Published:Updated:

`மனிதாபிமானம் உள்ள யாராலும் ஏற்க முடியாது' -விழுப்புரம் சிறுமி விவகாரத்தில் கொதித்த பிரேமலதா

சிறுமி ஜெயஸ்ரீயின் பெற்றோருடன் பிரேமலதா
சிறுமி ஜெயஸ்ரீயின் பெற்றோருடன் பிரேமலதா

``விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயை தீ வைத்து எரித்த குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்” என்று தே.மு.தி.க கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியைச் சேர்ந்த ஜெயபால் (42), ராஜி தம்பதிக்கு இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள். கடந்த 10-ம் தேதி காலையில் ஜெயபால் வீட்டுக்குள் இருந்து திடீரென்று புகைமூட்டம் வெளியேறியதுடன், அலறல் சத்தமும் கேட்டது. அதனால் அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கே ஜெயபாலின் மூத்த மகளான 15 வயது சிறுமி ஜெயஸ்ரீ உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

`என் அப்பா எங்கே....!’-முன்விரோதத்தால் எரிக்கப்பட்ட சிறுமி; அ.தி.மு.க நிர்வாகிகள் கைது

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஜெயஸ்ரீ, கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும்தான் தனது கைகளைக் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியதாக வாக்குமூலம் கொடுத்துவிட்டு உயிரிழந்தார்.

அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறை, குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தது. சிறுமி ஜெயஸ்ரீயின் இறப்புக்கு அனைத்துக்கட்சி தலைவர்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி இன்று தே.மு.தி.க கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், விஜயகாந்த் அறிவித்திருந்த நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்தையும் அளித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மாணவி ஜெயஸ்ரீ உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவத்தை மனிதாபிமானம் உள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஈவு இரக்கமற்ற அந்தச் செயலை செய்த இருவரையும் என்கவுன்டர் செய்ய வேண்டும் என்று தே.மு.தி.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தமிழக அரசு என்கவுன்டர் செய்ய வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இருக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும்போது அனைத்துப் பெண்களும் ஒன்றிணைய வேண்டும்.

ஒரு வாரத்தில் அறிக்கை; தாமாக முன்வந்து வழக்கு பதிவு -விழுப்புரம் சிறுமி விவகாரத்தில் கொதித்த ஆணையம்

குற்றவாளிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கொரோனா ஒழிப்பில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. ஆனால், அவசரப்பட்டு மதுக்கடைகளை திறந்தது தவறு. அதனால்தான் தே.மு.தி.க நீதிமன்றம் சென்றது. தமிழகத்தில் ஊரடங்கு இருக்கும் வரை மதுக்கடைகளை திறக்க தே.மு.தி.க அனுமதிக்காது. தமிழகத்தில் அதிகளவில் பரிசோதனைகள் செய்யப்படுவதால் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு