Published:Updated:

பயணத்துக்கு வந்த கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி!- ரயில் நிலையத்தில் குழந்தை பெற்ற நெல்லை பெண்

பி.ஆண்டனிராஜ்

ரயிலில் பயணம் செய்வதற்காக நெல்லை ரயில் நிலையம் வந்திருந்த பெண்ணுக்கு திடீரென பிரசவம் ஏற்பட்டது. நெருக்கடியான அந்தச் சூழலில் பெண் காவலர்கள் உதவியதால் நடைமேடையிலேயே பிரசவம் நடந்தது. உரிய நேரத்தில் உதவிய பெண் காவலர்களுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

nellai railway station
nellai railway station

நெல்லை மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (28). இவரின் கணவர் சுடலை. திருமணத்துக்குப் பின்னர் மாரியம்மாள் தன் கணவரின் ஊரான ஶ்ரீவைகுண்டத்தில் வசித்துவந்தார்.

`பாராட்டுதான் எங்களை ஓடவைக்குது!' - தஞ்சை கலெக்டர் அலுவலகத்தைச் சோலைவனமாக்கிய பெண்கள் நெகிழ்ச்சி

நிறைமாத கர்ப்பிணியான அவர் பிரசவத்துக்காகத் தனது தாய் வீட்டுக்குச் செல்வதற்காக உறவினர்களுடன் வந்திருந்தார். நெல்லையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில் மூலம் கடையம் செல்லத் திட்டமிட்டு நடைமேடையில் காத்திருந்தார். திடீரென மாரியம்மாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அங்குள்ள நடைமேடையில் அமர வைக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளாக மாரியம்மாள் வலியால் துடித்ததால் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பெண் காவலர்கள் உதவிக்கு வந்துள்ளனர். உதவி ஆய்வாளர் ஜூலியட், காவலர்களான ராதா, விஜயசாந்தி ஆகியோர் உதவி செய்த நிலையில், நடைமேடையிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.

police
police

உடனடியாக அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகுந்த நேரத்தில் ஓடோடி வந்து உதவிசெய்த பெண் காவலர்களுக்கு ரயில் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாட்ஸ்அப் மூலம் வைரலாகப் பரவியதால் பெண் போலீஸாருக்கு பாராட்டும் வாழ்த்துகளும் குவிகின்றன.