Published:Updated:

`உடலுக்குள் ரத்தக் கசிவு!'- உயிருக்குப் போராடிய 2 மாத கர்ப்பிணி குதிரை மரணம்

வீ கே.ரமேஷ்
VIJAYAKUMAR M

``2 மாத கர்ப்பிணியாக இருப்பதால் இதைக் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று தொடர்ந்து சிகிச்சை கொடுத்து பராமரிக்க வேண்டும். ஆனால், குதிரையைக் கொண்டு செல்லுவதற்கு எங்களிடம் வாகன வசதி இல்லை.''

விபத்தில் காயமடைந்த குதிரை
விபத்தில் காயமடைந்த குதிரை

சேலம் டு நாமக்கல் பைபாஸ் ரோட்டில் சீலநாயக்கன்பட்டி திவ்யா தியேட்டர் அருகில் நேற்று (26.7.2019) விபத்துக்குள்ளான ஒரு கர்ப்பிணி குதிரை பின்னங்கால்களில் அடிபட்டு எழுந்திருக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. அந்தக் குதிரைக்கு உதவி செய்துகொண்டிருந்த அருண்குமார், குணசேகரனிடம் கேட்டதற்கு, ``இரவு நேரத்தில் வாகனத்தில் அடிபட்டிருக்கலாம். நாங்க விடியற்காலையிலிருந்து பார்க்கிறோம். வலியில் துடித்துக் கொண்டு எழுந்திருக்க முடியாமல் தவிக்கிறது. ரோட்டின் ஓரத்தில் கிடப்பதால் யாரும் கண்டுகொள்ளவில்லை. நாங்க குதிரையின் உரிமையாளரைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

குதிரைக்கு சிகிச்சை
குதிரைக்கு சிகிச்சை

அதன் பிறகு நெட்ல பார்த்து சேலம் ப்ளூகிராஸ் அலுவலகத்துக்குப் போன் பண்ணினோம். அவங்களிடம் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதையடுத்து வி.ஏ.ஓ., வனத்துறை என எல்லோருக்கும் போன் பண்ணினோம். யாரும் வரவில்லை. 7 மணி நேரமாக இந்தக் குதிரை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது. நீங்களாவது ஏதாவது முயற்சி எடுத்து இந்தக் குதிரையைக் காப்பாற்ற வழி செய்யுங்கள்'' என்றார்கள்.

இதையடுத்து, சேலம் கோட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் இணை இயக்குநர் புருஷோத்தமனுக்கு தகவல் தெரிவித்தோம். அவர் வெளியில் இருப்பதால் சேலம் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் உதவி இயக்குநர் ராஜா மற்றும் கால்நடை மருத்துவர் அருள்பிரகாஷ் ஆகியோரை ஜீப்பில் உடனே சம்பவ இடத்துக்கு அனுப்பிவைத்தார். அவர்கள் குதிரைக்கு முதல் உதவி சிகிச்சை கொடுத்தார்கள். ``குதிரைக்கு இடுப்பில் பலமாக அடிபட்டிருக்கிறது. 2 மாத கர்ப்பிணியாக இருப்பதால் இதைக் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று தொடர்ந்து சிகிச்சை கொடுத்து பராமரிக்க வேண்டும். ஆனால், குதிரையைக் கொண்டு செல்லுவதற்கு எங்களிடம் வாகன வசதி இல்லை'' என்றார்கள்.

சிகிச்சை அளிக்க கொண்டு செல்லப்பட்ட குதிரை
சிகிச்சை அளிக்க கொண்டு செல்லப்பட்ட குதிரை

பிறகு சேலம் மாநகர ஆணையாளர் உதவியோடு வாகனமும், குதிரையை வாகனத்தில் ஏற்றுவதற்கு ஆட்களும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். பிறகு குதிரையை மாநகராட்சி வாகனத்தில் ஏற்றி கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இடுப்பில் பலமான காயங்கள் ஏற்பட்டுத் தொடர்ந்து உடலுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டதன் காரணமாக இன்று காலை குதிரை மரணமடைந்தது. அதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை மூலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.