Published:Updated:

ராமேஸ்வரம்: `மின் பாதையில் பழுது; கண்டறியும் பணியில் ஊழியர்கள்!' - மின் தடையால் தீவு மக்கள் அவதி

மின் தடையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்.
மின் தடையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம். ( உ.பாண்டி )

புயல் பாதிப்புகளை சமாளிக்க பேரிடர் மீட்பு குழுக்கள், வருவாய், காவல், தீயணைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், புயலின் போது ஏற்படும் மின் தடையை சமாளிக்க தேவையான பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் உதயகுமார் கூறியிருந்தார்.

வங்க கடலில் உருவான புரெவி புயல் வலு இழந்த நிலையில் ராமேஸ்வரம் தீவில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தீவுப் பகுதியில் உள்ள மக்கள் குடிநீர் மற்றும் உணவு தேவைகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தொடரும் மின் தடையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புரவி புயல் பாதிப்பில் இடிந்த தனுஷ்கோடி தேவாலயம்
புரவி புயல் பாதிப்பில் இடிந்த தனுஷ்கோடி தேவாலயம்
உ.பாண்டி

கடந்த மாத இறுதியில் இலங்கை அருகே வங்க கடலில் உருவான புரெவி புயல் 3-ம் தேதி நள்ளிரவிலோ அல்லது 4-ம் தேதி அதிகாலையிலோ பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். புயலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னேர்பாடுகளை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டன. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ராமநாதபுரத்தில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது புயல் பாதிப்புகளை சமாளிக்க பேரிடர் மீட்பு குழுக்கள், வருவாய், காவல், தீயணைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், புயலின் போது ஏற்படும் மின் தடையை சமாளிக்க தேவையான பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் புரெவி புயல் நேற்று முன் தினம் மாலை வலு இழந்தது. இந்த புயல் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதுடன் தற்போது வரை பாம்பனில் இருந்து 70 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. சுமார் 30 மணி நேரத்திற்கு மேலாக இந்த தாழ்வு மையம் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் அவ்வப்போது மழை கொட்டியது. ராமேஸ்வரத்தில் 11 செ.மீ, தங்கச்சிமடத்தில் 7 செ.மீ, பாம்பனில் 6.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டம்.
உ.பாண்டி

புரெவி புயல் வலு இழந்ததால் ராமேஸ்வரம் தீவில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால் கடந்த 2-ம் தேதி இரவு முதல் இன்று வரை ராமேஸ்வரம் தீவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தீவில் வசித்து வரும் மக்கள் குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான தண்ணீர் கிடைக்காமல் அவதியுற்றுள்ளனர். பெரும்பாலான மக்கள் மழைநீரை பாத்திரங்களில் பிடித்து வைத்து அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தொடர் மின் தடையினால் செல் போன்கள் ஆஃப் ஆகிவிட்டதால், பிறரை தொடர்பு கொள்ளவும் முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் ஆன் லைன் மூலம் பாடம் பயின்று வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கல்லூரி தேர்வுகளை ஆன் லைன் மூலம் எழுதும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பாம்பன்: தீவில் சிக்கிய மீனவர்கள் மீட்பு; படகுகள், வீடுகள் சேதம்! - வலுவிழந்த புரெவி

மேலும் பெரும்பாலான வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த இன்வெட்டர்களும் செயல் இழந்து போனதால், காலை, இரவு நேரங்களில் உணவு தயாரிக்க முடியாமல் ஹோட்டல்களுக்கு படையெடுத்து வருகின்றனர். பெரிய ஹோட்டல்கள் தவிர மற்ற ஹோட்டல்களில் ஜெனரேட்டர் வசதி இல்லாததால் அவைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் தீவில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
உ.பாண்டி

இந்நிலையில் 4 நாட்களாக ஏற்பட்டுள்ள மின் தடையை சீர் செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தாலுகா செயலாளர் முருகானந்தம், மாவட்ட குழு நிர்வாகி செந்தில்வேல் தலைமையில் ராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே போல் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் தாலுகா செயலாளர் சிவா தலைமையில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன் மின்வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தின.

இந்நிலையில், ``மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் வரும் மின் பாதையில் ஏற்பட்டுள்ள பழுதினை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனை கண்டறிய 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்றைக்குள் மின் தடை சீர் செய்யப்பட்டு விடும்'' என மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் கூறியுள்ளார்.

கடலில் உருவான புரெவி புயல் எங்கு மையம் கொண்டுள்ளது என கண்டறியபட்டுள்ள நிலையில் தரையில் செல்லும் மின்சாரத்தில் எங்கு தடை ஏற்பட்டுள்ளது என மின் வாரிய பணியாளர்களால் கண்டறிய முடியாததால் ராமேஸ்வரம் தீவு மக்கள் தொடர் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனை விரைவு படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகமும் ஏனோ இதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு