Published:Updated:

`வருமானம் ரூ.30,000 கோடி; விழிப்புணர்வுக்கு ரூ.3 கோடி!’ -தமிழக டாஸ்மாக் கடைகளின் தற்போதைய நிலை

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

'தமிழகத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, டாஸ்மாக் கடைகளின் வருமானமும் அதிகரித்துள்ளது' என்று அமைச்சர் தங்கமணி பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

தமிழகத்தில், நாம் தினமும் சந்திக்கும் முக்கியமான பிரச்னைகளில் டாஸ்மாக் கடைகளும் ஒன்று. இந்தக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் தினமும் பெண்கள் போராட்டம் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். ‘ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் நடக்கும்போதும் அந்தந்தக் கட்சித் தலைவர்கள், மதுக்கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர். ஆனால், மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை’ என பாதிக்கப்படும் பெண்கள் கூறும் முதல் குற்றச்சாட்டு இது.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்கள், மாலை நேரம் ஆனாலே மதுக்கடைகளுக்குச் செல்ல வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். இதனால் அரசுத் தரப்பில் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. தற்போது நடக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில், மதுக்கடைகள் பற்றிப் பேசிய தி.மு.க உறுப்பினர் தங்கராஜ், “தமிழகத்தில் மதுக்கடைகளால் இதுவரை 30,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது, டாஸ்மாக் கடைகளைக் குறைப்பதாகக் கூறும் அரசு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

சட்டமன்ற உறுப்பினருக்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் தங்கமணி, “தமிழகத்தில் மது குடிப்பது அதிகரித்துள்ளதே டாஸ்மாக் வருவாய் உயர்வுக்குக் காரணம். இங்கு, அனைவரும் மது குடிக்கிறார்கள், அதற்கு என்ன பண்ண முடியும். நாங்கள் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம்” என்றார்.

அமைச்சரின் பேச்சு குறித்து, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயல் தலைவர் பழனி பாரதியிடம் பேசினோம். “தமிழகத்தில் கிட்டத்தட்ட 5,500 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால், அவற்றுக்குப் போதுமான தொழிலாளர்கள் இல்லை. நாங்கள் பெயருக்குத்தான் அரசு ஊழியர்கள். ஆனால், ஒப்பந்த முறையில்தான் இதுவரை வேலை செய்துவருகிறோம். 17 வருடங்களாக வேலை செய்தும் எங்களுக்கு 12,000 ரூபாய்தான் சம்பளம் வழங்கப்படுகிறது. இது மட்டுமில்லாது, லோடுமேன்களுக்கு எங்கள் சொந்தப் பணத்தைக் கொண்டுதான் கூலி தரவேண்டிய சூழலே இன்னும் நிலவுகிறது. அதற்கு, அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அமைச்சர் தங்கமணி
அமைச்சர் தங்கமணி

மாநிலம் முழுவதும் தற்போது 2000 கடைகளைத் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவித்து 500 முதல் 1000 கடைகளை மூடினர். இடையில், நெடுஞ்சாலையில் இருக்கும் கடைகளை மூட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் சில கடைகள் மூடப்பட்டன. தற்போது அந்தக் கடைகளுக்கு சில விதிகளைத் தளர்த்தி, ஊரில் உள்ள சாலையில் திறக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, முன்னதாக மூடப்பட்ட கடைகள் தற்போது திறக்கப்படுகின்றன. புதிதாக எங்கேயும் கடைகள் திறக்கப்படவில்லை. ஆரம்பத்தில் 6500 கடைகள் இருந்தன. தற்போது, அதில் 1000 கடைகள் மூடப்பட்டுள்ளன.

டாஸ்மாக் விவகாரம்... கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம்!

விலை உயர்வுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. அது, அரசின் முடிவு. நம் மக்கள் விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிலும் தமிழகத்தில் கணிசமான மக்கள் மதுப் பிரியர்களாக உள்ளதால், அவர்களும் விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. விலையேற்றத்தினால், அரசு மீது இருக்கும் கோபத்தை மக்களுக்கு நெருக்கமாக இருக்கும் எங்கள் மீது காட்டுவார்கள். சிலர், மண்ணை அள்ளித் தூவி சாபம் விடுவார்கள். சிலர், எங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து திட்டுவார்கள். இவை அனைத்தையும் சகித்துக்கொண்டுதான் நாங்கள் வேலை செய்துவருகிறோம். என்னதான் மதுவின் விலை உயர்த்தப்பட்டாலும், குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் குடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சிறுவர்கள் யாரேனும் கடைக்கு வந்தால், நாங்களே கண்டித்து அனுப்பிவிடுவோம். ஆனால், மாலை ஆறு மணிக்கு மேல் அளவுக்கு அதிகமான கூட்டம் இருக்கும். அப்போது, கூட்டத்தைக் குறைப்பதற்காக நாங்கள் அவசரமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று தெரியாது. அதைப் பயன்படுத்தியும் சிறுவர்கள் மதுவை வாங்கிச்சென்றுவிடுகிறார்கள். இல்லையென்றால், பிறரின் உதவியுடன் குடிக்கிறார்கள்.

`2 வருஷமா இல்லை; இப்போ வரப்போகுதாம்!' - டாஸ்மாக் கடைக்கு எதிராகக் கொதிக்கும் ஆண்டிபட்டி மக்கள்
அரசு வேலை என்ற காரணத்துக்காக, குடிக்காதவர்களும் இந்த வேலையில் இணைகிறார்கள். பிறகு, அவர்களும் குடித்து உயிரிழக்கிறார்கள். மேலும், மன உளைச்சலின் காரணமாகவும் பல ஊழியர்கள் உயிரிழக்கிறார்கள்.
பழனிபாரதி

நாங்கள் மதுக்கடைகளில் வேலை செய்தாலும், தனிப்பட்ட முறையில் சமூகம் சீரழிவதைக் கண்டு வேதனைப்படத்தான்செய்கிறோம். மதுக்கடைகளைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம், மதுக்கடைகளால் இதுவரை 30,000 கோடி ரூபாய் வரை வருமானம் வந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விழிப்புணர்வுக்காக ஐந்து கோடி ரூபாய்தான் ஒதுக்கினார்கள், அவ்வளவுதான். தற்போது, 3 கோடி ஒதுக்கியுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. ஒரு நாளைக்கு, குறைந்தது 250 கோடி ரூபாய் முதல் ரூ.300 கோடி வரை வருமானம் வருகிறது.

தமிழக அரசு
தமிழக அரசு

இதுமட்டுமில்லாது, 30,000 ஊழியர்கள் பணிபுரியும் இந்த டாஸ்மாக் கடைகளில், மரணம் என்பது மிகவும் சர்வ சாதாரணமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எங்காவது ஒரு மூளையில் தினமும் ஒருவர் இறந்துவிட்டதாகச் செய்தி வருகிறது. ஊழியர்களும் குடிப்பதால்தான் உயிரிழக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் வேலை செய்வதனால் தினமும் குடிக்கிறார்கள்.

அரசு வேலை என்ற காரணத்துக்காக, குடிக்காதவர்களும் இந்த வேலையில் இணைகிறார்கள். பிறகு, அவர்களும் குடித்து உயிரிழக்கிறார்கள். மேலும், மன உளைச்சலின் காரணமாகவும் பல ஊழியர்கள் உயிரிழக்கிறார்கள். இதற்கு, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வருத்தத்துடன் கூறி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு