Published:Updated:

`அஸ்ஸாமில் பற்றி எரியும் எண்ணெய்க் கிணறு; காவிரி டெல்டாவுக்கு எச்சரிக்கை மணி’ - பேராசிரியர் ஜெயராமன்

அசாமில் உள்ள எண்ணெய் கிணறு
அசாமில் உள்ள எண்ணெய் கிணறு

மே 27-ம் தேதி பிடித்த தீயை இன்றுவரை அணைக்க முடியவில்லை. சிங்கப்பூரிலிருந்து 3 வல்லுநர்களை அழைத்து வந்துள்ளனர். தீயை கட்டுக்குள் கொண்டுவர மேலும் 4 வாரங்கள் ஆகும் என்று எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் கசிவு ஏற்பட்டதால், அங்கு தற்போது தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் இருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இது காவிரி டெல்டாவுக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி எனவும் இங்கு செயல்பட்டு வரும் எண்ணெய்க் கிணறுகளை இங்கிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்.

ஒ.என்.ஜி.சி
ஒ.என்.ஜி.சி

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கிணறுகள் ஏராளமான எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது. இதன் குழாய்களில் ஏற்படும் கசிவினால், அவ்வப்போது, இங்குள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், நிலத்தடி நீர், காற்று உள்ளிட்டவைகளும் மாசடைகிறது. இதனால் இங்கிருந்து ஒ.என்.ஜி.சி எண்ணெய்க் கிணறுகள் வெளியேற்றப்பட வேண்டும் என மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.

மேலும், இப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால், இக்கோரிக்கை மேலும் வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில்தான் அஸ்ஸாமில் ஏற்பட்ட தீ விபத்து காவிரி டெல்டாவுக்கான எச்சரிக்கை மணி என்கிறார் பேராசிரியர் ஜெயராமன். இது குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய அவர், ``அஸ்ஸாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தில் உள்ள பாக்ஜனில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய்க் கிணறு தீ எரிந்துகொண்டிருக்கிறது. தீயை, அணைக்க முடியாமல் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் திணறிக்கொண்டிருக்கிறது.

பேராசிரியர் ஜெயராமன்
பேராசிரியர் ஜெயராமன்

சுற்றிலும் உள்ள குடியிருப்புகளிலிருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற்றப்பட்டுள்ளனர். மே 27-ம் தேதி பிடித்த தீயை இன்றுவரை அணைக்க முடியவில்லை. சிங்கப்பூரிலிருந்து 3 வல்லுநர்களை அழைத்து வந்துள்ளனர். தீயை கட்டுக்குள் கொண்டுவர மேலும் 4 வாரங்கள் ஆகும் என்று எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதைப் பார்த்ததும் நாம் காவிரிப் படுகை மக்களின் எதிர்காலத்தை எண்ணி கவலை அடைய வைக்கிறது. இங்குள்ள கிராமங்களில் குடியிருப்புகளுக்கு மிக நெருக்கமாக எண்ணெய்க் கிணறுகளை ஓ.என்.ஜி.சி நிறுவனம் அமைத்துள்ளது. மக்களின் நலன் கருதி, இக்கிணறுகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இக்கிணறுகளைத் தொடர்ந்து செயல்பட, தமிழக அரசு அனுமதிக்கவே கூடாது. அவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை உடனடியாக, ரத்து செய்து எண்ணெய் நிறுவனங்களை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும். ஏதும் நடக்காது என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை. நம் வாழ்விடத்தைப் பாதுகாத்துக் கொள்வது மிக முக்கியம். அஸ்ஸாம் எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட தீ எந்த எண்ணெய்க் கிணற்றிலும் ஏற்படக்கூடும். எண்ணெய் நிறுவனங்களை வெளியேற்றுவதும், கிணறுகளை நிரந்தரமாக மூடுவதும் மட்டுமே பாதுகாப்பை உறுதி செய்யும்” என்கிறார்.

இது குறித்து ஒ.என்.ஜி.சி தரப்பில் பேசியபோது ``இங்கு அதுபோல் நடக்க வாய்ப்பில்லை. அனைத்துக் கட்டமைப்புகளும், செயல்பாடுகளும் மிகவும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் கையாளப்படுகிறது” எனத் தெரிவித்தார்கள். எண்ணெய்க் கிணறுகளைவிடவும் மக்களின் உயிரும், வாழ்வாதாரமுமே மிகவும் முக்கியம். இதில் அரசு எந்தவித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்கிறார்கள் காவிரி டெல்டா மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு