Published:Updated:

ஊட்டி: ``அறிவுசார் போர் யுகத்தில் இருக்கிறோம்" ராணுவப் பயிற்சி அதிகாரிகளிடையே குடியரசுத் தலைவர் உரை!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

``21-ம் நூற்றாண்டு சமூகம் அறிவுசார் சமூகம். நாம் பொருளாதாரத்தின் சகாப்தத்தில் இருப்பதாகக் கூறப்படுவதுபோல, நாமும் அறிவுசார் போர் யுகத்தில் இருக்கிறோம்."

மூன்று நாள் பயணமாக நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வருகை தந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குன்னூர் வெலிங்டனில் செயல்பட்டுவரும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றுப் பேசினார். பயிற்சி அதிகாரிகளுடன் பேசிய குடியரசுத் தலைவர், ``முப்படை அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் ராணுவக் கல்லூரிகளில் நாட்டின் முதன்மையான பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாக இந்த வெலிங்டன் பயிற்சிக் கல்லூரி செயல்பட்டுவருகிறது. நமது நேச நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளும் இங்கு பயிற்சி பெற்றுவருகின்றனர். இந்தப் பயிற்சியில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை உயர்ந்துவருவது வரவேற்கத்தக்கது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

நீலகிரி மலைகளின் இயற்கை அழகும், இந்தப் பகுதியின் காலநிலையும் பயிற்சிக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்த இடம் பூமத்திய ரேகைக்கு வடக்கே 11 டிகிரி மட்டுமே இருக்கிறது. ஆனாலும் இங்கு ஆண்டு முழுவதும் மிகவும் இதமான வானிலை நிலவுகிறது.19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் சானடேரியம் இந்தப் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டது. நாட்டின் உயர் பாதுகாப்பு அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உள்நாட்டுமயமாக்கல் மற்றும் பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு அடைய உத்வேகம் வழங்கப்படுகிறது. முப்படைகளை எதிர்காலத்தில் தயார்ப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. முப்படைகள் அதிக ஒருங்கிணைப்பை நோக்கிச் செயல்படுவதால், கூட்டு முயற்சியும் ஒருங்கிணைப்பும் வலுவடையும்.

நமது நாட்டின் முப்படைகளின் அயராத முயற்சிகளும் தியாகங்களும் குடிமக்களின் மரியாதையைப் பெற்றுள்ளன. போர்க்காலத்திலும், சமாதான காலத்திலும் அவர்கள் தேசத்துக்கு விலை மதிப்பற்ற சேவையை வழங்கிவருகின்றனர். உள் நாட்டு, வெளிநாட்டுப் பாதுகாப்புப் பணிகளோடு, இயற்கைப் பேரிடர் காலங்களில் பல சவால்களைச் சந்தித்து அர்ப்பணிப்போடு கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். கோவிட் -19 தொற்று நோய் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்திருக்கிறது. ஆன்லைன் கற்றலைத் திறம்படப் பின்பற்றி பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், பாடத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எல்லைப் பாதுகாப்பு, கோவிட் -19 தொற்றுநோய்களைக் கையாள்வதில் முப்படைகளின் சேவை பாராட்டுக்குரியது. சமீபத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள எங்கள் அதிகாரிகளுடனும் வீரர்களுடனும் உரையாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் உயர்ந்த மன உறுதியையும் கடமைக்கான அர்ப்பணிப்பையும் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.

ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரி
ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரி
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின்  ஊட்டி விசிட்; புதுப்பொலிவு ப்ளஸ் 5 அடுக்கு பாதுகாப்பு!

உங்கள் அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் நாடு பாராட்டுகிறது. மாற்றங்கள் நிறைந்த சவாலான காலங்களை நாம் கடந்து செல்கிறோம். தேசம் பெரும் சவால்களைச் சந்தித்துவருகிறது. பயங்கரவாத எதிர்ப்பு, போர் அல்லாத மோதல்கள் பல்வேறு சவால்களை ஏற்படுத்துகின்றன. அனைத்து அம்சங்களையும் பற்றிய முழுமையான புரிதல் நமக்குத் தேவை. மாறிவரும் இந்தக் காலங்களில், நமது தேசியநலன்களைப் பாதுகாக்கவும், நமது தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யவும் புதிய வழிகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இதற்கு ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படும். இணைய உலகில் வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகள் பாதுகாப்பின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

21-ம் நூற்றாண்டு சமூகம் அறிவுசார் சமூகம். நாம் பொருளாதாரத்தின் சகாப்தத்தில் இருப்பதாகக் கூறப்படுவதுபோல, நாமும் அறிவுசார் போர் யுகத்தில் இருக்கிறோம். இந்தக் கல்லூரியில் பெற்ற பயிற்சியும் கற்றலும் உங்களுக்குத் தேவையான திறன்களை ஊக்குவிக்க உதவும். எதிர்காலத்தில் பெரிய சவால்களை எதிர்கொள்வதற்கான சரியான கருவியாக இது உங்களுக்கு உதவும்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

திறமையான தலைவர்கள் ஆவதற்கு, நீங்கள் தனிப்பட்டரீதியாகவும், தொழில்முறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். நம்பிக்கை, தைரியம், சகிப்புத்தன்மை, ஒருமைப்பாடு, பணிவு, எளிமை ஆகியவை உங்களை ஒரு மனிதனாக வலுப்படுத்தும். அதிநவீன தொழில்நுட்பங்கள், அதிநவீன யுக்திகள், தொடர்ச்சியான கற்றல் உங்களைச் சிறந்த நிபுணர்களாக மாற்றும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு