Published:Updated:

`கரைசலைக் குடித்ததும் மயங்கினார்' - கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்றவருக்கு நேர்ந்த சோகம்

கொரோனா
கொரோனா

சென்னை தி.நகரில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க சோடியம் நைட்ரேட் கரைசலைக் குடித்தவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி.நகரில் டாக்டர் ஒருவரின் வீடு உள்ளது. இவரின் நண்பர் பெருங்குடியைச் சேர்ந்த சிவனேசன் (47). இவர் 27 வருடங்களாக தனியார் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளராக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் பணிபுரிந்து வந்தார். இவரின் நிறுவனத்தின் சார்பில் சளி மருந்து உட்பட பல்வேறு மருந்துகள் கண்டுபிடிப்பில் சிவனேசன் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

`ஊரடங்கால் வருமானம் இல்லை; சுப நிகழ்ச்சிக்குச் செல்வதில் தகராறு?’ -கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு

சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்சைடு தயாரித்தால் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த முடியும் என சிவனேசன் கருதினார். கொரோனாவுக்கு நோய் கண்டுபிடித்தால் பிரபலமாகிவிடலாம் என்ற ஆசையில் தி.நகரில் உள்ள டாக்டர் வீட்டில் மருந்து கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபட்டுள்ளார்.

சிவனேசன், தன்னுடைய சோதனை மூலம் உருவாக்கிய சோடியம் நைட்ரேட் கரைசலை பரிசோதனைக்காக அவரே குடித்தார். குடித்த சிறிது நேரத்தில் அவர் மயங்கினார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், சிவனேசனை அங்கிருந்து மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

கொரோனா
கொரோனா

அங்கு சிகிச்சைப் பலனின்றி சிவனேசன் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் தேனாம்பேட்டை போலீஸார், சிவனேசனின் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரின் மரணம் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சிவனேசன் ஈடுபட்ட தகவல் தெரியவந்துள்ளது. இருப்பினும் அவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்கின்றனர் போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு