Published:Updated:

டெண்டர் முறைகேடுக்கு ஆளும்கட்சி அழுத்தம்... அதிரடியாக முடிவெடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி!

சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்
சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்

ஆளும்கட்சி கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் வி.ஆர்.எஸ்ஸுக்கு விண்ணப்பித்திருப்பதாக வெளியான தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப செயலாளராகப் பதவி வகிப்பவர் டாக்டர் சந்தோஷ் பாபு. தமிழகத்தின் குக்கிராமம் முதல் பெருநகரங்கள் வரை இணைய வசதி அளிக்கும் 'தமிழ்நெட்' திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட `தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன்’ என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் அளிப்பதற்காக, டெண்டர் விதிகளைத் தளர்த்த ஆளும்கட்சியிலிருந்து அழுத்தம் கொடுக்க, தனது ஐ.ஏ.எஸ் பணியில், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

ஃபைபர்
ஃபைபர்

கிராமப்புற பஞ்சாயத்துகளை இணையவழி ஒருங்கிணைக்க மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் பாரத்நெட். இதன்மூலம் நாட்டில் உள்ள 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய வசதியை அளிக்க முடிவு செய்யப்பட்டது. கிராமங்களுக்கு மட்டுமே உள்ள இத்திட்டத்தை விரிவுபடுத்தி, நகரங்களுக்கும் கொண்டு செல்ல தமிழக அரசு முடிவெடுத்து அதன்படி உருவாக்கப்பட்ட திட்டம்தான் தமிழ்நெட். இத்திட்டத்துக்கு முதற்கட்டமாக 1,815 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதன்மூலம் 12,524 கிராமப் பஞ்சாயத்துகள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களுடன் இணைக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஆன்லைனுக்குக் கொண்டுவரப்படும். எந்தவித காலதாமதமும் இல்லாமல் அரசு அலுவலகங்களில் உடனடியாக வேலை நடக்க இத்திட்டம் உதவிபுரியும் என்று சொல்லப்பட்டது.

அரசு அலுவலகங்களை மட்டுமின்றி, தமிழ்நாடு கேபிள் டி.வி-யிடம் உள்ள இன்டர்நெட் சர்வீஸ் புரொவைடர் லைசென்ஸ் மூலமாக மக்களுக்கும் அதிவேக இணைய சேவை அளிக்க இத்திட்டத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 26,000 கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் அனைவருக்கும் இணையதள சேவை அளிக்கப்படும். அதுவும் யாரும் எதிர்பார்க்காத மிகக்குறைந்த விலையில் என சந்தோஷ் பாபு இத்திட்டத்தை விரிவாக விளக்கியிருந்தார்.

ஜூனியர் விகடன்
ஜூனியர் விகடன்

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, தமிழகத்தில் 55,000 கி.மீ தொலைவுக்கு `ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்’ இணைப்பு கொடுக்கப்பட வேண்டியிருந்தது. அதற்கு கடந்த டிசம்பர் 11-ம் தேதி 2,000 கோடி மதிப்பில் டெண்டர் அறிவிப்பு வெளியானது. இந்த டெண்டரை எடுக்க இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவியது. குறிப்பாக, இரண்டு நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவியிருக்கிறது. இந்த இரு நிறுவனங்களுமே தங்களுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு, அதிகாரிகள் மட்டத்தில் உள்ள தொடர்புகளை வைத்து டெண்டரைக் கைப்பற்ற முயற்சி செய்தன.

இவற்றில் ஒரு நிறுவனம், கோட்டையில் உச்சமான பொறுப்பில் இருக்கும் ஆளும்கட்சி பெரும்புள்ளியைச் சந்தித்து, மொத்த டெண்டர் மதிப்பில் 14 சதவிகிதம் கமிஷன் தருவதாகச் சொல்லியிருக்கிறது. ஆளும்கட்சி பெரும்புள்ளியும் அதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். இதில் ஒரு குறிப்பிட்ட தொகை கை மாறிவிட்டதாகவும் கோட்டை வட்டாரத்தில் தகவல் பரவியது. இதற்குப் பின்பே, சந்தோஷ் பாபுவை அழைத்த அந்த ஆளும்கட்சி வி.வி.ஐ.பி, அந்த ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் கிடைக்கும் வகையில் டெண்டர் விதிகளை மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதற்கு சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ் சம்மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

பெரியார், செருப்பு மாலை, ரஜினி கருத்து... 1971 சேலம் ஊர்வலத்தில் என்ன நடந்தது?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகுதான் இந்த விஷயம் விசுவரூபமெடுத்திருக்கிறது. நாம் சொல்லியே கேட்கவில்லையே எனக் கொதித்த ஆளும்தரப்பு, இரண்டு மூன்று நாள்கள் அவரை வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் வேண்டுமென்றே அலைக்கழித்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு ஒரு சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலமாகவும் சந்தோஷ் பாபுவுக்கு தூதுவிட்டுப் பார்த்திருக்கிறார்கள். முக்கியப் பொறுப்பிலுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அவரிடம், ''சொன்னபடி டெண்டர் விதிகளை மாற்றுங்கள். இல்லாவிட்டால் உங்களை டம்மி பதவிக்கு மாற்றிவிடுவார்கள்'' என மிரட்டும் தொனியில் அவர்கள் சந்தோஷ்பாபுவிடம் பேசியிருக்கிறார்கள்.

ஆனால், ''நான் என் பதவியை ராஜினாமா செய்தாலும் செய்வேன். நிச்சயமாக டெண்டர் விதிகளில் மாற்றம் செய்ய மாட்டேன்'' எனக் கொந்தளித்திருக்கிறார் சந்தோஷ் பாபு. இந்த விஷயம் அந்த ஆளும்கட்சிப் பெரும்புள்ளிக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு அவர், ``சில நாள் பார்க்கலாம். அந்த அதிகாரி சரிப்பட்டு வராவிட்டால் வேறு அதிகாரியை வைத்து டெண்டரை நடத்திக்கொள்ளலாம். அதுவரை டெண்டர் ஏலத்தை ஒத்திப்போடும் வேலையைப் பார்ப்போம்'' எனச் சொல்லியிருக்கிறார்.

மேற்கண்ட இந்த விவகாரத்தை , கடந்த மாதம் வெளியான 25.12.2019 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் மிஸ்டர் கழுகு பகுதியில் விரிவாக விளக்கியிருந்தோம். இதுவே, அந்த இதழின் அட்டைப்படமாகவும் வெளியாகியிருந்தது.

ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் கிணறு

இந்தக் கட்டுரை வெளியான பின், தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, ``இந்த டெண்டர் விவகாரம்பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று பேட்டியும் கொடுத்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தன்னுடைய பணியை விட்டு விலகும்பொருட்டு, வி.ஆர்.எஸ். கேட்டு விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தகவல் உண்மைதானா என்பதையறிய ஐ.ஏ.எஸ் சந்தோஷ் பாபுவைத் தொடர்புகொண்டோம்,

''இப்போது நான் எதுவும் பேசும் நிலையில் இல்லை. பிறகு, பேசுகிறேன்'' எனத் தெரிவித்தார். பிற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டத்தில் விசாரித்தபோது, `இந்தத் தகவல் உண்மைதான்’ என்று கூறினர். ஒரு டெண்டர் விவகாரத்தில் ஆளும்கட்சியின் பெரும்புள்ளியை எதிர்த்து ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தன் பணியில் இருந்து விலகியிருப்பது தமிழக அரசியல்வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர், ‘‘வழக்கமாக இதுபோன்று ஆளும்கட்சி தரப்பில் அழுத்தம் வரும்போது, சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள், மத்திய அரசுப் பணிக்கு மாறுதல் கேட்டுச் சென்று விடுவார்கள். சிலர் பல மாதங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு, பிரச்னை ஓய்ந்த பின்பு பணியில் சேர்வார்கள். ஆனால், சந்தோஷ் பாபு ஓய்வு பெறுவதற்கு இன்னும் 9 ஆண்டுகள் முழுமையாக இருக்கும் நிலையில், இப்போதே விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து இருப்பது, அவருக்கு ஏற்பட்ட அரசியல் அழுத்தம் எத்தகையதாக இருக்குமென்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது நேர்மையாகவும், விதிகளுக்கு உட்பட்டும் பணி செய்ய விரும்புகிற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யலாம். ஆனால், இதுபோன்ற டெண்டர் முறைகேட்டை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதே இதற்கான தீர்வாக இருக்கும்!’’ என்றனர்.

சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும்நிலையில், ஆளும்கட்சி பெரும்புள்ளிகள் தொடர்புடைய டெண்டர் விவகாரத்தில் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி இவ்வளவு துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் முடிவு எடுத்திருப்பது பல்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

அடுத்த கட்டுரைக்கு