Published:Updated:

`ஆன்லைன் விற்பனை தமிழகத்தை மதுவின் பிடியிலிருந்து மீட்கும்!'- காரணம் சொல்லும் பிரசன்ன நடராஜன்

ஆன்லைனில் மது விற்பனை செய்யும் பிரசன்ன நடராஜன்
ஆன்லைனில் மது விற்பனை செய்யும் பிரசன்ன நடராஜன்

தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்ட கடந்த 43 நாள்களில் கள்ளச்சாராயம் கரைபுரண்டு ஒடியது. வார்னிஷ், ஆய்வக ஸ்பிரிட் என்று கண்டதையும் குடித்து மாய்த்துக்கொண்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும் 10-க்கும் மேல்!

தமிழகத்தில் சுமார் 30 லட்சம் பேர் தினப்படி குடிப்பவர்கள். மேலும் 50 லட்சம் பேர் வார இறுதி நாள்களில், பார்ட்டி நடக்கும்போது, விசேஷ நாள்களில் சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே ஏற்படுத்திக்கொண்டு குடிப்பவர்கள். மாதம் ஒன்றிற்கு 50 லட்சம் கேஸ் மதுபாட்டில்கள் விற்பனை ஆகின்றன. வருடத்துக்கு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் துறை இது. இந்த நிலையில் மதுவிலக்கு என்கிற கோஷம் மட்டுமே பலராலும் முன்னிறுத்தப்படுகிறது. அதேநேரம், டெக்னாலஜியைப் பயன்படுத்திப் படிப்படியாகத்தான் மது விலக்கை அமல்படுத்தமுடியும் என்பதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு.

மே 8-ம் தேதியன்று தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை அமல்படுத்தவில்லை என்பதால், இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஒருவேளை ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்யவேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தால், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு டோர் டெலிவரி முறையில் செய்யலாம் என்று நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள்.

nilgiri tasmac
nilgiri tasmac

சத்தீஸ்கர், பஞ்சாபில் டோர் டெலிவரி ஆரம்பம்!

தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்ட கடந்த 43 நாள்களில் கள்ளச்சாராயம் கரைபுரண்டு ஓடியது. வார்னிஷ், ஸ்பிரிட்.. என்று கண்டதையும் குடித்து மாய்த்துக்கொண்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும் 10- க்கும் மேல்! கடந்த மே 4- ந் தேதியன்று அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட, மே 7- ம் தேதியன்று அவசர அவசரமாகத் தமிழக அரசும் மதுக்கடைகளைத் திறந்தது. சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஆன்லைனிலும் மது விற்பனையைத் தொடங்கியுள்ளன. அதே போல, தமிழக அரசு கூட வெப்-சைட், மொபைல் ஆப்-பை உருவாக்கி ஆன்லைன் மது விற்பனை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மீண்டும் அப்பீல்?

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டதால், சுமார் 3 ,800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலும், தமிழக அரசு இழப்பைச் சந்திக்கத் தயாராக இல்லை. அதனால்தான், மதுக்கடைகளைத் திறக்கும் அவசரம் காட்டியது. அ.தி.மு.கவின் தோழமைக் கட்சியான பா.ஜ.க-வினரே டாஸ்மாக் திறப்பு விவகாரத்தில் அரசுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பினர் மதுக்கடைகளை மூடச் சொல்கிறார்கள். போராட்டங்களை நடத்தினார்கள்.

நீதிமன்றம் முந்தைய தீர்ப்பிலேயே ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி செய்யச் சொல்லியிருந்தது. ஏற்கெனவே ஷாப்பிங் மால், வணிக நிறுவனங்களில் எலைட் மதுக்கடைகள் என்கிற பெயரில் உயர்தர வருவாய்ப் பிரிவனரைக் குறி வைத்து மதுக்கடைகள் உள்ளன. பெரும்பாலான எலைட் கடைகளில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை முறையை டாஸ்மாக் நிர்வாகம் செய்து வருகிறது. இதைத் தமிழகம் முழுவதும் உள்ள 5,300 கடைகளுக்கும் விரிவுபடுத்தவேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பே, ஆன்லைன் முறையை அனைத்துக் கடைகளுக்கும் விரிவுபடுத்த டெண்டர் அறிவித்துள்ளது டாஸ்மாக். ஜூன் 8- ம் தேதி டெண்டருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நீதிமன்றத்தில் சொல்லி, கால அவகாசம் கேட்டு அப்பீல் செய்ய டாஸ்மாக் துறையினர் மும்முரமாயிருக்கிறார்கள்.

tasmac
tasmac

ஆன்லைன் வர்த்தகம் என்பது தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகிவருவது தெரிந்ததே! தொழில்நுட்பத்தை மதுபானங்கள் விற்பனைக்கு எப்படிப் பயன்படுத்தமுடியும், இந்த வர்த்தகத்தில் ஏற்கெனவே யாராவது இருக்கிறார்களா என்று விசாரித்தபோது, நமக்குக் கிடைத்த பெயர் பிரசன்ன நடராஜன். இந்தியாவில் முதன்முதலாக மதுக்கடைகளில் ஆன்லைன் பணப்பரிமாற்றத்தை அறிமுகப்படுத்தியவர் சென்னையைச் சேர்ந்த பிரசன்ன நடராஜன். இவர் இந்த பிசினஸில் கடந்த சில ஆண்டுகளாக இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். இவரைப்போலவே, ஆன்லைனில் கால்பதிக்கப் பலரும் தயாராகிவருகின்றனர்.

வரும் ஆனால்... வராது?

டாஸ்மாக் கடைகளில் கடந்த 10 மாதங்களில் 7,100 வழக்குகள் கூடுதல் விலைக்கு மதுவை விற்றதாகப் பதிவாகியிருக்கிறது. இந்த முறைகேடு ஆன்லைன் முறை வந்தால் அடியோடு ஒழியும். மதுப் பிரியர்களின் முழு விவரங்களை மொபைல் ஆப்-பில் பதிவு செய்யும்போது வயதையும் குறிப்பிடவேண்டும். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது தரக்கூடாது. டோர் டெலிவரி செய்யும்போது வயதுக்கான ஆதாரமாக ஐடியைக் காட்டினால்தான் சம்பந்தப்பட்டவரிடம் மதுபாட்டில்களை விநியோகிப்பார்கள். யார் எவ்வளவு வாங்குகிறார்கள், எந்த வயதுக்காரர்கள் மதுவைக் குடிக்கிறார்கள் போன்ற அனைத்து விவரங்களும் மொபைல் ஆப்பில் பதிவாகும். இதை வைத்து வேறு சில ஆய்வுகளையும் நடத்தமுடியும். இதுமாதிரி நிறைய ப்ளஸ் பாயின்டுகள் இருப்பதை அரசியல் பிரமுகர்கள், மதுபானக் கடைக்காரர், பார் நடத்துகிறவர், பெரிய பணக்காரர்கள் என்று பலரும் ஏற்றுக் கொள்ள மறுத்ததன் விளைவு பல மாநிலங்களில் ஆன்லைன் முறை கைவிடப்பட்டது. தற்போது உச்சநீதி மன்றமும், உயர் நீதின்றமும் அந்த முறையைத் தொடரச் சொல்லி மாநில அரசுக்கு உத்தரவிட்டிருப்பதால் திடீர்த் திருப்பம். முட்டுக்கட்டை போட்டவர்கள் வேறு கோணத்தில் நீதிமன்றத்தை அணுக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

ஆன்லைனில் மது விற்பனை
ஆன்லைனில் மது விற்பனை

யார் இந்தப் பிரசன்ன நடராஜன்?

சென்னையை, தன் அலுவலகத் தலைமையிடமாக வைத்திருக்கும் இவருக்குக் கோவாவில் 40 பணியாளர்கள் பணிபுரியும் மது உற்பத்தித் தொழிற்சாலையும் இயங்குகிறது. 2007 முதல் மது உற்பத்தி பிசினஸைச் செய்து வந்த அவர், 2015- ல் தனது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யும் மதுபானங்களின் அளவைக் குறைத்துக்கொண்டு வேறு வகையில் சிந்தித்தார். மதுவால் விளையும் ஆபத்துகளைத் தவிர்க்கும் வகையிலும் படிப்படியாக மதுப் பிரியர்களை அந்தப் பழக்கத்திலிருந்து விடுவிக்கவும் ஆன்லைன் முறையைக் கையில் எடுத்தார். அதற்காக 'ஹிப் பார்'என்கிற மொபைல் அப்ளிகேஷனைத் தொடங்கினார். வெப்சைட்டும் உண்டு. ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, டோர் டெலிவரி ஆகிய விஷயங்களில் ஏற்கெனவே அனுபவம் பெற்றவர்.

எலைட் டாஸ்மாக்கில் ஆன்லைன் பரிவர்த்தனை
எலைட் டாஸ்மாக்கில் ஆன்லைன் பரிவர்த்தனை

நெடுஞ்சாலை ஓர மதுக்கடைகளை இந்தியா முழுக்க உச்சநீதிமன்றம் மூடச்சொன்னபோது, பிரச்னை உருவானது. அப்போது, பிரசன்ன நடராஜன் கர்நாடகா அரசை அணுகி, தனது ஆன்லைன், மொபைல் ஆப் பற்றிச் சொல்ல... உடனே அங்கே அமல்படுத்தப்பட்டது. ஆன்லைனில் புக்கிங் செய்தால் டோர் டெலிவரி செய்யும் முறையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுடன் டெஸ்டிங் அடிப்படையில் பெங்களூரில் பிரசன்ன நடராஜன் செய்துகொள்ள அந்த மாநில அரசு அனுமதி கொடுத்தது. தனது வெப்சைட், ஹிப் பார் என்கிற மொபைல் ஆப் இவற்றின் மூலம் டோர் டெலிவரி செய்தார். சுமார் 75 ஆயிரம் கஸ்டமர்களுக்கு மதுபாட்டில்களைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார்.

ஆளும் தரப்பை அதிர்ச்சியடைய வைத்த மய்யத்தின் `மூவ்’ -டாஸ்மாக் வழக்கில் நடந்தது என்ன?

ஆனால், அங்கே இந்த ஆன்லைன் முறையில் சில சட்டப் பிரச்னைகளைப் பாரம்பர்ய பிசினஸ் பிரமுகர்கள் கிளப்பினர். விவகாரம் உச்சநீதிமன்றம் வரை போய் நிலுவையில் நிற்கிறது. கர்நாடகா போலவே வேறு சில மாநில அரசுகளையும் அணுகிப்பார்த்த பிரசன்னாவுக்கு ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள். அதனால், ஒன்றரை வருடக்காலம் தொடர்ந்த பிசினஸை மீண்டும் தொடர முடியவில்லை. அதையடுத்து, இதே பிரசன்ன நடராஜன், தமிழகத்தில் உள்ள எலைட் கடைகளில் 2017 - ம் ஆண்டு டிசம்பர் முதல் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறைக்கு அனுமதி வாங்கி நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், எலைட் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. அதனால், மொபைல் ஆப் தற்காலிகமாகச் செயல்படவில்லை.

தமிழகத்திலும் ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், பிரசன்ன நடராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஆன்லைனில் மது விற்பனைக்கு எதிர்ப்பு உள்ளதா?

''இந்தியாவில் மதுபானம் தொடர்பான பிசினஸில் பழைய சட்டங்கள்தான் உள்ளன. தற்போது உலக அளவில் எவ்வளவோ `Advanced Technology’கள் வந்துவிட்டன. மொபைல் ஆப்-பில் கால் டாக்ஸிகள் கால்பதிக்க வந்தபோது, எதிர்ப்புக் கிளம்பி அடங்கியது அல்லவா? அதைப்போல, Starting Trouble. அவ்வளவுதான்! டெக்னாலஜியைப் பயன்படுத்தினால், மதுப் பிரியர்கள் கடைகளின் முன்பு பெருந்திரளாகக் கூடுவதைத் தவிர்க்கலாம். படிப்படியாக மது விலக்கை அமல்படுத்தவும் சான்ஸ் உண்டு. மதுப் பிரியர்களால் எவ்வளவு சாலை விபத்துகள், குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன! மே 7 -ந் தேதி தமிழகத்தில் மதுபானக் கடைகளைத் திறந்த தினத்தில் நடந்த கொலைகள், தாக்குதல்கள், விபத்துகளைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. இவற்றையெல்லாம் தவிர்க்க வீட்டில் இருந்தே மதுபானங்களைக் குடித்தால் சமூகக் குற்றங்கள் குறையும் என்பது என் கருத்து. இதுமாதிரியான சமூகப் பிரச்னைகளை ஆராய்ந்துதான் நீதிமன்றம் டோர் டெலிவரி முறையில் மதுபானத்தை விநியோகிக்கச் சொல்லியிருக்கிறது.''

ஆன்லைன் மது விற்பனை
ஆன்லைன் மது விற்பனை

மதுவை வீட்டில் வைத்துக் குடிப்பது என்பதெல்லாம் நமது பாரம்பர்யத்துக்குச் சரிப்பட்டு வருமா? இதனால் வீட்டு வன்முறைகள் மேலும் அதிகரிக்குமே?

'மது குடிப்பதால் ஏற்படும் தீமைகளை மட்டுமே காலம் காலமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் எனக்கில்லை. அதை முழுமையாகச் செயல்படுத்தும் முன்பு, படிப்படியான சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். வீட்டில் குடிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதால் குடியின் அளவும், காலமும் குறையும். குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து - ஆன்லைன் முறை மூலம் படிப்படியாக மதுப்பழக்கத்தைக் குறைக்கலாம் என்பது என் கருத்து.'

ஆன்லைன் விற்பனை மூலம் மது விற்பனையைக் குறைக்க முடியுமா... எப்படி?

”பல வருடங்களாகக் குடிப்பவரை குடிநோயாளி என்றுதான் அழைக்கவேண்டும். நம் குடும்பத்தில் ஒருவருக்கு நோய் கண்டால், எப்படி சிகிச்சை தருவோமோ அதைப்போலத்தான் குடிநோயாளியையும் குடும்பத்தினர் இனி நடத்தவேண்டும். மதுக்கடையில் போய் எவ்வளவு பாட்டில்கள் வேண்டுமானாலும் ஒருவர் வாங்கலாம் என்கிற நிலை மாறும். ஆன்லைனில் கோட்டா முறையில் இவ்வளவுதான் தரமுடியும் என்று நிர்ணயிக்கலாம். முன்கூட்டியே திட்டமிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் ஆன்லைனில் புக்கிங் செய்யமுடியும். கண்ட நேரத்தில் வாங்க முடியாது. வீட்டுக்கே வருவதால் இஷ்டத்துக்கு மதுவை வாங்கவோ, குடிக்கவோ முடியாது. நேரம், இடம் ஆகியன பிரதானமாக இருக்கும். எதிர்கால இளைஞர் சமுதாயத்தை இந்தக் கொடிய பழக்கத்திலிருந்து படிப்படியாக விடுவிக்கலாம். அடுத்த 15 வருடத்துக்குப் பிறகுதான் இப்போது கொண்டுவரும் ஆன்லைன் பலன்களை உணர முடியும்.”

தமிழ்நாட்டில் டாஸ்மாக்குடன் நீங்கள் பிசினஸ் செய்கிறீர்களா?

ஏற்கெனவே டாஸ்மாக்குடன் நாங்கள் அக்ரிமென்ட் போட்டபடி, இ-வாலட் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான வசதியைச் செய்திருக்கிறோம். அதன்படி, எங்கள் ஆப்பை டவுன்லோடு செய்யவேண்டும். அதன் உள்ளே போனால், டாஸ்மாக் எலைட் கடைகளில் என்னென்ன பிராண்டுகள் உள்ளன, என்ன விலை என்பதை அறியலாம். ஆன்லைனில் எங்கள் வாலட்டில் பணம் டெபாசிட் வைத்துக்கொள்ளலாம். மதுபாட்டில் தேவைப்படுகிறவர்கள், நேரிடையாகக் கடைகளுக்குப் போய் அங்கே இருக்கும் QR Code-ல் மொபைலைக் காட்டினால் போதும். பணம் கைமாறும். உடனடியாக மது வாங்கலாம். மாதத்திற்கு அரசுக்கு 4 கோடி ரூபாய் வரை எங்கள் மொபைல் வாலட் மூலம் பணப்பரிவர்த்தனை பெற்றுத்தந்திருக்கிறோம். இதுவரை 40 முதல் 50 கோடி ரூபாய் டாஸ்மாக்கிற்குப் பெற்றுத் தந்திருக்கிறோம். தொலை நோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருவதால், எங்களுக்கு இதனால் ஒரு பைசா கூட வருமானம் இல்லை. ஒரு சேவையாகச் செய்தோம். எப்படி வாடிக்கையாளரின் சேவை செயல்படுகிறது என்பதை அறிய, எலைட் கடைகளில் எங்கள் பணியாளர்களை நிறுத்தியிருந்தோம்.”

ஆன்லைனில் மது விற்பனை
ஆன்லைனில் மது விற்பனை

பெங்களூரில் ஏன் உங்கள் திட்டம் தோல்வியடைந்தது?

”தோல்வி அல்ல! நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எங்களின் திட்டத்தை அந்த மாநில அரசு பலவித குறுக்குச் சோதனைகள் செய்தது. அனைத்திலும் பாஸ் செய்தோம். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். எங்கள் ஆப் மூலம் மது கேட்டவர்களின் வீடுகளுக்குச் சென்றபோது, வயதுக்கான ஆதாரம் கேட்பதுண்டு. 21 வயதுக்குக் குறைவான 500 பேர் மது கேட்டிருந்ததை அறிந்து, மது சப்ளை செய்யவில்லை. இதுவும் அந்த மாநில அரசுக்கே தெரியும். இருந்தாலும், அங்கே சில பிரச்னைகள். அதுபற்றி இப்போது வேண்டாமே?”

டெக்னாலஜியை எப்படி நடைமுறைப்படுத்த முடியும்?

”35 ஆயிரம் கோடி ரூபாய் பிசினஸ் செய்யும் இந்தத் துறையில் மதுப்பிரியவர்கள் நேரிடையாகக் கடைக்குத்தான் போகவேண்டிய நிலை உள்ளது. எங்கள் நோக்கம் அதில் சில மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்பதுதான். எங்கள் கம்பெனி, டெக்னாலஜியை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் ஒரு தூணாக இருப்போம். தேவைப்பட்டால், எங்கள் டெக்னாலஜியைப் பயன்படுத்தலாம். அரசாங்கமே ஒரு வெப்சைட்டை உருவாக்கி, மொபைல் ஆப் மூலம் டோர் டெலிவரி முறையைச் செயல்படுத்தலாம். அது அரசின் முடிவு. ஆனால், இந்த விஷயத்தில் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவேண்டும்.”

மதுக்கடைகள்
மதுக்கடைகள்

நீங்களே மது உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறீர்களே... பிசினஸ் நோக்கில்தான் இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்த நினைக்கிறீர்களா?

”அது எங்களது பழைய பிசினஸ். இந்த பிசினஸுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அதிலிருந்து கிடைத்த பாடங்கள்தான் 1ஹிப் பாரு’க்கு அஸ்திவாரம். படிப்படியாக மதுகுடிப்பதைக் கட்டுப்படுத்துவது எங்கள் குறிக்கோள். சமூக ரீதியாகச் செய்யவேண்டியதைத் தொழிலாக ஏன் செய்கிறோம் என்றால் இந்த டெக்னாலிஜியைச் செயல்படுத்த பெரும் முதலீடு தேவை. ஆகையால், பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக நடத்துகிறோம். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியால் தரப்படும் ‘ப்ரீ பெய்டு இன்ஸ்ட்ருமென்ட் லைசென்ஸ்’ மாதிரி மொபைல் வாலட் லைசென்ஸை 2015-ல் நாங்கள் வாங்கியிருக்கிறோம். மாநில அரசுகளுடன் பண டீலிங், மக்கள் பணத்தைக் கவனத்துடன் கையாள்வது போன்ற பல விஷயங்களில் ரிசர்வ் வங்கியின் முழுக் கண்காணிப்பில் செயல்படும் வகையில் வடிவமைத்திருக்கிறோம். எங்கள் மென்பொருளைப் பயன்படுத்தினால், அரசாங்கம் மது குடிக்கும் தனி நபர் அளவைக் கட்டுப்படுத்தமுடியும். மென்பொருளுக்கு உண்டான கட்டணத்தை மட்டும்தான் வாங்க நினைக்கிறோம். இவ்வளவு மது வகைகள் விற்றுக்கொடுத்தால் இவ்வளவு கமிஷன் என்கிற பேச்சுக்கே இடமில்லை. என்னைப் போன்ற பலரும் ஆன்லைன் வர்த்தகத்தில் இருப்பார்கள். அவர்களையும் கூட பயன்படுத்திக்கொள்ளலாமே? மதுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த இது மாதிரியான சேனல்களை அரசு முழுமையாகப் பயன்படுத்தினாலே, எனக்கு மகிழ்ச்சி.''

அடுத்த கட்டுரைக்கு