கொடுத்துடு’னு உறவுக்காரங்க சொன்னாங்க. ஆனா, அவங்க சொல்ற எதையும் நான் கேட்கலை. நாம கஷ்டப்பட்டாலும், பிள்ளைகளை நல்லா பார்த்துக்கணும்னு வைராக்கியமாக இருந்தேன்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், இன்னும் பல குடும்பங்கள் சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலையில்தான் இருக்கின்றன. புதுக்கோட்டை அருகே, தாந்தாணியில் வசிக்கும் மீனாட்சியின் குடும்பத்துக்கு தற்போது அதே நிலைதான். மீனாட்சிக்குப் பிறந்தது நான்கு பெண் பிள்ளைகள். மீனாட்சியின் கணவர் ராஜாவுக்கு ஊரடங்கால் தற்போது வேலை இல்லை. மீனாட்சி கூலி வேலைக்குப் போனால்தான் குடும்பமே சாப்பிட முடியும்.

ஊரடங்கால் தவிக்கும் மீனாட்சி குடும்பம்
ஊரடங்கால் தவிக்கும் மீனாட்சி குடும்பம்

கஷ்டப்பட்டாலும், பிள்ளைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு, மீனாட்சி போராடிவருகிறார். அரசுப்பள்ளியில் படிக்கும் மூத்தமகள் பாண்டி ரதி, இந்த வருடம் 10-ம் வகுப்பு. ஆன்லைன், வாட்ஸ்அப்பில் பாடம் நடத்தப்படுகிறது. பாண்டி ரதி உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர்த்து மாணவர்கள் பலரும் ஆண்ட்ராய்டு போன் மூலம் படிக்கின்றனர். மீனாட்சி வீட்டில் டி.வி-யும் இல்லை. மீனாட்சியிடம் ஆண்ட்ராய்டு போனும் இல்லை. சாப்பாட்டுக்கே சிரமப்படுகிறது மீனாட்சியின் குடும்பம். இந்த நிலையில் மகள் படிப்புக்கு ஆண்ட்ராய்டு போன் தேவைப்பட, என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்.

மீனாட்சியிடம் பேசினோம், "எங்க அப்பா, அம்மா வீடு கொஞ்சம் கஷ்டப்படுற குடும்பம். அவங்க சக்திக்கு நகை, பணம் கொடுத்து எனக்குக் கல்யாணம் செஞ்சுவெச்சாங்க. இப்போ கல்யாணம் ஆகி 16 வருஷம் ஆச்சு. விழுப்புரம் பக்கத்துல இருக்குற விக்கிரவாண்டிதான் கணவருக்குச் சொந்த ஊரு. ரெண்டு பெண் குழந்தைகள் ஆகிடுச்சு. ஆனாலும், கணவர் வீட்டுல மேற்கொண்டு வரதட்சணை கேட்டு டார்ச்சர் பண்ணினாங்க. கணவரும் எனக்கு ஒத்தாசையாக இல்லை. ரெண்டு பொம்பளைப் புள்ளைகளையும் தூக்கிக்கிட்டு அப்பா, அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். இங்கே வந்ததும் அப்பா, அம்மாவுக்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு தோணிச்சு.

ஊரடங்கால் தவிக்கும் மீனாட்சி குடும்பம்
ஊரடங்கால் தவிக்கும் மீனாட்சி குடும்பம்

என்ன செய்யுறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்போதான், எங்க உறவுக்காரங்க ஒருத்தவங்க, தற்காலிகமாக இந்த இடத்தை வெச்சுக்குங்கன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அந்த இடத்துல குடிசை போட்டுக்கிட்டு இன்னைக்கு வரைக்கும் குடியிருந்துக்கிட்டு இருக்கேன். அந்த நேரத்துல தம்பி எனக்கு ரொம்பவே ஒத்தாசையாக இருந்து ரெண்டு பிள்ளைகளையும் வளர்க்க உதவிகள் செஞ்சான். ரெண்டு வருஷம் கழிச்சுதான் என் கணவர் என்னைத் தேடி வந்தாரு. வந்து என்னை சமாதானப்படுத்தினாரு. அங்கே வரமாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டேன். `பொண்டாட்டி, புள்ளைங்க முக்கியம்னா எங்களோட இங்கேயே இருங்க. உங்களையும் நானே பார்த்துக்கிறேன்’னு சொன்னேன்.

அதுக்கப்புறம் இப்பவரைக்கும் அவரும் இங்கேயே இருந்துட்டாரு. ஒரு ஆம்புளப் புள்ளை இருந்தா நல்லா இருக்கும்னு ஆசைப்பட்டேன். ஆனா, கடைசிவரைக்கும் நிறைவேறவே இல்லை. மொதல்ல ரெண்டு பொம்பளப் புள்ளைகள். அதுக்கப்புறம் பிறந்த ரெண்டும் பொம்பளப் புள்ளைகள்தான். `நாலு பொம்பளப் புள்ளைகளை எப்படி வளர்க்கப்போற... ரெண்டு புள்ளைகளைத் தத்துக்கொடுத்துடு. கல்யாணம் பண்ணிக்கொடுக்கிற பிள்ளைகளை ஏன் படிக்கவெக்கிற... வீட்டு வேலை பார்க்க வை’னு உறவுக்காரங்க சொன்னாங்க. ஆனா, அவங்க சொல்ற எதையும் நான் கேட்கலை. நாம கஷ்டப்பட்டாலும், பிள்ளைகளை நல்லா பார்த்துக்கணும்னு வைராக்கியமாக இருந்தேன். பிள்ளைகளுக்கு நம்மால பெருசா சீரு, செனத்தி கொடுத்து அனுப்ப முடியாட்டியும் படிக்கவெச்சு அனுப்பணும். படிச்சா அந்தப் புள்ளை அது வழியைப் பார்த்துக்கும்னு நம்பிக்கை இருக்கு.

ஊரடங்கால் தவிக்கும் மீனாட்சி குடும்பம்
ஊரடங்கால் தவிக்கும் மீனாட்சி குடும்பம்

ஆரம்பத்துல எனக்கு உதவியா இல்லாட்டியும், என்னோட சேர்ந்ததுக்கு அப்புறம் வீட்டுக்காரரு பிள்ளைகளுக்காகவாவது சம்பாதிச்சு கொடுத்தாரு. இப்போ, கொரோனா நேரத்துல அவருக்கு வேலை இல்லை. எனக்கும் முன்னாடி மாதிரி வேலையெல்லாம் செய்ய முடியலை. ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் கோயம்புத்தூருக்கு வேலைக்குப் போயிருக்காரு. அங்கே தனிமைப்படுத்தப்பட்டு இருக்காரு. ரேசன் அரிசி இருக்கறதால, ஏதோ சமாளிக்கிறோம். சாப்பாடு பிரச்னையையெல்லாம் சமாளிச்சாலும், இப்போதைக்கு புள்ளை படிப்புக்கு செல்போன் வாங்கிக் கொடுக்க முடியலைன்னு வருத்தம்தான். வித்துட்டு வாங்கிக்கொடுக்கக் குண்டூசி நகைகூட இல்லை. இப்போதைக்கு செல்போன் வாங்கிக் கொடுக்க முடியாது. பள்ளிக்கூடத்தைத் திறந்துடா, அந்தப் பிரச்னை இருக்காதுல்ல... அதனால, பள்ளியைச் சீக்கிரமாக திறக்கணும்னு ஆண்டவன்கிட்ட வேண்டிக்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு