Published:Updated:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் ஊட்டி விசிட்; புதுப்பொலிவு ப்ளஸ் 5 அடுக்கு பாதுகாப்பு!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

முதன்முறையாக ஊட்டிக்கு வருகைதரவிருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை வரவேற்க நீலகிரியில் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்குள் ஊட்டி கொண்டுவரப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள வெலிங்டன் பகுதியில் `எம்.ஆர்.சி’ எனப்படும் இந்திய ராணுவ வீரர்களுக்கான பயிற்சி மையமும், `டி.எஸ்.எஸ்.சி’ என்றழைக்கப்படும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியும் இயங்கிவருகின்றன. இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆளுநரும் குடியரசு தலைவரும் பங்கேற்பது வழக்கம். இந்த விழாக்களில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்களான அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி போன்றோர் பங்கேற்றுள்ளனர்.

ராஜ்பவன் மாளிகை
ராஜ்பவன் மாளிகை

இந்தநிலையில், ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரில் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவிருக்கிறார். நாளை ஊட்டிக்கு வரவிருக்கும் குடியரசுத் தலைவரை வரவேற்க நகரைப் பொலிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வருகை குறித்து நீலகிரி காவல்துறை தரப்பில், ``முதன்முறையாக ஊட்டிக்கு வருகை தரவிருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை பகல் 12 மணிக்கு ஊட்டி வரவிருக்கிறார். ஊட்டியிள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்கும் அவர், நாளை மறுநாள் வெலிங்டன் ராணுவ மையத்துக்குச் செல்கிறார். தொடர்ந்து 4, 5-ம் தேதிகளில் ஊட்டியிலுள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்கவிருக்கிறார். மேலும் இங்குள்ள ஒருசில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவிருப்பதாகத் தெரிகிறது. மாவட்டத்தில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி., கோவை சரக டி.ஐ.ஜி தலைமையில் 1,250 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா: `உண்மையில் இன்று ஒரு முக்கியமான நாள்!’ - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
ஊட்டி
ஊட்டி

ஊட்டி ஹெலிகாப்டர் தளம் முதல், ஊட்டி நகரம், வெலிங்டன் ராணுவ மையம், ஊட்டி - குன்னூர் சாலை, கோத்தகிரி சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஹோட்டல்கள், காட்டேஜ்கள், ரெசார்ட்டுகளில் தங்கியிருப்பவர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டிருக்கிறது. மாவட்டத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. காவல்துறையினர் 24 மணி நேரமும் ரோந்துப் பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றனர். போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளுக்காக கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு