Published:Updated:

`தொழில் முழுசா முடங்கிப்போச்சு!' - கோடை வியாபாரத்தை தொலைத்த மண்பாண்ட கலைஞர்கள்

மண்பாண்ட பொருள்கள்
மண்பாண்ட பொருள்கள்

கோடையில்தான் பானை, குடிதண்ணீர் ஜாடி என்று அதிக வியாபாரம் இருக்கும். ஆனா, இந்த முறை எல்லாத்தையும் கொரோனா கெடுத்துவிட்டது என மானாமதுரை மண்பாண்ட கலைஞர்கள் வேதனை.

ஊருக்குள் வைகை நதி பாய்வதால் மானாமதுரை மக்களுக்கு மண்பாண்ட தொழிலும் ஓர் அடையாளமாக விளங்குகிறது. கார்த்திகை சுட்டி முதல் கடம் வரை தயார் செய்து அசத்துகின்றனர். சிவகங்கை மாவட்ட மானாமதுரை குலாலர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட மண்பாண்ட கலைஞர்கள் நேடியாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாண்டி
பாண்டி

இந்தத் தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைத்து வருகின்றனர். ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் பானை, குடிநீர் ஜாடிகளை அதிகளவு விற்பனை செய்வார்கள். இந்தாண்டு கொரோனா பாதிப்பால் வியாபாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து மாற்றுத்திறனாளி மண்பாண்ட கலைஞர் பாண்டி, ``எங்கள் குடும்பம் மானாமதுரையில் நான்கு தலைமுறையாக மண்பாண்ட தொழில் செய்துவருகிறோம். சிறுவனாக இருக்கும்போதே மண்பாண்ட தொழிலை ஆர்வத்தில் கற்றுக்கொண்டேன். எனது இடது கை மட்டும் பாதிதான் இருக்கும். பிறவியிலேயே அப்படித்தான். அதனால் தொழில் செய்வதில் பெருசா எனக்கு கஷ்டம் தெரியாது.

சீஸனுக்கு ஏற்றவாறு மண்பாண்ட பொருள்கள் செய்கிறோம். அப்பாவும் அண்ணனும் இதே தொழிலைத்தான் செய்கின்றனர். சாமி சிலைகள், விளக்குகள், புரவி, பொம்மை, அடுப்பு, முளைப்பாரி சட்டி, உண்டியல், பானை, ஊறுகாய் ஜாடி என்று எல்லாப் பொருள்களும் செய்கிறோம். கஸ்டமர் ஆர்டர் கொடுத்தால் அவர்களுக்கு விரும்பிய பொருள்களும் செய்துகொடுப்போம். அதிகாலை 3 மணிக்கே வேலைக்கு வந்துவிடுவோம்.

மண்பாண்ட பொருள்கள்
மண்பாண்ட பொருள்கள்

அப்ப தான் மண்ணு குழைக்க சரியா இருக்கும். வெயிலுக்கு முன்னவே தயார் செய்துட்டா நல்லது. கணிமண், குறுமணல் உள்ளிட்ட மூலப் பொருள்கள்தான் சேர்ப்போம். அதனால சுகாதார கேடு இருக்காது. இந்த மாதிரி தரமான மண்பாண்ட பொருள்களை நாங்க செய்துவருகிறோம். ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதல் மண்பானை வியாபாரம் சூடு பறக்கும். குட்டிப்பானை, பெரிய பானை, தண்ணீர் ஜாடி, குட்டி மண் கேன் உள்ளிட்ட பொருள்கள் அதிகமாகப் போகும். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தொழில் முழுமையா முடங்கிப்போச்சு. என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறோம்” என்றார்.

மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு தொழிற்சங்க தலைவர் லெட்சுமணன், ``மண்பாண்ட பொருள்களை வடிவமாகக் கொண்டுவந்து விற்பனை செய்யும்வரை தாயின் வயிற்றில் குழந்தை போலத்தான். மிகவும் பக்குவமாகப் பாதுகாக்க வேண்டும். இப்படித்தான் ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து செய்கிறோம். குறைந்த வருமானம் என்றாலும் எங்களுக்கு மனநிறைவான தொழிலை செய்கிறோம்.

லெட்சுமணன்
லெட்சுமணன்

இப்படியான சூழலில் கொரோனா எங்கள் வருமானத்தைக் காலி செய்துவிட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் எங்களுக்கு ஆண்டுதோறும் 5,000 ரூபாய் மழை நிவாரணம் வழங்குவதாகத் திட்டம் அறிவித்து வழங்கினார். இந்நிலையில் இந்தாண்டு சட்ட சபையில் அது தொடர்பாகப் பேச்சு எடுத்தபோது கொரோனா பிரச்னை உருவெடுத்ததால் அது கைவிடப்பட்டுள்ளது. எனவே, அந்தத் தொகையை அரசு எங்களுக்கு உடனே வழங்கி எங்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு