Published:Updated:

`அதிரும் வீடுகள்; அலறும் கர்ப்பிணிகள்!’ - கல்குவாரி கொடுமை; சிறைவைக்கப்பட்ட அதிகாரிகள்

வாலாஜாபேட்டையில் கல்குவாரிகளை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள், அரசு அலுவலர்களை அறைக்குள் அடைத்து சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த குளத்தூர் மற்றும் அனந்தலை கிராமத்தைச் சுற்றியுள்ள மலைத்தொடர்களில், புதியதாக மேலும் 10 கல்குவாரிகள் இயங்குவதற்கான டெண்டர் பணிகள் நடப்பதாகத் தெரிகிறது. இதையறிந்த அக்கிராம மக்கள், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். 

சிறை வைக்கப்பட்ட அலுவலர்கள்
சிறை வைக்கப்பட்ட அலுவலர்கள்

அதில், ``எங்கள் ஊரின் கிழக்கே புராதன சிறப்பு பெற்ற அனந்த நாதர் மலையில் பழைமையான கோயில்கள், முற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள், சமணர் படுக்கைகள், சித்தர் சமாதி, புலிக்குகை மற்றும் மூலிகை மணம் கமிழும் மஞ்சள் புற்கள், சமூகக் காடுகள் நிறைந்து இயற்கை எழில் கொஞ்சுகின்றன.

இவ்வளவு சிறப்புகளை உள்ளடக்கிய இந்த மலைத்தொடரில், ஏற்கெனவே 30 கல்குவாரிகள் இயங்குவதால் புராதன சின்னங்கள் அழிக்கப்பட்டுவருகின்றன. அனைத்துக் கல்குவாரிகளையும் உடனே மூடவேண்டும். புதிய குவாரிகளுக்கான அனுமதியை வழங்கக் கூடாது’’ என்று வலியுறுத்தியிருந்தனர்.

பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர்
பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர்

கோரிக்கையை அதிகாரிகள் காதில் வாங்கிக் கொள்ளாததால் எரிச்சலடைந்த கிராம மக்கள் இன்று காலை அனந்தலைக் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், உதவியாளர் வடிவேலுவை அலுவலகத்துக்குள்ளேயே வைத்துப் பூட்டி சிறை வைத்தனர்.

பின்னர், வாலாஜாபேட்டை-வள்ளுவம்பாக்கம் சாலையில் தனியார் பேருந்தை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்துவந்த தாசில்தார் பாலாஜி, டி.எஸ்.பி கீதா, இன்ஸ்பெக்டர் பாலுவிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். ‘‘வெடி வைப்பதால் வீடுகள் அதிர்ந்து விரிசலடைகின்றன. இரவு, பகலாக லாரிகள் செல்வதால் விபத்து ஏற்படுகிறது.

கைதுசெய்யப்படும் கிராம மக்கள்
கைதுசெய்யப்படும் கிராம மக்கள்

வெடிச் சத்தத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அலறுகிறார்கள். இதய பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் அவதியடைகிறார்கள். கல்குவாரிகளை மூடவேண்டும். புதிய கல்குவாரிகளுக்கான டெண்டரை நிறுத்தவேண்டும்’’ என்றனர். இதையடுத்து, மறியலை அவர்கள் கைவிட மறுத்ததால் 20-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைதுசெய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.