Published:Updated:

`தந்தை பிறந்தநாளில் ஸ்டாலின் இதை நிறைவேற்ற வேண்டும்’ -அர்ச்சகர் பயிற்சிபெற்ற அனைத்து சாதி மாணவர்கள்

கருணாநிதி, ஸ்டாலின்
கருணாநிதி, ஸ்டாலின்

அர்ச்சகர் பயிற்சி முடித்த 207 மாணவர்கள் பணிநியமனம் செய்யப்படவில்லை என்பதால் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அர்ச்சகர் பயிற்சி பெற்ற 5 மாணவர்கள் இறந்து விட்டார்கள். அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கவேண்டும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அந்நாளில் தங்கள் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

நம்மிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும் பொறுப்பு வகித்தவரும், தந்தை பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியவருமான கருணாநிதியின் பிறந்தநாளில் அவரின் வாழ்நாள் விருப்பமான ஆகமக் கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர் நியமன அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்.

கருணாநிதி முதன்முதலில் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றபோது, தந்தை பெரியாரின் கோரிக்கையால் உருவானதே அனைத்து சாதி அர்ச்சகர் என்ற மாபெரும் தீண்டாமை ஒழிப்பு சமூகநீதி புரட்சி திட்டம். இச்சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றனர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர்கள்.

ரங்கநாதன்
ரங்கநாதன்

சேசம்மாள் வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் 'பரம்பரை வழி அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டது சரி. ஆனால், ஆகமத்தை மீறக்கூடாது' என்றனர்.

உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டத்தடை சுமார் 35 ஆண்டுகள் நீடித்தது. இடையில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க அரசு அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்னையில் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை.

மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, கடந்த 2006-ல் அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனத்துக்கு அரசாணை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அனைத்து சாதி மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளையும் திறந்தார். அப்பள்ளிகளில் முறையாக அனைத்து மந்திரங்கள், பூசைகள், ஆகமங்கள், திருமந்திரங்கள் பயின்று தீட்சையும் பெற்று 207 மாணவர்கள் ஆகமக் கோயில்களில் அர்ச்சகப் பணிக்கு தயாரானோம்.

திருக்கோயில்
திருக்கோயில்

அதற்கும் தடை வாங்கிய மதுரை மீனாட்சியம்மன் கோயில் சிவாச்சார்யார்கள், பல ஆண்டுகள் வழக்கை நடத்தவில்லை. அதன்பின்பு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் முயற்சியில் அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம் தொடங்கப்பட்டு கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கருவறை நுழைவு எனப் பலகட்டப் போராட்டங்கள் நடத்தினோம். ம.க.இ.க, திராவிடர் கழகம், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்காடினோம். 2015-ல் வந்த தீர்ப்பில் 'பிறப்பின் அடிப்படையில் யாரும் அர்ச்சகர் வேலை கோர முடியாது, அந்தந்த கோயில் மரபுகளின்படி நியமனங்கள் செய்யலாம்' என உத்தரவிட்டது. அப்போதிருந்த அ.தி.மு.க அரசிடம் நாங்கள் பலமுறை முறையிட்டும் எதுவும் நடக்கவில்லை.

அர்ச்சகர் பணி என்பது ஓர் அரசுப் பணி. அரசு ஊழியர்கள் போல பணிவரன்முறை விதிகளுக்குள் அர்ச்சகர்கள் வருவார்கள். சேசம்மாள் வழக்கு, 2015 அர்ச்சகர் தீர்ப்புகளின் அடிப்படையில் பரம்பரையாகவோ, பிறப்பின் அடிப்படையிலோ தமிழகத்தில் உள்ள ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் செய்யக் கோரி யாரும் கோர முடியாது.

பயிற்சி மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது
பயிற்சி மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது

ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக பரம்பரை அல்லது குறிப்பிட்ட சாதியின் ஒரு பிரிவினர் மட்டும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் எங்களை மகிழ்விக்கும் வகையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் அதனை தெரிவித்திருந்தது.

கொரானா பெருந்தொற்றுக்கு எதிரான கடும் பணிகளின் ஊடே பேருந்தில் பெண்களுக்கு இலவசம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமனம், நீட் மறுப்பு, புதிய கல்விக் கொள்கை தவிர்ப்பு என தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கருணாநிதி வாழ்நாள் விருப்பமான ஆகமக் கோயில் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை கருணாநிதி பிறந்த நாளில் அறிவிக்க வேண்டும் என கோருகிறோம்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் பாடல் பெற்ற மிகப்பெரிய கோயில்களில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில், பழனி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் போன்ற பெரிய கோயில்களிலும் ஆகம முறைப்படி இருக்கிற கோயில்களிலும் பணி நியமனம் செய்ய வேண்டும்.

நாங்கள் பயிற்சி முடித்து பல தனியார் கோயில்களிலும் வேள்வி குடமுழுக்கு போன்ற அனைத்து வகையான பூஜைகளையும் செய்து வருகிறோம். அந்த அடிப்படையில் எங்களை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். கோயில் கருவறையில் இருக்கும் தீண்டாமையை ஒழிக்க அரசு தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

அதுபோல் தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள சைவ , வைணவ அரச்சகர் பயிற்சி நிலையங்களை இந்து அறநிலைத்துறை மீண்டும் தொடங்க வேண்டும்.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

அர்ச்சகர் பயிற்சி முடித்த 207 மாணவர்களுக்கும் 14 ஆண்டுகள் ஆகியும் பணிநியமனம் செய்யப்படவில்லை என்பதால் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அர்ச்சகர் பயிற்சி பெற்ற 5 மாணவர்கள் இறந்து விட்டார்கள். அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கவேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமையாக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். 15 ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளை கருணாநிதி பிறந்த நாளில் நிறைவேற்ற முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு