தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், செவிலியர் குடியிருப்பு வளாகத்தில், `செவிலியர் தாய்’ என அழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. செவிலியர் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த பூமி பூஜைக்கு முறையான அனுமதி பெறவில்லை என்றும், மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களிடம் கட்டாயப் பணம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதற்கிடையே பூமி பூஜை நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனையடுத்து இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி, பா.ஜ.க-வினர் சார்பில் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நைட்டிங்கேல் அம்மையார் சிலை நிறுவுவதற்கான பணிகளை மேற்கொள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் தடைவிதித்ததால் சிலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் அனுமதியின்றி மருத்துவமனை வளாகத்தில் சிலைவைக்க பூமி பூஜை நடத்தப்பட்ட விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எம்.செல்வம், இந்து எழுச்சி முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலாளர் ராமராஜன் ஆகியோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரைச் சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதில் உரிய அனுமதியின்றி தன்னிச்சையாக மருத்துவமனை வளாகத்துக்குள் சிலை வைக்க முயன்ற செவிலியர், கண்காணிப்பாளரான ஜோஸ்பின் ஜென்னி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர். மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டமனூர் விலக்கு போலீஸாரிடமும் புகார் கொடுத்தனர்.

அனுமதியின்றி சிலைவைக்க பூமி பூஜை நடத்தப்பட்ட விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தபட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறியுள்ளார்.