Published:Updated:

`வேலூர் டு கிருஷ்ணகிரி!' -பேரறிவாளனுக்கு 5 நிபந்தனைகளை விதித்த சிறைத்துறை

பரோலில் வெளியே வந்த பேரறிவாளனுக்குச் சிறைத்துறை நிர்வாகம் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

பேரறிவாளன்
பேரறிவாளன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் சிறையிலிருந்து இரண்டாவது முறையாக ஒருமாத பரோலில் வெளியே வந்துள்ளார். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கோவிந்தசாமி தெருவில் உள்ள அவரின் வீட்டுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தாய் அற்புதம்மாள் மகிழ்ச்சி பொங்க மகனை வரவேற்றார்.

அற்புதம்மாள்
அற்புதம்மாள்

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், ‘‘அறிவு பரோலில் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும், அவனது 28 ஆண்டுக்கால வாழ்க்கை அழிந்துவிட்டது. விரைவில் விடுதலையானால் மட்டுமே நான் நிம்மதியடைவேன்’’ என்றார். தந்தை குயில்தாசனின் உடல்நிலை மற்றும் சகோதரி மகளின் திருமணம் ஆகியவற்றைக் காரணம் காட்டித்தான் பேரறிவாளன் பரோல் பெற்றுள்ளார். 

Vikatan

அவர் வெளியிலிருக்கும் 30 நாள்களும் என்னென்ன நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்... என்கிற சிறைத்துறை நிர்வாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கிடைத்திருக்கிறது. அதில், ‘புழல் மத்திய சிறையில், ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டிருந்த எண் 7460’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பெற்றோருடன் பேரறிவாளன்
பெற்றோருடன் பேரறிவாளன்

மேலும், `தினமும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையொப்பமிட வேண்டும். ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது. ஒரே தாய்மாமன் என்ற முறையில் சகோதரியின் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் 24-ம் தேதி நடைபெறும் திருமண நிகழ்விலும் கலந்துகொள்ளலாம்.

தந்தையை உரிய நேரங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் வரலாம். தவிர, வேறு எங்கேயும் செல்லக்கூடாது. மோசமான நடத்தைகொண்ட நபர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது. நன்னடத்தையுடன் இருக்க வேண்டும். எந்தக் குற்றமும் புரிதல் கூடாது. 

பேரறிவாளன்
பேரறிவாளன்

டிசம்பர் 13-ம் தேதி மீண்டும் சிறைக்குத் திரும்பிவிட வேண்டும். பேரறிவாளனுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் சிறைக்காவலர்கள் செய்வார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கா மகள் திருமண அழைப்பிதழில், தன் பெயர் இருந்ததைப் பார்த்து பேரறிவாளன் நெகிழ்ச்சியடைந்ததாகக் குடும்பத்தினர் சொல்கிறார்கள். நிபந்தனையின்படி, இன்று காலை ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கையொப்பமிட்டார் பேரறிவாளன்.