Published:Updated:

`` வெறும் ரெண்டாயிரம் ரூபாய்தான்! ’’ இரவுகளில் ’கூப்பிடும்’ கோயம்பேடு

சென்னைப் பாலியல் தொழில்
சென்னைப் பாலியல் தொழில் ( விகடன் )

மக்கள் நெருக்கம் அதிகம் நிறைந்த கோயம்பேட்டைச் சுற்றியுள்ள ஏரியாக்களில் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.

சென்னை மாநகரத்தின் உறங்கா ஏரியா கோயம்பேடு. தினமும் பல லட்சம் கனவுகளோடு இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருந்தும் கோயம்பேட்டுக்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்திறங்கிய வண்ணம்தான் இருக்கின்றனர். அப்படி கனவுகளைச் சுமந்து வருபவர்களுக்கு, முதல் வரவேற்பை அளிப்பது கோயம்பேட்டில் கொடிகட்டிப் பறக்கும் பாலியல் தொழில்தான்.

கோயம்பேடு
கோயம்பேடு
விகடன்

சென்னையில் அதிகமாக பாலியல் தொழில் நடைபெறும் ஏரியாக்களாக நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், வளசரவாக்கம், மவுலிவாக்கம், வடபழனி ஏரியாக்களை குறிப்பிடலாம். ஆனால் அதற்குச் சற்றும் சளைக்காமல் கோயம்பேட்டின் வீதிகளில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது பாலியல் தொழில்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு உள்ளே உள்ள நடைபாதைகள், பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகள், கோயம்பேட்டிலிருந்து அண்ணா நகர் செல்லும் வழிகள், கோயம்பேடு மார்க்கெட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறப்பதாக விகடனுக்குப் புகார் வந்தது.

பாலியல் தொழில்
பாலியல் தொழில்
விகடன்

இந்தப் புகார் குறித்து விசாரிக்க நமது நிருபர்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டனர்.

மாலை 6 மணியளவில் கோயம்பேடு காய்கறிச் சந்தை அருகே நமது நிருபர் நடந்து செல்லுகையில் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர், "இரண்டாயிரம் ரூபா தான்.. வர்றீயா?" எனச் சர்வ சாதாரணமாக அழைத்திருக்கிறார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். “உங்க ரூம்னா 1500, எங்க ரூம்னா 2000. பாத்ரூம், குஷன் பெட் வசதியோட பக்காவா இருக்கும்“ என்றார். அவரிடம் பாலியல் தொழில் குறித்து மேற்கொண்டு பேசமுற்பட்ட போது, சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

கோயம்பேடு
கோயம்பேடு
விகடன்

நமது கள ஆய்வு தொடர்ந்தது... ஆங்காங்கே இது போன்று பலரைக் காண முடிந்தது. கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகே நாம் கண்ட காட்சி பகீர் ரகம். 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தார். பேச்சுவார்த்தை ஓகே ஆனவுடன், இருவரும் பேருந்து நிலையத்தின் பின்னால் உள்ள புதர் மண்டிய இடத்திற்குச் சென்றனர். இதற்கான ஆதாரங்களையும் ஆவணப்படுத்தியுள்ளோம்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வந்து செல்லும் ஒரு இடத்தில், துணிச்சலாக பாலியல் தொழில் நடக்கிறது. இதைத் தடுக்க வேண்டிய போலீஸாரோ, அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சில நேரங்களில் ரோந்துப் பணியில் உள்ள காவல்துறையினரே, பாலியல் தொழிலாளிகளோடு பேசுபவர்களை மிரட்டிப் பணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பெயர் வெளியிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய வியாபாரிகள் சிலர், “கோயம்பேடு பகுதிகளில் குடும்பத்தினரோடு கடந்து செல்லும் போது பாலியல் தொழில் நடைபெறுவதால் பல சங்கடங்கள் எழுகின்றன. இரவு ஏழு மணிக்கு மேல் சில கல்லூரி, பள்ளி மாணவர்கள் கூட பாலியல் தொழிலாளிகளுடன் செல்வதைக் காண முடிகிறது. காய்கறி மார்க்கெட் மற்றும் அதைச் சுற்றியுள்ள சிறு கடைகளில் கூலி வேலை செய்பவர்கள் அதிகமாக உள்ளனர். தங்களின் முழுச் சம்பளத்தையும் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களிடம் இழந்து விடும் அவலங்களும் அடிக்கடி நடக்கிறது” என்றனர்.

இது குறித்து விளக்கமறிய கோயம்பேடு காவல் நிலையத்தை தொடர்பு கொண்டோம். "பாலியல் தொழிலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், உடனடியாக நமது புகார் குறித்து விசாரிப்பதாகவும்’’ ரெடிமேட் பதில் வந்தது.

காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபொழுது, ``பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்கவே கோயம்பேடு காவல் நிலையத்தில், ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளோம். இதுபோக ரோந்துக் காவல்படையும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஒரு சில இடங்களில் சில தவறுகள் நேரலாம். ஆனாலும், குற்றங்களைத் தடுக்க விரைந்து செயல்படுகின்றோம். மற்றபடி பாலியல் தொழில் செய்பவர்களிடமிருந்து எந்தக் காவலர்களும் லஞ்சம் வாங்குவதில்லை" என்றார்.

அதிகாரிகள் இப்படிச் சொன்னாலும் அங்குள்ள களநிலவரம் முற்றிலும் முரணாகத்தான் இருக்கிறது. இனியாவது காவல்துறை உயரதிகாரிகள் களத்தில் இறங்கி இங்கு நடக்கும் பாலியல் தொழிலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பது அவசியம். இல்லாவிடில் அது ஏராளமான இளைஞர்களின் வாழ்க்கைக்குக் குழி பறித்துவிடும் என்பது நிச்சயம்.

அடுத்த கட்டுரைக்கு