Published:Updated:

`மீண்டு வா சுர்ஜித்’ - கோவையில் ஆதரவற்றோர் முதியோர், குழந்தைகள் பிரார்த்தனை

தீபாவளியைக் கொண்டாடாமல் சிறுவன் சுர்ஜித்தை உயிருடன் மீட்கக் கோரி ஈரநெஞ்சம் அறக்கட்டளை ஆதரவற்றோர் முதியோர், குழந்தைகள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

பிரார்த்தனை
பிரார்த்தனை

ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஈர நெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்திலுள்ள முதியோர்களும் குழந்தைகளும் வருடந்தோறும் தீபாவளி தினத்தன்று சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 25-ம் தேதி மாலையில் திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் 300 அடி ஆழ ஆழ்குழாய்க்கிணறில் சிறுவன் சுர்ஜித் வில்சன் தவறி விழுந்ததை அடுத்து பலகுழுக்கள், சிறுவனை உயிருடன் மீட்க கடுமையான முயற்சி செய்து வருகின்றனர்.

பிரார்த்தனை
பிரார்த்தனை

தமிழகத்தின் பல பகுதிகளில் சிறுவன் சுர்ஜித்துக்காக மதம் கடந்து மனித நேயம் மலர அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஈர நெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியைக் கொண்டாடாமல், சிறுவனுக்காக பிரார்த்தனை செய்தனர்.

மேலும் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களும் மனச்சோர்வு அடையாமல், விடா முயற்சியுடன் சிறுவனை மீட்க அவர்கள் உடல் மற்றும் மனநலன் பெற வேண்டியும் பிரார்த்தனை செய்தனர். இதயத்துக்குள் ஈரம் இருப்பவர்களின் பிரார்த்தனை இந்தியா முழுவதும் நடைபெற்று வருவது சிறுவனை உயிருடன் மீட்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.