Published:Updated:

`உடல்நலப் பிரச்னை; 3 மாத பரோல்!’ - உள்துறைச் செயலருக்குக் கடிதம் அனுப்பிய நளினி

நளினி
நளினி

சித்தா மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதற்காக மூன்று மாத பரோல் கேட்டு, உள்துறைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் நளினி.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, மூன்று மாத பரோல் கேட்டு தமிழக உள்துறைச் செயலாளருக்கு திடீரென கடிதம் அனுப்பியிருக்கிறார். இது குறித்து, நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், ``30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினிக்கு உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

வழக்கறிஞர் புகழேந்தி
வழக்கறிஞர் புகழேந்தி

ரத்தத்தில் `ஹீமோகுளோபின்’ குறைவாக இருக்கிறது. பல் வலியாலும் அவதிப்படுகிறார். கண்புரை நோயாலும் பார்வைத்திறன் குறைந்திருக்கிறது. வயிற்றுவலி போன்ற நோய்களாலும் தொடர்ச்சியாகத் துன்பப்படுகிறார். எனவே, சிறை விதிகளைத் தளர்த்தி மனிதாபிமான அடிப்படையில் 90 நாள்கள் பரோல் கேட்டு வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் மூலமாக உள்துறைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

பரோல் கிடைக்கும் பட்சத்தில், சித்தா மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டால், நவம்பர் முதல் வாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடவிருக்கிறோம். லண்டனில் தங்கியிருக்கும் மகள் ஹரித்ராவுக்குத் திருமணம் செய்துவைக்க கடந்த ஆண்டு ஒரு மாத பரோலில் வெளியே வந்தார்.

நளினி
நளினி

மகள் ஹரித்ரா லண்டனிலிருந்து வராத காரணத்தால், பரோல் காலம் முடிந்து மன வருத்தத்துடன் சிறைக்குத் திரும்பிவிட்டார். இதையடுத்து, நளினிக்கு மீண்டும் பரோல் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் அவருக்கு கட்டாயமாகச் சிகிச்சை தேவைப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் நளினியின் மனுவை அரசு பரிசீலனை செய்து பரோல் வழங்க வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு