Published:Updated:

``உயிரைக்கொல்லும் வைரஸூக்கு `டெல்டா' பெயரா?!" - WHO முடிவுக்கு இப்படியும் ஓர் எதிர்ப்பு

உலக சுகாதார அமைப்பு - WHO
உலக சுகாதார அமைப்பு - WHO

``டெல்டாவின் நற்பெயரை, மனித உயிரை அழிக்கும் பேரழிவு வைரஸூக்கு சூட்டுவது ஏற்புடையதாக இல்லை. எனவே, `டெல்டா' என்று பெயர் சூட்டுவதை மறுபரிசீலனை செய்து, வேறு பெயரை சூட்ட வேண்டும்".

உருமாறிய கொரோனா வைரஸ்கள் எந்தெந்த நாடுகளிலிருந்து கண்டறியப்பட்டனவோ, அவையனைத்தும் அந்த நாடுகளின் பெயரால் அழைக்கப்பட்டு வந்தன. உதாரணமாக, இந்திய வேரியன்ட், பிரிட்டன் வேரியன்ட், தென்னாப்பிரிக்க வேரியன்ட். ஆனால், இவற்றை அந்தந்த நாடுகள் விரும்பவில்லை. இந்தியாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து நாடுகளின் பெயரைத் தவிர்த்து கிரேக்க எழுத்துகளின் அடிப்படையில் இந்த உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு பெயர் சூட்டியது உலக சுகாதார நிறுவனம். இதன்படி இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸூக்கு `டெல்டா' எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால், இதற்கும் சில எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அதுவும் விநோதமான காரணங்களுடன்.

corona virus
corona virus
Pixabay

கொரோனா வைரஸ் பரவலால், உலக நாடுகள் கடந்த ஒராண்டுகளுக்கும் மேலாக கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றன. சீனாவில் முதல்முறையாக 2019-ல் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தத் தொற்று உலகம் முழுவதும் பரவியது. இந்நிலையில் அந்த கொரோனா வைரஸானது இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உருமாற்றம் அடைந்து புது வேரியன்ட்டாகவும் மாறியது. இப்படி அந்தந்த நாடுகளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸுக்கு அந்த நாட்டின் பெயரைச் சொல்லி அழைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இவ்வாறு அழைப்பதை, அந்த நாடுகள் விரும்பவில்லை. கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால், உலக சுகாதார நிறுவனம், உருமாறிய வைரஸ்களுக்கு கிரேக்க எழுத்துக்களின் அடிப்படையில் புதிய பெயர்களை சூட்டியுள்ளது. பிரிட்டனில் 2020 செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸுக்கு `ஆல்பா’ எனவும், தென்னாப்பிரிக்காவில் கடந்த வருடம் மே மாதம் கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸுக்கு `பீட்டா’ எனவும், பிரேசிலில் 2020 நவம்பரில் கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸுக்கு `காமா’ எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸுக்கு `எப்சிலான்’ எனவும் உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியுள்ளது.

உருமாறிய வைரஸ்களின் பெயர்கள்
உருமாறிய வைரஸ்களின் பெயர்கள்

இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முறையாக கண்டறியப்பட்ட B1.617.1 என அழைக்கப்படும் கொரோனா வைரஸுக்கு `கப்பா’ எனவும், அதன்பின் கண்டறியப்பட்ட B1.617.2 எனும் வைரஸுக்கு `டெல்டா’ எனவும் உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. இந்நிலையில்தான் B1.617.2 கொரோனா வைரஸூக்கு டெல்டா என சூட்டியிருப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய கிளையின் டெல்லி அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ``உருமாற்றம் அடைந்துள்ள ஒருவகை கொரோனா வைரஸூக்கு உலக சுகாதார அமைப்பு `டெல்டா’ என பெயர் சூட்டியுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. கிரேக்க எண்களின் அடிப்படையில் ஆல்பா, பீட்டா, காமா போன்ற ஒன்றான டெல்டா எனப் பெயர் சூட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது. `டெல்டா' என்பது கிரேக்க எண்களில் ஒன்றாக இருந்தாலும், பெரும்பாலும் டெல்டா என்றால் ஆற்றுப்படுகை அல்லது விவசாயத்துக்கு ஏற்ற சமதள வளமான விளை நிலப்பகுதியாகும்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

அவ்வாறான டெல்டாவின் நற்பெயரை, மனித உயிரை அழிக்கும் பேரழிவு வைரஸூக்கு சூட்டுவது ஏற்புடையதாக இல்லை. எனவே, `டெல்டா' என்று பெயர் சூட்டுவதை மறுபரிசீலனை செய்து, வேறு பெயரை சூட்ட வேண்டும்" என அக்கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மருத்துவர் மரியா, ``முக்கியமான அறிவியல் தகவல்களை தாங்கி நிற்கக் கூடிய அறிவியல் பெயர்கள் ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் எனவும், தற்போது வைரஸ்களுக்கு சூட்டப்பட்டுள்ள புதிய பெயர்கள் அறிவியல் பெயர்களை மாற்றாது" எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு