Published:Updated:

`திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் என் பேச்சை ரத்துசெய்தது தவறானது!' - அ.மார்க்ஸ்

திருவாரூரில் உள்ள, மத்திய பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அ.மார்க்ஸைத் திடீரென பல்கலைக்கழக நிர்வாகம் வரவேண்டாம் எனக் கூறியுள்ளது.

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

பேராசிரியர் அ.மார்க்ஸ், எழுத்தாளராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் 40 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருபவர். மனித உரிமை ஆர்வலராக இந்தியாவின் பல பகுதிகளுக்குப் பயணித்தவர். திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் மற்றும் National foundation for communal harmony-யும் இணைந்து, மதங்கள் பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கம் ஒன்றை அக்டோபர் 16 மற்றும் 17-ம் தேதி நடத்துவதாகத் திட்டமிட்டுள்ளது. அதில், 'பௌத்தம்' பற்றி அ.மார்க்ஸைப் பேசுவதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் அழைத்துள்ளது. இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி தொடங்கியதும், காலை அ.மார்க்ஸின் பேச்சை ரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக அவர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டதற்கு, முன்பின் முரணாகப் பேசி தவிர்த்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன.

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

இதுதொடர்பாக அ.மார்க்ஸிடம் பேசினோம், ''திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் இந்திய மதங்கள் தொடர்பாக நடைபெறுகின்ற கருத்தரங்கில் பேசுவதற்காக என்னை அழைத்திருந்தனர். பௌத்தம் தொடர்பாக நான் பல நூல்களை எழுதியுள்ளேன். பௌத்தவியல் தொடர்பான பணிகளில் தொடர்ந்து இயங்கிவருபவன் நான். பௌத்தம் பற்றிய என் நூல்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பௌத்தம் தொடர்பான கலந்துரையாடல் பலவற்றில் நான் பேசியுள்ளேன். இந்தக் காரணங்களால்தான் கல்லூரி நிர்வாகம் பௌத்தம் தொடர்பாக என்னைப் பேசுவதற்காக அழைத்தது.

``மருத்துவத் தகவலை ஆதாருடன் இணைப்பது தனிநபர் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் செயல்!'' - அ.மார்க்ஸ்

இந்த நிகழ்ச்சிக்காக நான் கட்டுரை தயார் செய்துகொண்டிருந்த நிலையில், பேராசிரியர் ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு, மிகவும் தயக்கத்துடன் பேசினார். `சார், உங்கள் பேச்சை ரத்து செய்துவிட்டோம். என்னை வேறு எதையும் கேட்காதீர்கள்' என்றார். `ஏன் ரத்து செய்கிறீர்கள்?' எனக் கேட்டதற்கு, சரியான தகவல் இல்லை. நிர்வாகத்துக்கு வெளியிலிருந்து மிரட்டல் வந்திருக்கிறது என நான் நினைக்கிறேன். நான், அந்தக் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

அறிவு ஜீவிகளின் மிரட்டல்களுக்குப் பயந்தால், அவர்களால் ஓய்வு பெறும்வரை சம்பளம் வாங்கமுடியும். ஆனால், அவர்களால் அறிவுலகத்துக்கு எந்தப் பயனும் இருக்காது. இந்த உலகில், இன்று அறியப்படுகிற அத்தனை அறிஞர்களும் அச்சுறுத்தல்களைக் கடந்து வந்தவர்களே. இது, பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு எதிரானதொரு செயல்" என்றார் ஆதங்கத்துடன். பல்கலைக்கழக தரப்பிலிருந்து வந்த விளக்கமாக அ.மார்க்ஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், கருத்தரங்கின் முதல் நாள் அ.மார்க்ஸின் பேச்சை ஏற்பாடு செய்திருந்ததாகவும், மார்க்ஸ் தனது பேச்சை இரண்டாம் நாள் அமர்விற்கு மாற்றும்படி கூறியதால்தான் ரத்து செய்யப்பட்டது எனவும் கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்திருப்பதாக மார்க்ஸின் முகநூல் பதிவில் உள்ளது. மேலும், தான் இரண்டாம் நாள் பேச கேட்டதற்கு ஒப்புதல் அளித்து, தனக்கு வாகனமும் ஏற்பாடு செய்திருந்தனர். பிறகுதான் என்னை அழைத்து, பேச வரவேண்டாம் என்றனர் எனப் பதிவிட்டு, அதற்கான சான்றாக பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து வந்த ஈ-மெயில்களைப் பதிவிட்டிருந்தார்.

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

இந்தப் பிரச்னை தொடர்பாக, திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் விளக்கதைப் பெற பல முறை தொடர்புகொண்டபோதும், அவர்கள் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. இதுதொடர்பாக அவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.