Published:Updated:

`போராட்டங்களுக்கு நிதி உதவியா?!' -பணப்பரிமாற்ற சர்ச்சை குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா

`குடியுரிமை திருத்த எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நிதி உதவி அளிக்கிறது என சிலர் அவதூறு பரப்பி வருகிறார்கள்'.

`குடியுரிமை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நிதி உதவி அளிக்கிறது' என்ற குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பின் நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.

மதுரையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தமிழகத் தலைவர் முகமது இஸ்மாயில், ``மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நிதி உதவி அளிக்கிறது எனச் சிலர் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.

முகமது இஸ்மாயில்
முகமது இஸ்மாயில்

ஜனநாயக முறையில் நாங்கள் போராடி வருகிறோம். எங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வரவில்லை. எங்கள் தொண்டர்களிடமிருந்துதான் சந்தா வசூலிக்கிறோம். அதன் மூலம்தான் இயக்கத்தை நடத்தி வருகிறோம். வழக்கறிஞருக்கு கொடுத்ததாகச் சொல்லும் பணப்பரிமாற்றம் 2017-ல் ஹதியா என்ற பெண்ணின் வழக்குக்காக வழங்கப்பட்டது. அதைப் பலமுறை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டோம்.

நாங்கள் இந்திய நாட்டின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறவர்கள். எங்கள் வளர்ச்சி பிடிக்காமல் இதுபோன்ற ஆதாரமற்ற அவதூறைத் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். நாங்களும் விளக்கம் அளித்து வருகிறோம். எங்களைத் தடுத்து நிறுத்த விரும்புகிறவர்களின் மலிவான பிரசாரத்துக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா பணிந்து போகாது" என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு