Published:Updated:

மரங்களை வளர்க்க இலவச மண்பானைகள்..! - அசத்தும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் #MyVikatan

இதுவரை நடவுசெய்யப்பட்ட மரக்கன்றுகளில் கால்வாசி பிழைத்திருந்தாலும், நம் தமிழகமே மரங்களின் தேசமாக மாறியிருக்கும்.

பானையுடன் பள்ளி மாணவர்கள்
பானையுடன் பள்ளி மாணவர்கள்

மழைநீரைச் சேகரிக்க, நீர்நிலைகளைத் தூர் வார, மரக் கன்றுகளை நடவுசெய்ய... எட்டி நிற்கும் இயற்கையை அழைத்து வரும் பணியில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தன்னெழுச்சிக் கரங்கள் தாமாகவே புறப்பட்டிருக்கின்றன. கணிப்பொறியாளர்கள் கண்மாய்களைத் தூர் வாருகிறார்கள். அரசுப் பணியாளர்கள், தம் சொந்தச் செலவில் குளங்களைச் சீரமைக்கிறார்கள். இளைஞர்கள் ஒன்றுகூடி இதற்கென மன்றங்களை அமைக்கிறார்கள். பொதுமக்கள், தேடிவந்து நிதி உதவிசெய்கிறார்கள். பணம் சேகரித்துவைத்திருக்கும் உண்டியலைக் கொண்டுவந்து, பிள்ளைகள் கொட்டுகிறார்கள். வயதான காலத்தில் சிறுகச்சிறுக சேமித்த 'சிருவாட்டுக்' காசை எல்லாம் பாட்டிகள் அள்ளிக்கொடுக்கிறார்கள். புது மணமக்கள் தங்களுக்குக் கிடைக்கும் அன்பளிப்புப் பணத்தை நீர் ஆதாரங்களை மேம்படுத்த எடுத்துக் கொடுக்கிறார்கள். வாரத்தின் விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமைகளிலும் ஊர் முழுக்க மரக்கன்றுகள் நட ஓடுகிறார்கள் இளைஞர்கள். இப்படி மண்ணும் மனிதர்களும் குளிர ஏராளப் பணிகள் இங்கே தன்னெழுச்சியாய் நடைபெற்றுவருகின்றன.

பானையுடன் பள்ளி மாணவர்கள்
பானையுடன் பள்ளி மாணவர்கள்

இளைஞர்கள்,பொதுமக்கள்,அரசு ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தாமாகவே முன்வந்து இந்தப் பணியில் ஈடுபடுவது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. அவர்களின் சாதனைப் பணிகளை இச்சமூகம் ஆச்சர்யமாகப் பார்த்துவருகிறது. அந்நிய தேசங்களில் வசித்தாலும், தான் பிறந்த சொந்த மண்ணுக்காக இளைஞர்களின் உதவிக்கரங்கள் நீண்டுகொண்டே இருக்கின்றன. இப்படி இயற்கையை மேம்படுத்த தன்னெழுச்சிப் பணிகள் ஆங்காங்கே நடைபெற்றுவரும் வேளையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் உள்ள அலஞ்சிரங்காடு எனும் சிற்றூரில் உள்ள குருகுலம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, ஒரு புதுச் சேவையில் இறங்கியுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 461 மாணவ மாணவியர் படிக்கும் ஆங்கில தொடக்கப் பள்ளியின் வித்தியாசமான, அதேவேளை அவசியமான ஒரு சேவை அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கிறது.

மரக் கன்றுகள் நடும் விழா, எல்லா ஊர்களிலும் எல்லா இடங்களிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் முதல் சாதாரண குடும்பத்து கல்யாண வைபோகங்கள் வரை இலவசமாய் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. மரக்கன்றுகள் நடப்படும் புகைப்படங்களை ஊடகங்களில் பார்த்தும் வருகிறோம். ஆனால், அப்படி நடப்படும் மரக்கன்றுகளுக்கு போதிய நீர் வசதி, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை செய்யப்படுகிறது என்றால், அது கேள்விக்குறியே?

அப்படி இதுவரை நடவுசெய்யப்பட்ட மரக்கன்றுகளில் கால்வாசி பிழைத்திருந்தாலும், நம் தமிழகமே மரங்களின் தேசமாக மாறி இருக்கும். மழைப்பொழிவு மிக்க பூமியாக செழித்திருக்கும். ஆனால், பொது இடங்களில் நட்ட மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற என்ன செய்திருக்கிறோம்?

இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் செயல்வடிவம் ஆக்கி இருக்கிறது, இக்குருகுல ஆங்கில தொடக்கப் பள்ளி.

சிவநேசன், குருகுலம் பள்ளி தாளாளர்
சிவநேசன், குருகுலம் பள்ளி தாளாளர்

இப்பள்ளியை 2015 -ல் தொடங்கி பெரும் நிதிச்சுமையுடன் நடத்திக்கொண்டிருக்கிறார், சிவநேசன். இவர், குளமங்கலம் தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் 9 ஆண்டுகள் கப்பல் நிறுவனத்தின் உணவகத்துறையில் பணிபுரிந்தவர். தாயகம் திரும்பி, தான் சேகரித்த பணத்தை எல்லாம் வைத்து ஏழு ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலுடன்கூடிய இப்பள்ளியை நடத்திவருகிறார்.

" நம் பகுதிப் பிள்ளைகள் மிகக் குறைந்த கட்டணத்தில் ஆங்கிலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவே இப்பள்ளியைத் தொடங்கினேன். அத்துடன், தமிழ் மொழியிலும் அவர்கள் சிறந்துவிளங்க ஆரம்பக் கல்வியில் அளிக்கப்படும் பயிற்சி மிகமிக முக்கியம். குழந்தைகளைப் புரிந்துகொள்வது என்பதே தனிக் கலை. அதற்கேற்ப நாங்கள் பாடங்களை நடத்துகிறோம். ஆங்கிலத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், தமிழ் எழுத்து வடிவங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறோம். ஆங்கிலப் பாட வகுப்புகளை நானே நேரடியாக நடத்துகிறேன். எம் பகுதி மாணவர்களுக்கு பாடத்திட்டத்துடன் கூடிய இயற்கை சார்ந்த மண்வளம் குறித்த புரிதல்களையும் உருவாக்கிவருகிறோம்.

கொத்தமங்கலத்தில் மண்  பானைகள் கொடுத்த போது..
கொத்தமங்கலத்தில் மண் பானைகள் கொடுத்த போது..

மரக்கன்றுகள் ஆங்காங்கே நடப்படுகின்றன. ஆனால், அவை வளர்வதற்குத்தேவையான தண்ணீர் கிடைக்கிறதா? என்றால் இல்லை. எங்கள் பகுதியில் மக்களின் தன்னார்வத்துடன் ஏரிகள், குளங்கள் தூர் வாரப்பட்டுவருகின்றன. இளைஞர் மன்றங்களும் இதற்காக அமைக்கப்பட்ட 'கைபா' என்ற அமைப்பும் இப்பணியில் தீவிரமாய்ச் செயல்பட்டுவருகின்றன. அவர்களின் பணி அளப்பரியது. எங்கள் பங்களிப்பாக நீர்நிலைகளைத் தூர் வாரி, மரக் கன்றுகள் நடும் இக்குழுவிற்கு சொட்டுநீர் பாசனத்திற்கான மண்பானைகள் வழங்க முடிவுசெய்தோம். இதற்காக நாங்கள் புதுப்பானைகள் எதுவும் வாங்குவதில்லை.

எம் பள்ளி மாணவர்களின் வீடுகளில்,உறவினர்களின் இல்லங்களில் பயன்படுத்தி ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பழைய மண் பானைகளைச் சேகரிக்க முடிவுசெய்தோம். அப்படிச் சேகரிக்கப்பட்ட பானைகளைத்தான் மரக்கன்றுகள் வளர்ப்பதற்கான சொட்டு நீர்ப்பாசனத்திற்கு வழங்கி வருகிறோம்.

மாணவர்கள் கொண்டு வந்த பானைகள்
மாணவர்கள் கொண்டு வந்த பானைகள்

இந்த மண்பானைகள் ஒவ்வொன்றும் 10 முதல் 25 லிட்டர் வரை தண்ணீர் கொள்ளவுகொண்டது. இவற்றில் துளையிட்டு, தேங்காய் நார்க்கயிற்றைப் பயன்படுத்தி சொட்டு நீர்ப் பாசனம் செய்ய முடியும். ஒவ்வொரு பானையின் தண்ணீரும் ஒரு மரக்கன்றுக்கு 5 முதல் 7 நாள்கள்வரை வரும். இந்தப் பானைகள் சேகரிப்பில் எம் மாணவர்கள் ஆர்வமாய் ஈடுபடுகின்றனர். ஒரே மாணவன் 14 மண் பானைகளை பள்ளிக்குக் கொண்டுவந்து சேர்த்து ஆச்சர்யப்படுத்தினான். பழைய பானையுடன்தான் பள்ளிக்குச் செல்வோம் என எம் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் இச்சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

முதலாவதாக சேந்தன்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஏரியைத் தூர் வாரி, கரைகளில் மரக்கன்றுகளை நட்டுவரும் குழுவினரிடம் 25 பானைகளை ஒப்படைத்தோம். இரண்டாவதாக, கொத்தமங்கலம் குழுவினரிடம் 175 மண் பானைகளை ஒப்படைத்துள்ளோம். மரங்களின் வளர்ச்சியில் எம் மாணவர்களின் பங்களிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. இயற்கையை காக்கும் பணியில் எம் பள்ளி தொடர்ந்து செயல்படும்.

சொட்டு நீர்ப்பாசனம்
சொட்டு நீர்ப்பாசனம்

நீர் நிலைகளைத் தூர் வாரும் பணியில் மக்களிடையே ஏற்பட்டுள்ள தன்னெழுச்சி, கட்டாயம் அரசாங்கத்தின் கண்களைத் திறக்கும். அரசாங்கம் இதில் தீவிர கவனம் செலுத்த வழிவகுக்கும். நீர் ஆதாரத்தில்தான் நம் மக்களின் மேம்பாடே அடங்கி இருக்கிறது.இதை அரசு உடனடியாகப் புரிந்துகொண்டால் நல்லது" என்கிறார், தனது பள்ளி வளாகத்தையே மரங்களடர்ந்த குறுவனமாக மாற்றி வைத்திருக்கும் இப்பள்ளியின் தாளாளர் சிவநேசன்.

" சோலைவனமா இருந்த எங்க வட்டாரம், கஜா புயலுக்குப் பிறகு எல்லா மரமும் ஒடிஞ்சு போய் வெறிச்சோடிக் கிடக்கு . எங்க ஏரியாவில எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறோம் சார். எங்க அம்மா , அப்பா எல்லாம் தினமும் கண்ணீர் வடிக்கிறாங்க. அதுக்காக எங்களால் முடிஞ்ச வேலைதான் இந்த மண்பானை கொடுத்து மரத்தை வளர்க்கிறது. மரம் வளர்ந்தா நாங்களும் வளர்ந்திடுவோம் சார். அதுனாலதான் எங்க வீடு, சொந்தக்காரங்க, பக்கத்து வீடுகள்ல இருந்த பழைய பொங்கல் பானை எல்லாம் தேடிப் பிடிச்சு ஸ்கூலுக்குக் கொண்டு வந்தேன். இன்னும் தேடி வந்து கொடுப்பேன்..." என்கிறான், 14 பானைகளை தீவிர ஆர்வமுடன் கொண்டுவந்து சேர்த்த இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ரா.ரமேஷ்.

 மாணவன் ரா.ரமேஷ்
மாணவன் ரா.ரமேஷ்

இந்த இளங்கன்றுகளின் முயற்சியால் மரக்கன்றுகள் வளர்ந்து பலனளிக்கும் என்பதில் ஐயமில்லை. மரத்தை வெச்சவன் தண்ணீர் ஊற்றுவான். இந்த மாணவர்கள் கொடுக்கும் மண் பானை வடிவத்திலும்..!

-பழ.அசோக்குமார்