Published:Updated:

`எல்லோரும் டூ-வீலருக்கு மாறிட்டாங்க; எங்களுக்குதான் நஷ்டம்!' - தனியார் பேருந்து உரிமையாளர்

ஆம்னி பேருந்து நிலையம் -மதுரை
ஆம்னி பேருந்து நிலையம் -மதுரை ( Representational Image )

ஆம்னி பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் வருமானமின்றி வாழ்வாதாரம் இன்றி அவர்களது குடும்பங்கள் தவிக்கின்றன.

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பேருந்துகள் இயங்கவில்லை. ஆட்டோ, கார்களும் ஓடவில்லை. மக்கள், அவசிய போக்குவரத்துக்கு டூ-வீலர்கள் மட்டுமே பயன்பட்டது. இந்த நிலையில், பேருந்துகள் இயக்கம் நஷ்டத்தையே தந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள் தனியார் பேருந்து உரிமையாளர்கள்.

Selvamani
Selvamani

இதுதொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர் ஆர்.கே.செல்வமணியிடம் பேசினோம். `கொரோனா ஊரடங்கால் வாழ்வு, சாவு, அவசரப் பணிகள், மருத்துவ உதவிகள் என எல்லாவற்றிற்குமே டூ-வீலர்கள்தான் உதவி புரிந்துள்ளன. எனவே தமிழகமெங்கும் டூ-வீலர் விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது பழைய டூவீலர் விற்பனைக்கும் மவுசு கூடியுள்ளது.

குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 1,300 டூ-வீலர் விற்பனையாகி பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு பேருந்தில் பயணிகளுக்கு 55 இருக்கைகள் மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும், மேலும் ஒரு 50 பேர் நின்றுகொண்டே பயணிப்பார்கள். இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு வருமானம் கிடைத்தது.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

ஆனால், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு பேருந்துகளை இயக்க அரசு அனுமதி தந்தபோதிலும், பேருந்துகளில் மக்கள் கூட்டம் இல்லை. பயணிகள் வரவில்லை. அனைவரும் டூ-வீலர்களில் பயணிக்கிறார்கள். இதனால் நஷ்டத்தில் அரசுப் பேருந்துகள் இயங்கினாலும் தனியார் பேருந்துகளை இயக்க முடியவில்லை.

தமிழ்நாட்டில் 4,500 தனியார் பேருந்துகளும், 3,000 மினி பேருந்துகளும், 3,500 ஆம்னி பேருந்துகளும், 22,000 அரசுப் பேருந்துகள் இயங்குகின்றன. அதேநேரத்தில் லட்சக்கணக்கில் டூ-வீலர்கள் இயங்குகின்றன. டீசல் மற்றும் பெட்ரோல் விலையை கட்டுப்படுத்தி, அதைக் கொண்டு வருமானம் பெறும் மத்திய, மாநில அரசுகள் சிந்தித்து நல்ல நடவடிக்கை மேற்கொண்டால் போக்குவரத்தும் எளிதாகும். பயணிகளுக்குக் கட்டண சலுகைகளும் கிடைக்கும். அதற்கு அரசுகள் வழி காட்ட வேண்டும்.

ஆம்னி பேருந்துகளில் வெளி மாநிலங்களில் பதிவு பெற்று படுக்கை வசதி செய்யப்படுகின்றன. ஓர் இருக்கைக்கு 3 மாதங்களுக்கு முன்பணமாக ரூ.6,000 சாலை வரியாக கட்டிவிட வேண்டும். அதேபோல் ஆம்னி பேருந்துகளில் ஓர் இருக்கை வசதிக்கு ரூ.3,000 சாலை வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும். திடீரென ஏற்பட்ட ஊரடங்கால் ஆம்னி பேருந்துகள் முடக்கப்பட்டது. இந்த வரிகள் மே மாதம் 15-ம் தேதி முடிவடைந்தபோது, ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இது மேலும் நீட்டிக்கப்பட வேண்டும்.

ஆம்னி பேருந்து நிலையம்
ஆம்னி பேருந்து நிலையம்

எனது பேருந்துகளை கடந்த இரண்டு நாள்கள் இயக்கியபோதும் பயணிகள் இல்லை. தினமும் எனக்கு ரூ.5,000 நஷ்டம் ஏற்பட்டது. எனவே, பேருந்து இயக்கத்தை நிறுத்திவிட்டேன். ஆனால், ஆம்னி பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் வருமானமின்றி வாழ்வாதாரம் இன்றி அவர்களது குடும்பங்கள் தவிக்கின்றன. அவர்களுக்கு இதுவரை அரசு எந்த நிவாரண உதவிகளும் வழங்கவில்லை. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணித்த பயணிகள் டூ-வீலரில் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். இனி எங்களைப்போன்றோர் பேருந்துகளை எப்படி இயக்குவது என்றே தெரியவில்லை. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் நான்கு மாவட்டங்கள் முடங்கி இருக்கிறபோது நாங்கள் எப்படி பேருந்துகளை இயக்க முடியும்?" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு