Published:Updated:

முக்கொம்பு: சவுக்குக் கட்டையால் முட்டு! - மேலணை பவர்ஹவுஸ் கட்டடத்தின் பரிதாப நிலை

திருச்சி இடிந்த நிலையில் இருக்கும் கட்டடம்
திருச்சி இடிந்த நிலையில் இருக்கும் கட்டடம்

சீரமைக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், அதிகாரிகள் காதில் வாங்கிக்கொள்வதில்லை.

``இடிந்துவிழும் நிலையில் இருக்கும் முக்கொம்பு மேலணை பவர்ஹவுஸைச் சீரமைக்க வேண்டும். இல்லையேல் இந்தக் கட்டடம் பலரது உயிரைக் காவு வாங்கிவிடும் என்று பலமுறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியரிடம் மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று ஆதங்கப்படுகின்றனர் விவசாயிகள்.

பவர்ஹவுஸ்
பவர்ஹவுஸ்

திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணைக் கொள்ளிடம் ஆற்றில் உள்ள கதவணை 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகச் சேதமடைந்தது. இதனால் தண்ணீர் வீணாகக் கடலில் கலந்தது. இந்நிலையில், அந்த இடத்தில் தற்காலிக தடுப்பணை அமைக்கப்பட்டது. மேலும், சேதமடைந்த பாலத்தின் அருகே புதிய கதவணை கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இச்சூழலில், முக்கொம்பு மேலணையில் உள்ள கதவணை ஷட்டர்களைத் திறக்க முக்கியக் காரணியாக இருக்கும் பவர்ஹவுஸ் கட்டடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வரும் தண்ணீர் முக்கொம்பில் உள்ள தடுப்பணை மூலம் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் பிரித்து அனுப்பப்படுகிறது. இங்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் தடுப்பணைகளில் உள்ள ஷட்டர்களை ஏற்றி இறக்க மின்சாதனங்கள் நிறுவப்பட்டுள்ள பவர் ஹவுஸ் ஸ்டேஷன் 1977-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தில் 100 கிலோவாட் மின் திறன் கொண்ட மின் சாதனங்கள் மற்றும் 40 கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டர் இயந்திரம் உள்ளிட்டவை உள்ளன.

மரத்தைக் கொண்டு முட்டுக்கொடுத்துள்ளனர்.
மரத்தைக் கொண்டு முட்டுக்கொடுத்துள்ளனர்.

அணையின் ஷட்டர்கள் இயக்குவதற்கு மிக அவசியமான இவை வைக்கப்பட்டுள்ள கட்டடம் மிகவும் பழுதடைந்து, மேற்கூரைகள் மற்றும் சுற்றுச் சுவர் முழுவதும் விரிசல் விட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தைச் சீர் செய்யாமலும், மாற்றுக் கட்டடத்துக்கு ஏற்பாடு செய்யாமலும், அந்தக் கட்டடத்திலேயே சவுக்குக் கட்டைகளைக் கொண்டு முட்டுக் கொடுத்து வைத்துள்ளனர் பொதுப்பணித்துறையினர்.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் அதிக மழை பெய்தால் இந்த பவர்ஹவுஸ் கட்டடம் இடிந்து விழும். அப்படி இடிந்து விழுந்தால் அணையின் ஷட்டர்களை இயக்குவதில் சிக்கல் உண்டாகும். மேட்டூரிலிருந்து குறுவை சாகுபடிக்காகத் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பவர்ஹவுஸ் கட்டடம் இத்தகைய மோசமான நிலையில் உள்ளதைக் கருத்தில்கொண்டு பொதுப்பணித்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் தண்ணீரை நம்மால் சேமிக்க முடியும்.

பவர்ஹவுஸ் கட்டடம்
பவர்ஹவுஸ் கட்டடம்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தரப்பில் பேசினோம். ``திருச்சி முக்கொம்பில் உள்ள தடுப்பணை ஏற்கெனவே உரிய பராமரிப்பு இல்லாததால் முக்கொம்பு கொள்ளிடம் மதகுகள் இடிந்து விழுந்தன. இன்று வரையிலும் அதைக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பவர்ஹவுஸ் பழுது அடைந்திருக்கிறது.

இடிந்த நிலையில் இருக்கும் கட்டடம்
இடிந்த நிலையில் இருக்கும் கட்டடம்

இதைச் சீரமைக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், அதிகாரிகள் காதில் வாங்கிக் கொள்வதில்லை. உயிர்களைக் காவு வாங்கிய பின்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் போல. இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல், உடனே இப்பகுதியில் உள்ள பவர்ஹவுஸ் ரூம்மை சரிசெய்ய வேண்டும். இல்லையேல் போராட்டம் நடத்துவோம்" என்று எச்சரித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு