Published:Updated:

`தரம் குறித்த ஆய்வு தேவை’ - பொருத்திய சற்று நேரத்திலே உடைந்த மின் சாதனம்; ஊழியர்கள் அதிர்ச்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உடைந்து விழுந்த மின் சாதனம்
உடைந்து விழுந்த மின் சாதனம்

மின்சாரத்துறை சார்பில் கொள்முதல் செய்யப்படும் பொருள்கள் தரமில்லாமல் இருப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது கொள்முதல் செய்யப்படும் மீட்டர் பாக்ஸ் தரம் இல்லாததாக இருக்கிறது.

தமிழ்நாடு மின்சாரத்துறையில் மின் பயன்பாட்டுக்காகக் கொள்முதல் செய்யப்படும் மின்கம்பிகள் உள்ளிட்ட பொருள்கள் தரமில்லாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்களால் கூறப்படும் நிலையில், தஞ்சாவூரில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொண்ட சிறிது நேரத்திலேயே மின்கம்பத்தில் புதிதாகப் பொருத்தப்பட்ட பொருள் உடைந்து விழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு இதைச் சாதாரண விஷயமாகக் கருதாமல் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக தீவிர விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

மின்சாரத்துறை அலுவலகம்
மின்சாரத்துறை அலுவலகம்

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி என்ற இடத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தில் புறநகர்ப் பிரிவு மேற்குப் பகுதிக்கான மின்சாரத்துறை அலுவலகம் செயல்பட்டுவருகிறது. குறிப்பிட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியான ரியாஸ் நகரில் சில தினங்களுக்கு முன்பு மின்வாரிய ஊழியர்கள் உயர் அழுத்த மின் பாதையில் பழைய பொருள்களை எடுத்துவிட்டு, புதிய மின் பொருள்களைப் பொருத்தி, பராமரிப்பு பணியைச் செய்துவந்தனர். அப்போது மின் கம்பத்தில் `வி கிராஸ் ஆர்ம்’ எனச் சொல்லப்படும் `விஎக்ஸ்ஆர்ம்’ என்கிற புதிய பொருளை மின்கம்பியுடன் இணைத்துப் பொருத்தினர்.

பணியை முடித்துவிட்டு லைன் மேன் கீழே இறங்கிய கொஞ்ச நேரத்திலேயே வி கிராஸ் ஆர்ம் பாதி உடைந்து கீழே விழுந்தது. மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்ததாலும், லைன் மேன்கள் அதே இடத்தில் இருந்ததாலும் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. அதேநேரம் பொதுமக்கள் அந்த வழியாகச் சென்றுகொண்டிருக்கும் சமயத்தில், கரன்ட் இருக்கும்போது மின்கம்பியுடன் சேர்ந்து உடைந்து விழுந்திருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும் எனக் கூறப்படுவது ஒருபுறம் இருந்தாலும், மின்சாரத்துறையில் பயன்படுத்தப்படும் பொருள்கள் ஒப்பந்ததாரர்களிடம் குறைந்த விலைக்கு, தரம் இல்லாத பொருள்கள் கொள்முதல் செய்யப்படுவதால் இது போன்று நடப்பதாக மின்சாரத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.

மின் கம்பம்
மின் கம்பம்

இது குறித்துச் சிலரிடம் பேசினோம். ``புதிய மின் இணைப்பு கொடுப்பதற்காக பழைய மீட்டர் பாக்ஸை எடுத்து விட்டு புதிய மீட்டர் பாக்ஸ் நுகர்வோரின் விருப்பத்துக்கேற்ப பொருத்தப்படுகிறது. தற்போது கொள்முதல் செய்யப்படும் மீட்டர் பாக்ஸ் தரம் இல்லாததாக இருக்கிறது. ஒப்பந்த நிறுவனங்கள் குறைந்த விலைக்குத் தருவதாகக் கூறி ஒப்பந்தம் போட்டுக்கொண்டு பொருள்களின் தரத்தைக் குறைத்து, சம்பந்தப்பட்ட துறையிடம் கொடுக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் பொருத்தப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளேயே மீட்டர் பாக்ஸ் பழுது ஏற்படுவது தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்கிறது. பல இடங்களில் மீட்டர் பாக்ஸ் வெடித்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு மாதத்துக்குள்ளேயே 20 மீட்டர் பாக்ஸ் பழுதடைந்த சம்வங்களும் நடந்துள்ளன. இதேபோல் மின்கம்பிகள், வி கிராஸ் ஆர்ம் போன்ற மின்சாரத் தேவைக்காக வாங்கப்படும் பல பொருள்கள் தரம் இல்லாததாகவே இருக்கின்றன.

மின்சாரத்துக்கான பொருள்கள்
மின்சாரத்துக்கான பொருள்கள்

இதனால் தஞ்சாவூர் நகரிய கோட்டம் மின்பகிர்மான மேற்குக் கழக அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் உயர் அழுத்த மின்பாதை பராமரிப்பு பணியின்போது பொருத்தப்பட்ட வி கிராஸ் ஆர்ம் உடைந்து கிழே விழுந்திருக்கிறது. பொருள் தரமில்லாததே காரணம் என அதிர்ச்சியடைந்த பணியிலிருந்த லைன்மேன்கள் அதை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளனர். விபரீதம் ஏதும் நடக்காததால் இது சாதாரண விஷயமாகத் தோன்றலாம். இந்த நிலையில் ஏன் பொருள் உடைந்தது எனக் குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் கேட்காமல், ஸ்டாக் உள்ள பொருள்களின் தரத்தை ஆய்வு செய்யாமல் பணியிலிருந்த லைன்மேன்களை விசாரணை செய்துவருவது வேடிக்கையாக இருக்கிறது.

இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். ஏன் பொருள்கள் தரமில்லாமல் இருக்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே அப்பாவி உயிர்கள் பறிபோகாமல் காக்கப்படும்’’ என்றனர்.

மின்சாரத்துறை அலுவலகம்
மின்சாரத்துறை அலுவலகம்

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் சுகுமாறன் என்பவரிடம் பேசினோம். ``உடைந்து விழுந்த வி கிராஸ் ஆர்ம் உற்பத்தி செய்யப்பட்ட இடத்தில் முறையாக வெல்ட் வைக்கவில்லை. அதனால் பொருத்தப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே உடைந்துவிட்டது. இதை ஊழியர்கள் சிலரே போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டுவிட்டனர். இது தொடர்பாக தஞ்சாவூர் எஸ்.பி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. அதன் முடிவிலேதான் எதனால் உடைந்து விழுந்தது எனத் தெரியும்” என முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு