Published:Updated:

தமிழக கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: `மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம்’ - அமைச்சர் மா.சு

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் ரத்த ஓட்டம் தடைப்பட்டிருந்ததால், நேற்று இரவு சிறுநீரகம், ஈரல், இதயம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்."- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: `மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம்’ - அமைச்சர் மா.சு

"கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் ரத்த ஓட்டம் தடைப்பட்டிருந்ததால், நேற்று இரவு சிறுநீரகம், ஈரல், இதயம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்."- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published:Updated:
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா. சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்துவந்தார். கால்பந்து போட்டிகளில் அதிகம் ஆர்வம்கொண்ட பிரியா, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மூட்டுவலி காரணமாக கொளத்தூர், பெரியார் நகரிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள், பிரியாவின் வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகியிருப்பதாகத் தெரிவித்து அறுவை சிகிச்சை செய்தனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரியாவின் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்ச்சியற்றதாக இருந்தது. இதனால், அவர் உடனே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பிரியாவின் காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு இருப்பதைக் கண்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வலது காலை அகற்றியிருக்கிறார்கள்.

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா

மேலும், பிரியாவின் முதற்கட்ட சிகிச்சையில் கவனக்குறைவாக செயல்பட்ட இரண்டு மருத்துவர்களையும் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், பிரியா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ``பிரியாவுக்கு மிகச்சரியான உயர் தொழிற்நுட்ப சிகிச்சைதான் வழங்கப்பட்டது. ஆனால், மருத்துவர்கள் கட்டுக்கட்டுவதில் கவனக்குறைவாக இருந்ததால் ரத்த ஓட்டம் நின்றிருக்கிறது. இது அரசின் கவனத்துக்கு வந்தவுடனே, நான் நேரில் வந்து பிரியாவின் குடும்பத்தாரைச் சந்தித்துப் பேசினேன். இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரியா நலமாகவே காணப்பட்டார். அப்போதே, ஒரு காலை இழந்த பிரியாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவரின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை

மேலும், சிகிச்சைக்குப் பிறகு பெங்களூரில் பிரபலமாக இருக்கும் பேட்டரி காலை பிரியாவுக்குப் பொருத்துவது என அரசு சார்பில் ஆலோசித்து, திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரத்த ஓட்டம் தடைப்பட்டிருந்ததால், நேற்று இரவு சிறுநீரகம், ஈரல், இதயம் என அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு பிரியா உயிரிழந்திருக்கிறார். பிரியாவின் இறப்பு ஈடுசெய்ய முடியாதது.

சிகிச்சையின்போது கவனக்குறைவாக இருந்த இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், துறைரீதியிலான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. பிரியாவின் குடும்பத்தாருக்கு உடனடியாக 10 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், பிரியாவின் மூன்று சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிகப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ``அறுவை சிகிச்சையின்போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வோர் அரசுத் துறையும் அழிந்துகொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவத்துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.

தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். திமுக அரசு, சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும்” என்றார்.

மருத்துவர்களின் கவனக்குறைவால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்.... மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சக வீராங்கனைகள்!

இடம்: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை