Published:Updated:

மாதாந்திர பரிசோதனைக்குச் சென்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா! - கோவை அதிர்ச்சி

கோவை
கோவை

கோவையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திலும், கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கோவையில் கொரோனா தாக்கம் சற்று குறைவாக இருந்தாலும், பொது போக்குவரத்து செயல்படத் தொடங்கிய பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

கோவை
கோவை

சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்து வந்த சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், 25 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவைப்புதூரைச் சேர்ந்த அந்த 25 வயது கர்ப்பிணிப் பெண், சாதாரண பரிசோதனைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை
கோவை

அவருடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக கண்டறிந்து, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு எப்படி கொரோனா வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்துக்கொண்டிருக்கின்றனர்.

அதேபோல, மும்பையில் இருந்து வந்தவருடன் தொடர்பில் இருந்த 35 வயது பெண், சென்னை புதுப்பேட்டையிலிருந்து பொள்ளாச்சிக்கு ரயில் மூலம் வந்த தாய், மகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போத்தனூர் பகுதியைச் சேர்ந்த 49 வயது ஆணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இ.எஸ்.ஐ மருத்துவமனை
இ.எஸ்.ஐ மருத்துவமனை

இதையடுத்து, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அதில் அனைவருக்கும் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. அதேநேரத்தில், அந்த 49 வயது ஆணுக்கு எப்படி பாதிப்பு வந்தது என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு