Published:Updated:

ஏக்கருக்கு 20,000; ஓய்வூதியம் 15,000; ஆட்டோவுக்கு அனுமதி! - ஊரடங்கு தளர்வால் போராட்டக்களமான திருச்சி

அரை நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள்
அரை நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள்

ஊரடங்கு தளர்வு வெளியான அடுத்தநாளே போராட்டக்களமானது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திரண்டு வந்தனர். தொடர்ந்து. அவர்கள், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும், ஓய்வூதியமாக மாதம் 5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரை நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள்
அரை நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள்

அப்போது பேசிய அய்யாக்கண்ணு, “இந்திய மக்கள் தொகையில் 120 கோடி பேரில் 85 கோடிப் பேர் விவசாயத்தை நம்பியே உள்ளார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, இந்திய மக்களுக்கு 20 லட்சம் கோடி நிவாரணம் ஒதுக்குவதாக அறிவித்தார்.

அதனையடுத்து, இந்திய விவசாயிகள், பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகு விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வழி கிடைக்கும் என நினைத்தோம். கொரோனாவுக்கு முன்பு 400 ரூபாய்க்கு விற்ற வாழைத்தார் இப்போது 50 ரூபாய்க்கு விற்கிறது.

திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் இல்லாததால் வெற்றிலை மற்றும் வாழை இலை உள்ளிட்டவை காய்ந்து கிடக்கின்றன. இது மட்டுமல்லாமல் தர்பூசணி, வெள்ளரி மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றைச் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டு சென்றாலும் மக்கள் வருகை இல்லை. இதனால், அனைத்துக் காய்கறிகளையும் ஆடுகள் சாப்பிடும் சூழல் நிலவுகிறது.

இதுமட்டுமல்லாமல், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட சூறாவளிக் காற்றில் மரங்கள் அழிந்துவிட்டன. இவற்றுக்கு நல்ல லாபகரமான விலை கிடைக்கும் என எதிர்பார்த்தோம். அதற்காக நஷ்டஈடு வழங்கப்படும் என எதிர்பார்த்தோம். நஷ்டமடைந்த விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால், மறுதினம் வெளியான நிதியமைச்சரின் அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது. மக்கள் தொகை அடிப்படையில் விவசாயத்தைச் சார்ந்தவர்களுக்கு 14 லட்சம் கோடி நிவாரணமாகக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை அரசு செய்யவில்லை. ஆனால் விவசாயிகளையும் விவசாயப் விளைபொருள்களையும் லாபகரமான விலை கொடுத்து எதுவும் இல்லாமல் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுவது விவசாயிகளைக் கடனிலேயே வைத்திருக்க உதவும்.

முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்
முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்

அதனால்தான், நிதியமைச்சர் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கும் வரை கடன் தள்ளுபடி செய்யவும், ஏக்கருக்கு 20,000 நஷ்டஈடு வழங்கவும் வேண்டும். மேலும், சிறு, குறு, பெரிய விவசாயிகள் எனும் வித்தியாசமில்லாமல், 60 வயது முடிவடைந்த விவசாயிகளுக்கு மாதம் 5,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்” என்றார்

விவசாயிகள் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோதே அங்கு, திருச்சி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் பாதுகாப்பு நலச் சங்கத்தினரும் திரண்டு வந்தனர். அவர்களும், ஊரடங்கு முடியும்வரை முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.15,000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினர்.

'வலிகளோடு போகிறோம்... திரும்ப வருவோம்!' -திருச்சியில் உருகிய வடமாநிலத் தொழிலாளர்கள்

அடுத்த சிறிது நேரத்தில், திருச்சியில் ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி வழங்கிடக் கோரி, திருச்சியைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்டோக்களுடன் ஊர்வலமாகத் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை திருச்சி மாவட்டத்தில் ஊரடங்குக்கான தளர்வு அளிக்கப்பட்டது. அடுத்தநாள் பல்வேறு சங்கத்தினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பெரும் பரபரப்புடன் காட்சியளித்தது.

அடுத்த கட்டுரைக்கு